விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ,கருணாஸ், கஜராஜ்,முனீஷ் காந்த்,ஸ்ரீஜா ரவி ,காளி வெங்கட்,லிசி ஆண்டனி, ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பெராடி, அஜய், சத்ரு மற்றும் பலர் நடித்துள்ள படம்.விஷ்ணு விஷால் விவி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார்.அவருடன் ஆர்.டி.டீம் ஒர்க் சார்பில் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்.
செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது.
விஷ்ணு விஷால் ஊர் வம்பை இழுத்துக் கொண்டு பஞ்சாயத்து என்று போக்கிரித்தனம் செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு எப்படியாவது ஒரு பெண் பார்த்து விட வேண்டும் என்று அவரது மாமா கருணாஸ் தங்கள் குடும்பத்துக்கு ஏற்ப அடக்கமான, விஷ்ணு விஷால் படித்த ஏழாவதுக்கும் குறைவான படிப்புள்ள தலை முடி அதிகம் உள்ள பெண்ணாகத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா லட்சுமி குத்துச்சண்டை வீராங்கனையாக வளர்ந்து வருகிறார் .அதனால் அவர் திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடியும் குடித்தனமாக மாற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர்கள் நச்சரிக்கிறார்கள். இந்தச் சூழலில்
அதிகம் படித்ததையும் குத்துச்சண்டை வீரர் என்பதையும் மறைத்து
சில பொய்களைக் கூறி
விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது.
அதே சமயம் கிராப் வெட்டிக் கொண்டவர் சவுரி முடி வைத்துக்கொண்டு நடித்து ஒரு வழியாகத் திருமணம் நடக்கிறது. மறைக்கப்பட்ட பொய்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழும்போது வெடிக்கும் சிக்கல்களும் முடிவும்தான் கதை.
கட்டா குஸ்தி என்பது ஒரு வகையான குத்துச்சண்டை.இது கேரளாவில் பிரசித்தம். இவ் வகை மிகவும் பாரம்பரியமும் பழமையும் நிறைந்தது. அதில் வீராங்கனையாக விளங்குகிறார் ஐஸ்வர்யா லட்சுமி . இந்தக் கதையை வைத்துக்கொண்டு நகைச்சுவை முலாம் பூசி ஒரு கலகலப்பான திரையரங்கத்துக்கான படமாக இதை மாற்றியுள்ளார்கள். குடும்பத்தினர் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் படியாக கமர்சியல் அம்சங்கள் உள்ளன.பல காட்சிகளும் கலகலப்பூட்டுகின்றன.
விஷ்ணு விஷால்தான் படத்தை தயாரித்துள்ளார். ஆனாலும் அவர் தனது கேரக்டரை பிரதானப்படுத்தாமல் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் .படம் ஒரு கதாநாயகியை முக்கியத்துவப்படுத்தும் பெண் உரிமை பேசும் படமாக மாறி உள்ளது.அந்த அளவிற்கு வாய்ப்புகளை விட்டுக் கொடுத்த விஷ்ணு விஷாலின் பெருந்தன்மையைப் பாராட்டலாம்.
ஐஸ்வர்யா லட்சுமி ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆக புகுந்து விளையாடுகிறார் .அவர் வேறு மாதிரியான நடிகையாக இதில் வெளி வருகிறார். தான் சாதாரண டூயட் பாடி கண்ணீர் சிந்தும் டெம்ப்ளேட் நாயகி அல்ல என்று இதன் மூலம் மெய்ப்பித்துக் கூறியுள்ளார்.
தனக்கு ஏற்ற மாதிரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கான இடம் நீண்ட ஆயுளைக் கொண்டதாக இருக்கும்.
விஷ்ணு விஷால் தனது பாத்திரத்துக்கு ஏற்ப அளவான நடிப்பினை வழங்கி உள்ளார் . தனது மனைவி குறித்த கனவையும் அது நிறைவேறாமல் போனதையும் காட்டும் முக பாவனைகள், சண்டைக்காட்சிகளில் ஆவேசம் என அவர் தனக்கான பணியைச் சிறப்பாக செய்துள்ளார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாஸுக்கு ஒரு அழுத்தமான பாத்திரம். வழக்கம் போல அசட்டுத்தனமான காமெடி செய்யாமல் அழுத்தமான பாத்திரத்தில் நாயகனின் மாமனாக வந்து உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் .காளி வெங்கட் வக்கீல் என்ற போர்வையில் திருமண தரகராக வருகிறார். அவரது நடிப்பும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
படத்தில் இந்த குத்துச்சண்டை காட்சிகள் தத்ரூபமாகவும் பரபரப்பாகவும் இருக்கின்றன.கேரளாவின் பாலக்காடு தான் கதாநாயகியின் ஊர் என்பதால் கேரளா சம்பந்தப்பட்ட காட்சிகளும் திருமணக் காட்சிகளும் வண்ணமயமாய் கண்களை நிறைக்கின்றன. இருக்கின்றன ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப ஒலிக்கும் ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் பின்னணியும் கூட படத்தை மேம்படுத்துகிறது.
தன் மனைவி தன்னைவிட படித்தவராகவும் திறமைசாலியாகவும் மதிப்பில் உயர்ந்தவராகவும் இருந்தால் கணவருக்கு பிடிப்பதில்லை என்ற உளவியல் தாழ்வுணர்ச்சியை எடுத்துக்கொண்டு நல்லதொரு குடும்பக் கதையாக மாற்றி சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார்கள்.அந்த வகையில் இந்த படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு முழு நீள கலகலப்பான படமாக இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான திருப்தியைத் தருகிற படம்.