கோலிசோடா புகழ் ஸ்ரீராமுடன் சிறுவனாக திரைக்கு வந்த யுவன் ஹீரோவாகிற படம் ‘கமரகட்டு’. இவர்களின் வயதுக்கு ஏற்ப பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவே யுவனும், ஸ்ரீராமும் வருகிறார்கள். இவர்களின் ஜோடிகளாக ரக்க்ஷா ராஜும், மனீஷா ஜித்தும் நடிக்கிறார்கள்.
தமிழ்சினிமாவில் கலை இயக்குநராக அறியப்பட்ட (எஸ்.ஏ.சி.ராம்கி) ராம்கி ராமகிருஷ்ணன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி கலை இயக்கத்தையும் மேற்கொண்டிருக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியது.
“நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. கலை இயக்குநராகப் பல படங்களும், இயக்குநராக ஒரு படமும் முடித்த நிலையில் அடுத்த வாய்புக்காக இங்கே பல ஆண்டுகள் காத்திருந்தேன். என்னதான் திறமை இருந்தாலும் சினிமாவில் எப்போது நல்ல வாய்ப்பு அமையவேண்டுமோ அப்போதுதான் அமையும். அப்படி எனக்கு இந்த ‘கமரகட்டு’ வாய்ப்பு அமைந்தது.
சினிமாவில் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட வெற்றிபெற்ற டி.ராஜேந்தரைப் பார்த்து, அவர் எப்படி இத்தனைப் பொறுப்புகளில் மின்னுகிறார் என்று அவரை கவனித்து ஆராய்ந்து என் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். அப்படித்தான் இந்தப் படத்தில் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன்.
முக்கியமாகப் பாடல்கள். நான் எழுதிய பாடல்கள் நன்றாக வருமா எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனால், பைசல் இசையில் பாடல்களைக் கேட்டபோது அற்புதமாக வந்திருக்கின்ற உண்மை தெரிந்து நம்பிக்கை வந்துவிட்டது. இதில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ், ஹரி தினேஷ் நடனங்கள் அமைத்த சிவாஜி, விஜய் சிவசங்கர் எல்லோரிடமும் குறுகிய காலத்தில் நிறைவாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு அப்படியே வேலை வாங்கியிருக்கிறேன்.
நல்ல காதலுக்கு தெய்வமும் துணையாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். தெய்வம் சித்தர் மூலம் உதவி செய்கிறது. அதற்காக திருவண்ணாமலையில் முக்கிய காட்சிகளை எடுத்திருக்கிறோம்.
குறிப்பாக திருவண்ணாமலை தீபத்தை சிறப்பு அனுமதி வாங்கி இதுவரை பார்க்காத விதத்தில், பல நிலைகளில் படமாக்கி இருப்பது சிறப்பான விஷயமாக இருக்கும். இன்பம் வரும்போது வாழ்க்கையைப் பற்றி அலட்டிக்கொள்ளாத நாம், துன்பம் வரும்போது மட்டும் அதைபற்றி சிந்திப்போம். இந்தப்படத்தில் அப்படி வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க நிறைய விஷயங்களை வைத்திருக்கிறேன்..!”என்றார்.அட தத்துவ முத்தாக உள்ளதே.!!