கன்னடத் திரை உலகில் இருந்து ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் கவனம் பெற்ற நிலையில், அதே பாணிலான படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ‘கப்ஜா’.உபேந்திரா ஸ்ரேயா நடிப்பில் சந்துரு இயக்கத்தில் ரவிபர்சூர் இசையில் இரண்டு மணி நேரம் 16 நிமிடங்கள் கொண்ட படம்தான் இந்த ‘கப்ஜா’ .
‘கேஜிஎஃப்’ படத்தின் வெற்றியைப் பார்த்து அதே போன்று பிரம்மாண்ட படம் உருவாக்க நினைப்பது தவறில்லை. ஆனால் அதே சாயலில் உருவாக்க நினைப்பதுதான் தவறு என்று கப்ஜா படத்தைப் பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது.
உபேந்திரா இந்திய விமானப்படை பயிற்சி வீரர்.
அவரது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடியவர்.
கர்நாடகாவில் அமரபுரா என்கிற உபேந்திராவின் ஊரில் அண்ணன், அம்மா என குடும்பத்தினர் வசிக்கிறார்கள். ஆனால் அந்த ஊரை ஒரு ரவுடி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அந்த ரவுடியால் உபேந்திராவின் அண்ணன் கொலையாகிறார்.
பழிக்குப் பழிவாங்க உபேந்திரா அந்த ரவுடியைப் போட்டுத் தள்ளுகிறார். அதன் பின் மெல்ல மெல்ல உபேந்திராவும் வன்முறைப் பாதைக்குக் திசை மாறி தாதாவாக உருவெடுக்கிறார்.அவரைப் பிடிக்க மாநில அரசு போலீஸ், மத்திய அரசு துணை ராணுவப் படை முற்றுகையிடும் அளவிற்கு நிலவரம் கலவரம் ஆகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் கப்ஜா படத்தின் கதை.
ஒரு பிளாஷ்பேக்குடன் கதை தொடங்குகிறது .அதாவது கேஜிஎப் பாணியில் , உபேந்திரா கதையை சுதீப் சொல்ல ஆரம்பிக்கிறார்.முன் கதை என்னவோ சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதற்குப் பிறகு கதை பல திசைகளில் சிறகடித்துப் பறக்கிறது. நம் கவனமும் சிதறடிக்கப்படுகிறது.வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகக் கடத்தியது வரை கதை போகிறது.
உபேந்திராவின் தோற்றமும் உயரமும் உடல் மொழியும் ஆர்கா என்கிற அந்தக் கதாபாத்திரத்தில் அவரை கம்பீரமாகத் தோன்றச் செய்கிறது. அவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.அவரது காதலியாக ஸ்ரேயா வருகிறார். ராஜ வம்சத்து வாரிசாக அழகாக வந்து நடனமாடி ரசிகர்களை ஈர்க்கிறார். இச்சா சுதீப்பும் ,சஸ்பென்ஸ் பாத்திரமேற்றுள்ள சிவராஜ்குமாரும்அவரவர் பங்கில் குறையில்லாமல் செய்துள்ளார்கள்.படத்தில் விரவிக் கிடைக்கும் பிரம்மாண்டமும் அதை ஏ .ஜே . ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள விதமும் ரசிக்க வைக்கின்றன.


ஏகப்பட்ட லாஜிக் மீறல்களையும் தாண்டி வன்முறையையே அதிகமாகக் காட்டியுள்ளார்கள்.
கேஜி எஃப் படத்தின் இசையமைப்பாளர்தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். எனவே பின்னணியில் அதே பாணி தெரிகிறது.
கப்ஜா கேஜிஎஃப் பாதிப்பில் ஒரு படம்.தாதா பழிக்கு பழி சூத்திரத்தில் இன்னொரு படம்.