தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிற உதயநிதிக்கு
சென்னையில் தங்க வீடு கிடைக்காததால்
ஐடி ஊழியரான பிரசன்னாவுடன் சேர்ந்து அறை நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் இன்னொரு நண்பரான சதீஸுடன் இணைந்து மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள்.
அப்போது பூமிகா நிதானம் இல்லாமல் கார் ஓட்டி வருகிறார். அதை மோதி நிறுத்துவதை உதயநிதி பார்க்கிறார்.பூமிகா கேட்டுக் கொண்டதன் பேரில் பூமிகாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு அந்தக் காரை தன் அறைக்குக் கொண்டு வருகிறார் உதயநிதி.
மறுநாள் காலை, அந்தக் காரில் பார்த்தால் பூமிகா பிணமாகக் கிடக்கிறார். அவருக்கு என்ன ஆயிற்று? அவர் ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்?எதிர்பாராத அந்த கொலைப் பழியிலிருந்து உதயநிதி மீண்டாரா, இவரைச் சிக்க வைத்தது யார் என எழுகிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது தான் கண்ணை நம்பாதே திரைப்படம்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.
கொலைப்ழி பதற்றம் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயம் எல்லாவற்றையும் அநாயாசமான முகபாவனை மூலம் சாதாரணமாக்கி விடுகிறார் உதயநிதி. இன்னும் அவரிடம் மேம்பட்ட நடிப்பை இயக்குநர் வாங்கி இருக்கலாம்.
ஆனால் பசுத்தோல் போர்த்திய புலி போல் கமுக்கமான எதிர்மறை கேரக்டரில் சோபிக்கிறார் பிரசன்னா.அவரின் முகபாவனை மூலம் தான் கதையில் நிகழும் பதற்றம் நமக்கு ஏற்படுகிறது.
ஶ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா, மாரிமுத்து என நடிப்பில் ஸ்கோர் செய்யும் நடிகர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இரண்டாம் பாதியைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
இதில் ஶ்ரீகாந்தும், வசுந்தராவும் மட்டும் தனித்துத் தெரிகிறார்கள். கதாநாயகி ஆத்மிகா வழக்கம்போன்ற ஆக்சன் த்ரில்லர் படங்களுக்கு ஏற்ற ஷோகேஸ் பொம்மையாக வருகிறார்.
முதற்பாதியில் உதயநிதிக்கும் ஆத்மிகாவிற்கும் காதல் காட்சிகள், காதல் பாடல், கலகலப்பு, காதல் விவகாரம் தெரிந்ததால் ஆத்மிகாவின் வீட்டில் பரபரப்பு, சதீஷின் காமெடி என கதை நகர்கிறது. பூமிகா வந்த பின், திரைக்கதையில் வேகம் கூடுகிறது.
ஆனால், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான திரைக்கதையில் மேலும் நம்பகத்தன்மை கூடியிருக்க வேண்டும்.உதயநிதி பிரசன்னா செல்லும் இடங்களுக்கு, முன்பே அந்த கேமரா நபர் செல்வது எப்படி? இது போன்ற லாஜிக் மீறல்கள் பல உண்டு.
டபுள் ஆக்ஷன் என இறுதியில் ட்விஸ்ட் வைக்கிறார்கள்.மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியைச் சிறிதாகக் கதையில் சேர்த்திருப்பது பழகிய பார்முலா.
பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதற்கு, ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பில் சான் லோகேஷ் தன்னால் முடிந்த இறுக்கத்தைக் காட்டியுள்ளார்.
திரைக்கதை நழுவும் இடங்களில், தன் பின்னணி இசையால் சரி செய்து சமன்செய்திருக்கிறார் சிந்து குமார்.
பிரம்மாண்டங்கள் பெரும் பொருள் செலவுகள் அனாவசியமான லொகேஷன் அதீதபயணங்கள் என்று இல்லையே என எதையும் யோசிக்க விடாமல் இரவில் நடக்கும் கதையைப் படமாக்கிய விதத்தில் மு. மாறன் வெற்றி பெற்றுள்ளார்.
நம்பகத்தன்மை மீறல் சமாச்சாரங்களில் நகாசு வேலை செய்திருந்தால் படம் இன்னும் வேகம் கூடி ரசிக்க வைக்கும் திரில்லராக மேம்பட்டிருக்கும்.