நட்டி நடராஜ், சிங்கம்புலி , ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, கராத்தே கார்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, வழக்கு எண் முத்துராமன், வெற்றிவேல் ராஜன், டி எஸ் ஆர் , கோதண்டன் நடித்துள்ளனர். ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். எம் ஆர் எம் ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் என் பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார் .சதீஸ் செல்வம் இசையமைத்துள்ளார்.மங்காத்தா மூவிஸ் சார்பில் ரவி தயாரித்துள்ளார்.
பல்வேறு போலிச் சாமியார்களை நாம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்கு எதிரே போலிச் சாமியாராக இருந்து கைலாச தேசம் என்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தாவையும் பார்த்து இருக்கிறோம். அவரது பாதிப்பில் உருவாகி உள்ளது இந்தக் கதை என்று கூறலாம்.சாமியார்கள் என்றால் மோசடிகள், பெண்கள், லீலைகள் என்பது சகஜம். அந்த பின்னணியில் இந்தக் கதை உருவாகியுள்ளது.
சதுரங்க வேட்டை படத்தின் நாயகன் போலவே இதிலும் நட்டி புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்து பணம் பறித்து வருகிறார்.பல கோடி மதிப்பிலான கடத்தல் வைரம் ஒன்றைக் கைப்பற்றிப் பணம் பார்க்க நினைக்கிறார்.அதில் ஒரு சிக்கல் வருகிறது.
அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் கோவில் ஒன்றை அரசியல்வாதி கட்டிவிடுகிறார். நட்டி சாமியார் வேடம் போட்டுக்கொண்டு கோயிலுக்குள் நுழைகிறார்.கோயிலையே ஆசிரமமாக மாற்றிக்கொண்டு தனது தேடுதலைத் தொடர்கிறார். அந்த சாமியாரின் மகிமை அறிந்து கூட்டம் கூடுகிறது. குறிப்பாக பெண்கள் அதிகம் வருகிறார்கள். காம லீலைகளும் தொடர்கின்றன.இந்நிலையில் அந்த வைரத்தை நட்டி எடுத்தாரா இல்லையா என்பதே மீதிக் கதை.
நட்டியைப் பொறுத்தவரை அவர் நேர்நிலைப் பாத்திரத்தில் நடிக்கிறாரா எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்கிறாரா என்று கணிக்க முடியாத முகத்தோற்றம் அவருக்கு உண்டு. படத்தில் சாமியார் அறிவானந்தவாக வரும் அவருக்கு அந்தப் பாத்திரம் சரியாகவே பொருந்துகிறது.படம் முழுக்க பேசிக் கொண்டே இருந்தாலும் அவர் ஒரு போலிச் சாமியாராக நம்ப வைக்கிறார்.அவர் அனாசமாக ப பேசும் அர்த்தம் தெரியாத அந்த மொழி ஆச்சரியப்படுத்துகிறது.சிரிப்பையும் வரவழைக்கிறது.
நட்டியுடன் மற்றொரு நாயகன் போல் வரும் முகேஷ் ரவி,ஒரு கதாநாயகனுக்கு உரிய தோற்றத்தோடுகிறார்.அவருக்கு நடிப்பு வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவு.அடுத்தடுத்த படத்தில் கிடைக்கும் என்று நம்பலாம்.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி , ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளில் வணிக கச்சாப்பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், ஜாவா சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டணி நகைச்சுவை என்கிற பெயரில் அசட்டுத்தனங்களால் பல இடங்களில் நெளிய வைக்கிறார்கள்.சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.அவர்களை மேலும் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம்.குறிப்பாக ஜாவா சுந்தரேசன் – கோதண்டன் வருகிற பாஷை மொழிபெயர்ப்புக் காட்சிகள் சரியான சிரிப்பு ரகம்.மொழிபெயர்ப்பில் ஜாவா சுந்தரேசன் காட்டும் அந்த சரளம் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ், இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் ஆகியோர் இயக்குநர் விரும்பிய படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.பட்ஜெட்டை தாண்டிய வகையில் ரிச்சாகத் தெரிகிறது ஒளிப்பதிவு.
எழுதி இயக்கியிருக்கும் ராஜநாதன் பெரியசாமி, போலி சாமியாரின் ஆசிரமம் காம லீலைகள், நகைச்சுவை என்று சிரிக்க வைக்க முயன்றுள்ளார். காட்சிகளை கலர்புல்லாகக் காட்ட முயன்றுள்ள ஆர்வத்தை நகைச்சுவைப் பகுதிகளில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பட்ஜெட் பலவீனத்தால் பல படங்களை நினைத்தபடி உருவாக்க முடிவதில்லை என்று வருத்தப்படுவதுண்டு. ஆனால் இதில் தயாரிப்பாளர் நன்றாகவே செலவு செய்துள்ளார். ஆனால் கதையைத்தான் நம்பவும் முடியவில்
லை.நம்ப முடியாதவற்றை சொல்லும்போது கிண்டலாக கம்பி கட்ன கதை என்று சொல்லப்படுவதுண்டு.
தலைப்பே அப்படித்தான் ,எனவே லாஜிக் பார்க்க வேண்டாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
இந்தப் படத்தில் நம்பகத்தன்மை எதுவும் இல்லாமல் நகைச்சுவை என்ற பெயரில் அதை கடக்க வேண்டும் என்று எடுத்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘கம்பி கட்ன கதை’ பலவீனமான கட்டுக் கம்பியால் வணிகப்பட ரசிகர்கள் ஓரளவு சிரித்து விட்டு வரலாம்.


