அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் ‘குற்றம்23 இப்படம் விறுவிறு ஆக்ஷன் த்ரில்லராக இருந்தாலும் வணிக மசாலாத்தனம் இல்லாமல் அழுத்தமான ஒரு கதையைக் கொண்டதாக இருந்தது. காரணம் அது ‘ க்ரைம் கதை மன்னன்’ எனப்புகழ் பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை வைத்து உருவாகி இருந்தது .
1800 நாவல்கள் எழுதி உலக சாதனை படைத்துள்ளவர் ராஜேஷ் குமார். ஆனால் ஒரே ஒரு படம் ‘குற்றம் 23’ என்கிற சினிமா வெற்றியால் அவருக்கு நேரிலும் போனிலும் சமூக வலை தளங்களிலும் வாழ்த்துகளாகக் குவிந்து வருகின்றன. அதுதான் சினிமாவின் மாயம். மகிழ்ச்சிக் கதகதப்பில் இருக்கும் அவரிடம் பேசியது போது…!
‘குற்றம் 23’ படத்தின் வெற்றியை ஓர் எழுத்தாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
”மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் என் கதைக்கான அங்கீகாரமும் வெற்றியும் முன்பே எப்போதோ வந்திருக்க வேண்டியது. ஆனால் சற்று தாமதமாகக் கிடைத்து இருக்கிறது அவ்வளவுதான். இது பற்றி எனக்குள் ஆதங்கமுண்டு, ஆனால் அதற்காக வருத்தப் பட்டதில்லை. காரணம் கவலைப் பட்டு நேரத்தை வீணடிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் இருந்ததில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்திருக்கிறேன்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் அறிவழகன் என் வாசகர். என் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். என் கதையை படமாக்குவது என்பதில் தீவிரமாக இருந்தார். நன்றாகவே படத்தை உருவாக்கி இருந்தார். படத்துக்கு வெற்றியும் கிடைத்து இருக்கிறது..குறைசொல்ல முடியாத ஒரு படம் என்ற் பெயர் ஊடகங்களில் கிடைத்துள்ளது.
‘குற்றம் 23’ படத்துக்கான கதை உருவானது எப்படி?
“என் கதையைப் படமாக்குவது பற்றி அறிவழகள் கேட்ட போது நான்அவரிடம் பத்துக் கதைகளைக் கொடுத்தேன். எது பிடிக்கிறதோ சொல்லுங்கள் என்றேன். எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து. எல்லாமே சினிமாவாக எடுக்கும் கதைகள்தான் அதில் இதைப் படமாக்கலாம் என்று அவர் தேர்ந்தெடுத்த கதைதான் ‘குற்றம்23’. இந்தக் கதையின் பெயர் ‘எண்ணி எட்டே நாட்கள்’ என்பதுதான். இதுதான் கதை என்று முடிவானபின் அறிவழகனுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டேன் இதற்காகவே அவர் கோவை வந்து 15 நாட்கள் தங்கி முழு வடிவிலான திரைக்தையுடன் தான் சென்னை வந்தார்.
அந்தக் கதையில் உள்ளதை விட சிலகாட்சிகளும் வேறு சிலவிஷயங்களும் படத்துக்காகச் சேர்க்கப் பட்டன. இருவரும் கலந்து பேசி எப்படி ரசித்து காட்சிகளை உருவாக்கினோமோ அதே போலவே அழகாகப் படமாக்கியிருந்தார். சினிமாவில் சொன்னபடி எடுப்பதுதான் கடினம். அதை அறிவழகன் செய்திருந்தார்.செதுக்கிச் செதுக்கிக் காட்சிகளை உருவாக்கியிருந்தார். நிறுத்தி நிதானமாக படத்தை எடுத்தார்.
இதன் திரைக்கதை வடிவம் நிறைவு பெற்றதும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை வந்தது. அதை அவர் காப்பாற்றிவிட்டார். படப்பிடிப்பு நடந்த போது என்னை வந்து பார்க்குமாறு அழைப்பார். நான் போனதே இல்லை .பாடல் வெளியீடு, முன் திரையீட்டுக் காட்சி எல்லாவற்றுக்கும் அழைத்தார் நான் செல்லவே இல்லை.
அந்த மெடிக்கல் டெர்ம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால் மட்டும் நான் அவ்வப் போது தெளிவு படுத்துவேன். நான் படப்பிடிப்புக்கு செல்லவில்லையே தவிர தினசரி என்ன நடக்கிறது என்று என்னிடம் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்.
வெளிவரும் முன்பே படத்தைப் பார்க்கவேண்டும் என்று கூட நினைக்கவில்லையா?
எனக்கு அந்த ஆவலோ பரபரப்போ பதற்றமோ இல்லை ஏனென்றால் அந்த அளவுக்கு அறிவழகன் நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருந்தார் .அது போலவே வந்திருந்த ட்ரெய்லர் ,பாடல்கள் எல்லாமே எனக்குத் திருப்தியாக இருந்தன.நாயகன் அருண்விஜய் உள்பட நடித்தவர்கள் எல்லாருமே பாத்திரமறிந்து மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.
இதன் மூலம் மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப் படுகிறதா?
மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு என்றெல்லாம் சொல்ல முடியாது.அப்படிச் சொல்ல வரவில்லை நான். மருத்துவர் தொழில் புனிதமானது. அதில் களங்கம் வந்து விடக் கூடாது என்று நினைப்பவன்நான். மக்கள் அவர்களைக் கடவுளாகப் பார்க்கிறார்கள்.
எனக்குப் பல மருத்துவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.
இதுமாதிரியான செயற்கைக் கருவூட்டல் விஷயத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் இப்படி நிகழ்ந்து இருக்கின்றன. அது ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நம் கலாச்சாரத்துக்கு விரோதமானது. சிலரின் பணத்தாசையால் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன.வேறு எங்கும் இப்படி நிகழக்கூடாது என்கிற ஆதங்கமும் கவலையுமே இக்கதை உருவாகக் காரணம் .
தாய்மையில் க்ரைம் வரக்கூடாது ,தாய்மை என்பது தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கதையானது. இது பெண்களுக்குப் பிடித்துள்ளது. அதனால்தான் இன்று பெண்கள் குடும்பமாக வந்து பாராட்டும் ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கிறது.
படமாகத் திரையில் பார்த்த போது ?
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் என் வாசகர்களுடன் கோவை அர்ச்சனா திரையரங்கில் படம் பார்த்தேன் .எனக்கு தமிழகமெங்கும் 130 வாசகர் பேரவைகள் உள்ளன. அவற்றிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிறைய பேர் என்னுடன் படம் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடன் படம் பார்த்தது தனியான பரவசமாக இருந்தது . பெண் வாசகிகள் படம் பார்த்துவிட்டு சில சந்தேகங்களை கேட்டார்கள் நான் தெளிவு படுத்தினேன்.
இதற்கு முன் நீங்கள் எழுதிய ‘சண்ட மாருதம்’ படத்தின்அனுபவம் எப்படி ?
ஏராளமான கதைகள் உங்களிடம் இருக்கும் போது நீங்கள் ஏன் திரைக்கான ஒரு கதாசிரியராக வெளியே வரவில்லை? வளரவில்லை?
உங்கள் கதைகள், அவற்றில் வரும் சம்பவங்கள் பல படங்களில் காட்சிகளாக வந்து இருக்கின்றன. அப்போது உங்கள் மனநிலை..?
பொதுவாகவே சினிமாவில் நாவல்களைப் படமாக்கும் முயற்சியில் தயக்கம் காட்டுவது ஏன்?கதை, திரைக்கதை, வசனம் ,இயக்கம் என்று எல்லாமும் தான் செய்ததாக நூறறுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்கள் .. கதையை எழுதிய எழுத்தாளருக்கு ஐம்பது மார்க் போய் விடுமே என்று பயப்படுகிறார்கள். இதற்குத் தாழ்வு மனப்பான்மைதான் காரணம். அதனால் எவ்வளவோ கதைகள் கொட்டிக் கிடக்கும் போது வந்த கதைகளையே மாற்றி மாற்றி எடுத்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் உங்களை பலரும் ஏமாற்றினார்கள் என்று ஒரு பத்திரிகையில் தொடர் ஒன்று கூட எழுதினீர்கள். அந்தக் கசப்பு இன்னும் இருக்கிறதா?
இது பற்றி குமுதத்தில் ’24 கேரட் துரோகம் ‘ என்று தொடராக எழுதினேன். அது 1990 -களின் நிலைமை. சினிமாவின் என் அனுபவம் என்று வருத்தம் கோபம் ஏமாற்றம் என்றுதான் இது வரை எனக்கு இருந்தது. .காரணம் சினிமாவில் நான் சரியான ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளாததுதான்.
இப்போது நிலைமை மாறியிருப்பதாக உணர்கிறேன். சினிமாவில் எல்லாரும் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. சிலர் அப்படி இருக்கிறார்கள.
‘குற்றம் 23 ‘வந்த பிறகு நாலைந்து நிறுவனங்களிலிருந்து கதை கேட்டு அழைப்புகள் வந்துள்ளன. முன்பெல்லாம் இப்படி நிறையபேர் பேசுவார்கள். அவர்களின் நம்பகத் தன்மை தெரியாது அல்லவா?
பிரபுதேவாவுடன் இணைந்து உருவாகும் படம் எப்போது தொடங்கும்?
என் ‘வெல்வெட் குற்றங்கள் ‘கதை.அவருக்குப் பிடித்துப்போய் அதை வெகுவாகப் பாராட்டினார் அது விமானக் கடத்தல் சம்பந்தப்பட்ட கதை. அதை எடுத்தால் பிரமாண்டமாக எடுக்க வேண்டும். அதற்கான தயாரிப்பாளர் அமைந்து விட்டால் தொடங்கி விடலாம் என்று கூறியுள்ளார். இயக்குநர் பார்த்திபனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீங்கள் எப்படிப்பட்ட படங்களின் ரசிகர்?
நான் சினிமா பார்ப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதில்லை. கல்லூரி நாட்களில் நிறைய பார்த்தேன். எழுத ஆரம்பித்தபின் பார்ப்பதில்லை. .
‘தசாவதாரம்’ போல சில குறிப்பிட்ட படங்களை மட்டும் பார்ப்பேன். சென்ற 2016-ல் சுமார் 200 படங்களை வெளியாகியுள்ளன. அவற்றில் நான் பார்த்தது நாலே படங்கள் தான் ‘கபாலி’ பிடித்தது. மலேசியப் பின்னணியில் காட்சியும் கதையும் சொன்ன விதம் பிடித்தது. ‘அதே கண்கள்’ பிடித்தது.
அண்மையில் வந்த ‘துருவங்கள் பதினாறு’ மிகவும் பிடித்திருந்தது. அது மாதிரி கதைகள் நானும் எழுதியிருக்கிறேன்.
ஒரு க்ரைம் கதையை எவ்வளவு அழகாக நேர்த்தியாக திரைக்கதையில் கொண்டு வரமுடியும் என்று கார்த்திக் நரேன் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
சற்று பின்னோக்கிப் பாருங்கள்.இத்தனை ஆண்டுகளாக எழுதி வருகிறீர்கள்.. அலுப்போ சலிப்போ ஏற்பட வில்லையா?
நான் 1980 முதல் சுமார் 40 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஏதோ இதை ஒரு வேலையாகவோ கடமையாகவோ நினைத்து இதைச் செய்யவில்லை. விருப்பம், ஆர்வம் ,ஈடுபாடு கொண்டு செய்கிறேன். அதனால் சலிப்போ சோர்வோ ஏற்படுவதில்லை.
இதுவரை 1800 நாவல்கள், 200 சிறுகதைகள், எழுதியிருக்கிறேன். தொடர்கதைகள் 500 இருக்கும். க்ரைம் நாவல்கள் 1984-ல் ஆரம்பித்தேன். பாக்கெட் நாவல் 2 ரூபாய் விலையில் ஆரம்பித்தது 40 ரூபாய் ஆகிறவரை33 ஆண்டுகளாக ஒரே பத்திரிகைக்கு ,ஒரே,நிறுவனத்துக்கு எழுதி வருகிறேன். எழுதுவதை அர்ப்பணிப்போடு தரத்தோடு எழுதினால் நிலைத்து நிற்கலாம் இன்றும் தேடல்கள் எனக்குள் இருக்கின்றன. அதனால் போரடிப்பதில்லை.
நம்மைச்சுற்றி ஏராளமான கதைக்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாம்தான் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. தினசரி செய்தித் தாள்களில் எவ்வளவோ க்ரைம் செய்திகள் வருகின்றன. அதன் அடிப்படையில் தான் நான் எழுதுகிறேன்.. சுவாதி கொலை பின்னணி பற்றி 1.+1=0 என்று ஆன்லைனில் தொடராக எழுதி வருகிறேன்.
உற்சாகமாகக் கூறுகிற இந்த எழுத்து எந்திரன் நம்மை வியக்க வைக்கிறார்.