கனடா நாட்டில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையாகும்.
அரிய தமிழ் நூல்களைப் பதிப்பிப்பது, தமிழ் ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதை ஊக்கப்படுத்துவது, மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவது ,கனடிய நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ்நூல்கள் அளிப்பது போன்ற இதன் சேவைகள் பலவகைப்பட்டதாகும்.அதுமட்டுமல்ல வாழ்நாள் சாதனை செய்த தமிழ் ஆளுமைகளுக்கும்
தமிழுக்குப் பல துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்தும் வருகிறது.
ஆளுமைகளின் வாழ்நாள் சாதனையை அடையாளப்படுத்தி இந்த அமைப்பு வழங்கும் ‘இயல் விருது ‘ சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன்,ஐராவதம் மகாதேவன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன் ,ஜெயமோகன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம், சு.வெங்கடேசன் உள்ளிட்ட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர்களில் பலர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்.
சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருது உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் கெளரவம் மிக்கதாகவும் பெருமைக்குரியதாகவும் மதிக்கப்படுகிறது.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு வாழ்நாள் சாதனை யாளர்களுக்கு வழங்கும் இயல் விருதைப் போல, தமிழில் பல்வேறு துறையில் முத்திரை பதித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி பெருமைப்படுத்துகிறது.
இவ்விருதுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழர்களில் தகுதியான ஐந்து பேர் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மதிப்புமிக்க விருதுக் கேடயமும் 500 கனடியன் டாலர் பரிசுத்தொகையும் விருதுடன் வழங்கப்படும்.
அவ்வகையில் 2021ஆம்ஆண்டு விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து தமிழர்கள் பற்றிய குறிப்புகள் வருமாறு:
கவிதை விருது பெறும் பெருந்தேவி
கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தமிழ் நவீன கவிஞராகவும், எழுத்தாளராகவும் 1990 களிலிருந்து இயங்கி வருகிறார். இதுவரை இவருடைய 9 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவர் பரிசோதனை ரீதியான கவிதை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தனித்துவமான கவிமொழி கொண்ட இவர், கவிஞர்களில் தனித்து தெரிகிறார். இவரது ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. இவர் தற்சமயம் நியூயார்க் மாகாண சியானா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
புனைவு விருது : பா.கண்மணி
தன் ‘இடபம் ‘ என்கிற நாவல் மூலம் பரவலாக அறியப்பட்ட கண்மணி புனைவு விருது பெறுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வங்கிப் படிப்பை முடித்து வங்கியில் வேலை பார்த்தவர். பின்னர் விருப்ப ஓய்வு பெற்றபின் தீவிர வாசிப்பை மேற்கொண்டவர். சிறுகதைகளும், குறுநாவலும் எழுதியுள்ளார். கால்நூற்றாண்டு காலமாக பங்குச்சந்தை வணிக அனுபவமும், கூர்மையான அவதானிப்பும் ’இடபம்’ என்ற நாவலை எழுதத் தூண்டியது. இதற்கு முன் எவரும் சொல்லத் துணியாத துறையில் இறங்கி புதிய சொல்முறையில் உருவாக்கிய இந்த நாவல் இலக்கிய மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. அதற்காக இவ்விருதைப் பெறுகிறார்.
இலக்கிய சாதனை சிறப்பு விருது:பி.ஜெ.திலீப்குமார்
இலக்கிய சாதனைக்கான சிறப்பு விருது பெறும் பி.ஜெ. திலீப்குமார், கனடாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பலம் வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான ‘தாய்வீடு’ மாத இதழின் முதன்மை ஆசிரியர். இவர் பல அரங்கங்களில் தன் நடிப்பாற்றலால் பெரிதும் மதிக்கப்பட்ட நடிகராகப் பெயர் பெற்றவர் . உலக இதழ்களின் தரத்துக்கு நிகராகத் தாய்வீடு இதழை வடிவநேர்த்தியிலும், உள்ளடக்கத்திலும் சிறப்பாக அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருபவர். இதழியலோடு மட்டும் நின்றுவிடாமல் கடந்த காலங்களில் ஆண்டுதோறும் இவர் நடத்திய அரங்கியல் விழாக்களும் பிரபலமானவை. கருத்தரங்குகள், சிறுகதை, கவிதைப் போட்டிகள் மூலமும் தமிழ் வளர்ச்சிக்காக இவர் பாடுபட்டு வருகிறார்.
பிறமொழி இலக்கிய விருது:லோகதாசன் தர்மதுரை
பிறமொழி இலக்கிய விருது பெறும் லோகதாசன் (தாஸ்) தர்மதுரை கணினி தகவல் அமைப்புத் துறையில் கனடாவில் பணி புரிந்து வருபவர். இவர் அடையாளம் மிக்கதோர் எழுத்தாளர். போர்ச்சூழல் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் அலைந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் அனுபவங்களை ‘The Sadness of Geography ‘என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதினார். இவருடைய ‘நிலவியலின் துயரம்’ என்ற அந்த நூலுக்கு உலகம் முழுவதும் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவ்வகையில் பிறமொழி இலக்கியம் சார்ந்த பிரிவில் இவர் விருது பெறுகிறார்.
தமிழ்த் தொண்டு விருது:வீரகத்தி சுதர்ஷன்
தமிழ்த் தொண்டு விருது பெறும் வீரகத்தி சுதர்ஷன்இலங்கையைச் சேர்ந்தவர்.இவர் இலங்கையில் வெல்வத்தை, நெல்லியடி, கரவெட்டியில் பிறந்தார். கல்வி மாணி, கல்வி முதுமாணி பட்டங்களைப் பெற்று ஆசிரியப் பணியாற்றி, தற்போது ஹாட்லி கல்லூரி துணைஅதிபராகப் பணி புரிகிறார்.ஆரம்பத்திலிருந்தே இவர் தமிழ் மீதும் தமிழ்க் கல்வி மீதும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினார். மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதிலும் அவர்கள் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறைகொண்டு உள்ளார்ந்த கடமையுணர்வுடன் இவர் சேவை புரிந்தவர். அடையாளம் வெளியே தெரியாத கல்விச் சேவைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
‘கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது ‘ விழா வழக்கமாக
நேரடியாக விருந்தினர்களை அழைத்து கனடாவில் டொரன்டோ நகரில் நடைபெறும் .சமீபகால நோய்த்தொற்றுத் தாக்கத்தால் இவ்வாண்டு இணையவழியில் நடைபெறுகிறது.
வருகிற டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்தியா/ இலங்கை நேரத்தின்படி இரவு 8.30 மணிக்கு (கனடா/ அமெரிக்க நேரத்தின் படி காலை 10.00 மணிக்கு) இணையம் மூலம் மெய்நிகர் விழாவாக நடைபெறுகிறது.
விழாவில் ஜூம் வழியே இணைய:
ID 811 4968 3360 Password 078782 உலகத் தமிழர் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.