வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு திருமூலா என்று ‘கருமூலம் கண்ட திருமூலர்’ தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை இதோ!
பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் – மந்திரம் – உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.சிவப்பொருளை உள்ளீடாகக் கொண்டு, உறுதிப்பொருளுரைக்கும் மெய்யாற்றுப்படை இதுவென்று சைவத் தமிழர்களால் பேசப்படுவது; தலைமுறைகளால் பேணப்படுவது திருமந்திரம்.
சமய மறுப்பாளரும் இதனைச் சமயநூலென்று கருதவியலாது. நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய திருக்கோயில்கள் கண்டவிடத்து, சிற்பக் கலைக்குச் செழுமை சேர்த்த இனத்தார் பெருமை இதுவென்று கடவுள் மறுப்பாளரும் களிகூருமாறுபோல, திருமந்திரத்தின் சிவப்பொருள் கழித்தும் இது தமிழர் தத்துவ சாரத்தின் தனிப்பனுவல் என்று தடந்தோள் விரியலாம்.
இது அறமாக விளங்கும் தமிழர் மெய்யியலுக்கு வரமாக வந்த வரவென்றும், வெவ்வேறு கால வெளிகளில் விளங்கிவந்த தமிழர் தம் தத்துவ முத்துக்களை ஆரவாரமில்லாமல் தொடுத்த அறிவாரமென்றும் தமிழ்ச்சமயம் கருதுகிறது.மந்திரம் என்ற சொல்லாட்சியை முன்னிறுத்தி, ‘ஸ்ரீமந்த்ர மாலிகா’ என்னும் வடமொழி நூலின் தமிழ் வடிவுதான் திருமந்திரம் என்று கருதிக் கழிந்தாருமுளர். ஆனால், மந்திரம் என்ற சொல் -“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”என்று தொல்காப்பியத்திலேயே துலங்கி விளங்கிப் புழங்குகிறது. மேலும் அவர்கள் விடயமாகச் சுட்டிய அந்த வடமொழி நூலுக்குத் தடயமே இல்லை. ஆகவே இது தமிழர் தத்துவத்தின் முழுமுதல் காட்டும் முதுநூல் என்று கொள்வதே உண்மையை மகிழ்வுறுத்துவதாகும்.ஒரு கருத்தையோ ஒரு நூற்பொருளையோ அது பிறந்த காலத்தின் வேரடி மண்ணோடுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் திருமூலர் குறித்தும், அவர்தம் காலம் குறித்தும், நெற்றியில் முளைத்த முடிபோல் நம்ப முடியாத சில கதைகள் நாட்டில் நிலவுகின்றன.
கயிலையிலே நந்தியருள் பெற்ற சிவயோகி ஒருவர், அகத்திய முனிவரோடு அளவளாவும் ஆசையுற்றுத் தென்னாடு பயணித்தபோது காவிரிக்கரை கடந்தாராம். அங்கே மூலன் என்னும் மாட்டிடையன் ஒருவன் இறந்து கிடந்தது கண்டு காம்புவழி பால்சொரியும் பசுக்கள் கண்வழி நீர்சொரியக் கண்டாராம். பசுக்களின் துயரம் தீர்க்கக் கருதிய சிவயோகியார் மூலன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாராம். மாடுகளை வீடு சேர்த்துத் தம் உடல்தேடிச் சென்றபோது அது தொலைந்திருக்கக் கண்டு, திருவாவடுதுறை அரசமரத்தடியில் அமர்ந்து யோகநிலையுற்று ஆண்டுக்கொன்றாய் மூவாயிரம் பாடல் பாடினாராம். அதுதான் தமிழ் மூவாயிரம் என்னும் பெயரிய திருமந்திரமாம். இந்தக் கதை உண்மையின் கோடுகளுக்குள் இல்லை என்றே தோன்றுகிறது.
மூலன் என்ற தமிழன் பெருமையைத் தமிழனுக்கே வழங்காமல் அதனை வடநாட்டுச் சிவயோகிக்கு வார்த்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஏன்? ஓர் இடையன் ஞானமுறக்கூடாதா? அல்லது ஞானமுறுதல் இயலாதா? கண்ணன் என்ற ஓர் இடையன் கீதோபதேசம் செய்வது சாத்தியமெனில் தெற்கே ஓர் இடையன் மந்திரோபதேசம் செய்வது சாத்தியமாகாதோ? ஆகும்; அவன்தான் திருமூலன்.
திருமூலரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முற்பட்டதென்றும் ஏழாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதென்றும் திருவாவடுதுறை ஆதீனம் கூட்டிய திருமந்திர மாநாட்டில் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ கூறிய கூற்றை ஏற்றுக் கொள்வது இயல்புடைத்தாகும். திருமந்திரத்தின் தொடரமைதியும், திசைச்சொல் வாசனையும், மொழிநெகிழ்ச்சியும், மாற்று உள்ளடக்கமும் இந்தக் கால எல்லைக்குக் கட்டியம் கூறுகின்றன.
ஏழாம் நூற்றாண்டின் காலப்பெருவெளியில் திருமூலரைப் புடம்போட்டால் உண்மையின் உள்ளொளி தெரியவரும். பௌத்தவிகாரைகளும் சமணப் பள்ளிகளும் தத்தம் மதங்களை நிலைநிறுத்த நிறுவனப்பட்டபோது, சைவமும் தன்னை அகத்தும் புறத்தும் கட்டமைத்துக்கொள்ளக் காலம் அறிவுறுத்தியது. நாயன்மார்கள் சைவத்தைத் தோத்திரங்களால் தூக்கி நிறுத்திய காலையில் அதனைச் சாத்திரங்களால் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. நாயன்மார்களின் நெகிழ்ந்த தமிழையும் சித்தர்களின் செறிந்த மரபையும் கூட்டிக் குழைத்துச் சித்தாந்தப் பனுவல் செய்யும் திருப்பணியைச் செய்யுள் தெரிந்தவரெல்லாம் செய்ய இயலாது. சைவத்தின் திருவையும் சித்தர்களின் மந்திரத்தையும் ஒன்றுகூட்டித் தமிழ் செய்யத் தொன்றுதொட்ட பேரறிவு வேண்டும். அது திருமூலர் என்ற திருமுனிக்கே வாய்த்திருந்தது.
சைவசித்தாந்தத்தோடு சித்தர்களின் ஞானம் கலந்தபிறகுதான் தத்துவநிலை கடந்து அது வாழ்வியல் நோக்கி வளர்ந்தது. பதி – பசு -பாசம் என்ற குழூஉக்குறி கொண்ட சைவசித்தாந்தம், பதியைத் தலைவராகவும் பசுவை உயிராகவும் பாசத்தைப் பற்றாகவும் சுட்டிச் செல்கிறது. தலைவன் என்ற சொல்லைச் சிவமென்று செய்துகொண்டார்கள் சித்தர்கள். பற்றறுத்த உயிர்கள் சிவப்பொருள் சேர்வதே உயிரின் உச்சம் அல்லது பிறவிப் பெரும்பேறு என்று நம்பினார்கள். அழியாப் பொருளோடு ஐக்கியமாவதற்கே இந்த அழியும் பொருள் பிறந்தது என்ற கருதுகோளையே சைவச் சகடத்தின் அச்சாணியாக்கினார்கள்.
மேற்குலகம் பருப்பொருளின் பௌதிக ஆராய்ச்சியில் புகுந்து புற உலகின் அகலங்காணப் புறப்பட்ட வேளையில், கிழக்குலகம் மனமென்னும் நுண்பொருள் ஆராய்ச்சியில் நுழைந்து அகவெளியின் ஆழங்காணப் புறப்பட்டது. உடல் – உயிர் – மனம் என்ற மூன்றையும் பொருத்தியும் தனித்தனியே இருத்தியும் புரிந்துகொள்ள முற்பட்ட மெய்யுலகம், அணுக்களின் சேர்மானத்தில் ஆக்கப்பட்ட பொருள்களெல்லாம் அழிபட்டே தீரும் என்று ஆய்ந்து கண்டது. தீப்பொறிகளைப் போலவே நட்சத்திரங்களும் காலவித்தியாசத்தில் கழிவன என்று கண்டது. சுற்றிவரும் பூமி மட்டுமன்று மற்றுமுள சந்திரசூரியரும் அழிந்தொழிவதே அண்டவிதி என்று கொண்டது. அவர்களின் புரிதலில் அணுக்களால் ஆக்கப் பெறாத இறைப் பொருள் ஒன்றுதான் என்றும் அழியாதது. அவர்களுக்கேற்ற மொழியில் அதைச் சிவமென்று செப்பிக் கொண்டார்கள். இந்த உடம்பென்ற தசைப் பொருளுக்குள் வதியும் உயிரை இறைப் பொருளோடு இரண்டறக் கலத்தல் என்ற உள்ளொளிப் பயணத்தில் இயங்குகிறது திருமூலரின் திருமந்திரம்.
கடவுள் என்பதற்குத் திருமூலர் கொண்டிருக்கும் கருதுகோள் தமிழ்வெளியில் அவருக்கென்று தனித்த அடையாளம் தருகிறது. கடவுள் என்பது வான்வெளியிலோ மண்பரப்பிலோ தேடிக் கண்டடையும் திருப்பொருளன்று. அது ஒரு கருதுநிலை. அது ஓர் உணர்ச்சி; உணரக் கூடியதன்றி உணர்த்தக் கூடுவதன்று. உருவம் தராதே. உணர்த்தவும் முயலாதே. அது உன் அகவய அனுபவம். கடவுள் என்பதொரு நினைப்பு. ஈசன் என்பதோர் இனிப்பு. தேனைச் சுவைக்கிறாயே. அந்தச் சுவை கறுப்பா? சிவப்பா? என்று எரிகணைக் கேள்வி எறிகிறார் திருமூலர்.
“வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே ”இப்படி உருவ வழிபாட்டைச் சலவை செய்வதற்கு ஒரு சித்தனின் சித்தம் வேண்டும். உணர்பொருளே கடவுளென்று காட்ட ஒரு ஞானம் வேண்டும்.கடவுள் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்த இவ்விடமே செவ்விடமென்று இக்கட்டுரை கருதுகிறது.
கடவுள் என்பது வெறும் உள்ளூர்ச் சரக்கன்று; உலகச் சரக்கு. கடவுளைக் கடக்க வேண்டுமானால் முதலில் கடவுளைச் சந்திக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் ‘கடவுள் வந்த காலமும் வந்துபோன காலமும்’ என்று ஒன்று வரும். டினோசரும் – அன்றில் பறவையும் திடப்பொருளாய் வந்து மறைந்தவை. கடவுள் என்பது அருவமாய் வந்து மறையக் கூடியது. சீனப் பழங்குடிகளின் போர்க்கடவுள் ‘வேத் வோ’ இப்போது எங்கே? கிரேக்கப் போர்க்கடவுள் ‘அரேஸ்’ இப்போது எந்த யுத்தக்களத்தில் சண்டையிடுகிறார்? ரோமானியக் கடவுளான ‘மார்ஸ்’ பற்றித் தகவல் தர முடியுமா? ஆப்பிரிக்க ஆதிக்குடிகளின் கடவுள் ‘முரிக்’ அவர்களுக்கின்னும் அருள்பாலிக்கும் தூரத்திலிருக்கிறாரா? இப்படி எல்லாக் கடவுள்களுக்கும் ஓர் இறந்தகாலம் வரும்.
இயற்கை மனிதனை மிரட்டியபோது அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார். ஒரு படைப்பாளன் கடவுளுக்கு உருவம்தந்த காலையில் கலையின் கருப்பையில் கடவுள் பிறந்தார். ஆளும் வர்க்கம் அடிமை வர்க்கத்தை அடக்கியாளக் கருதியபோது நிறுவனத்தின் கருப்பையிலிருந்து கடவுள் அவதரித்தார். கடவுளின் தேவையிலிருந்து மனிதகுலம் விடுபடும் யுகத்தில் கலையில் மட்டுமே கடவுள் மிஞ்சுவார். பிறகு கற்பித்த உருவம் கழிந்து ஒரே ஓர் உணர்வாக மட்டுமே கடவுள் கருதப்படுவார்.இந்த வகையில் திருமூலர் என்னைக் கதற வைத்த கவிதை ஒன்றுண்டு.
பல குடங்களில் தண்ணீர் நிரப்பியிருக்கிறீர்கள். எல்லாக் குடங்களிலும் ஒரு துண்டுச் சூரியன் மிதக்கிறது. ஒவ்வொரு குடத்துக்குள்ளும் ஒரு சூரியன். ஆனால் உச்சியில் ஒளிர்வது ஒரே சூரியன்தான். குடத்துக்குள் விழுந்த சூரியன் தனக்கே சொந்தமெனக் குடத்தை மூடினால் அக் கதிரவன் குடத்துக்குள் அடங்குவனோ? ஒவ்வொரு குடத்துக்குள்ளும் தோன்றினாலும் கதிரவன் குடத்துக்குள் அடங்காதவாறு போல ஒவ்வோர் உடம்பிலும் உறையினும் அந்த உடம்புக்கே சொந்தமாகாது உயிர். அந்த உயிரே இறைப்பொருள் என்று நம்புகிறார் திருமூலர்.
“கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங் கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே ”திருமூலரை இப்படி எழுத வைத்த அனுபவவெளியின் மீது என் மனப்பறவை திரிந்து திரிந்து பறந்து பறந்து திகைக்கிறது.“ஊர்க்கிணறு தோறும் மிதக்கிறது ஒரே நிலா” – என்ற ஜப்பானியக் ஐக்கூ கவிதை பின்னாளில் பேசிய ஒரு சிறுபொருளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு பெரும்பொருளாகப் பேசிமுடித்த மூலனின் மூலம் என்னை வியக்க வைக்கிறது.
எல்லா உடம்புக்குள்ளும் உறைவது இறையென்று நம்பப் படுவதன் இன்னொரு துண்டு என்ற கோட்பாடுதான் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற உலகப் பெருங்கருத்தை முன்வைக்கச் செய்தது மூலரை. சாதிபேதம், இனபேதம், மதபேதம், வர்க்கபேதம் என்ற அனைத்து பேதங்களையும் அழிக்க முற்படும் ஆயுதம் என்றே கருதவேண்டும் இந்தக் கருத்தாடலை. உடலை இறையோடு பொருத்திய இந்த உயிர்க் கொள்கைதான், இழித்துச் சொல்லப்பட்ட உடலென்ற பொருளை மதித்துப் பேசும் மாண்பு கொடுத்தது.
“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே”இந்தக் கருத்து தமிழுக்குப் புதுவது; மாயாவாதத்தைச் சூறையாடுவது. “காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா” என்று சிரித்துக் கொள்ளாமலும், பட்டினத்தடிகள் போல் இது “சலமலப் பேழை” என்று சலித்துக் கொள்ளாமலும், “உடம்பொரு கோயில்” என்று உரக்கச் சொன்ன திருமூலர் உபநிடதங்களின் ‘உயிர் அழிவதில்லை’ என்ற பழைய வாதத்தையும் களைந்தெறிகிறார்.“ஆத்மா பிறப்பதில்லை; இறப்பதுமில்லை. அது எதிலிருந்தும் வெளிப்பட்டதில்லை; அதில் எதுவும் வெளிப்படுவதுமில்லை. உடல் அழியும்போதுகூட ஆத்மா அழிவதில்லை” என்று சொல்லும் கடோப உபநிடதத்திற்கு மாறாக, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”.என்று பாடிய செறிவும் அறிவும் திருமூலத் தமிழனுக்கு வாய்த்திருக்கிறது.
உடலறிவு குறித்த பெளதிகக் கதவைத் திருமந்திரமே முதலில் திறக்கிறது. முதன் முதலில் மூச்சறிவியல் பேசப்படுவதும் திருமந்திரத்திலேதான். எலும்புகள் நிறுத்தி, நரம்புகள் பொருத்தி, இறைச்சியை இருத்தி, உறுப்புகள் மலர்த்தி, உயிர்த்திரி கொளுத்தி உலவவிடப்பட்ட இந்த உடலுக்கு நாடிகள் மொத்தம் பத்தென்று கணித்தார்கள் ஞானச்சித்தர்கள்; அவற்றுள் முக்கியமானவை மூன்றென்றும் முடிவு கட்டினார்கள்.
நீர்வழிப்பட்ட சிலேட்டுமம் – தீ வழிப்பட்ட பித்தம் – வாயுவழிப்பட்ட வாதம் இம்மூன்றுமே உடலென்ற எந்திரத்தின் எரிபொருட்கள் என்று கண்டார்கள். தசைநார்களை இளக்கம் செய்வதும், எப்போதும் இயங்கும் இதயத்தின் சூடு தணிவிப்பதும், நாவின் ஈரம் காப்பதும், உதிர ஓட்டத்தை ஒழுங்குறுத்துவதும், மூட்டுகள் தேயாமற் காத்தலும் சிலேட்டுமத்தின் செம்பணிகள். உணவை எரித்தலும், அறிவும் நினைவும் அழியாமற் காத்தலும், குருதிக்கு நிறமூட்டலும் தோலின் பளபளப்பைப் பாதுகாத்தலும் பித்தத்தின் பெரும்பணிகள். மூச்சினைச் சீர் செய்தலும், உயிருக்கு உயிர்ப்பூட்டலும், மனமொழி மெய்களை நேர் செய்து சீர் செய்தலும், தாதுக்களை உண்டாக்கலும், கழிவுகள் புறந்தள்ளலும் வாதத்தின் அரும்பணிகள்.
நீரின்றியும் நெருப்பின்றியும் இவ்வுடல் சின்னாட்கள் வாழ்வது சாத்தியமெனினும் காற்றின்றிச் சின்னேரம் வாழ்வதும் சிரமம். அந்தக் காற்றுக்கும் உடலுக்குமான தொடர்பைத் தமிழ்க்குலத்துக்கு முதலில் சொன்ன பேரறிஞன் எங்கள் மூலனே என்பது காலம் எமக்களித்த கர்வமாகும்; தமிழ் எமக்களித்த தருக்காகும். “ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது வாமே” – என்பது திருமந்திரம்அஃதென்ன காற்றைப் பிடிக்கும் கணக்கு? அதுதான் மூலர் அருளிய மூச்சறிவியல்.பகலில் எட்டு மில்லி மீட்டர் சுருங்கி, இரவில் எட்டு மில்லி மீட்டர் நீண்டுவிடும் இந்த உடம்புக்குப் படுத்திருக்கும்போது நிமிடத்துக்கு 9 லிட்டரும், அமர்ந்திருக்கும்போது 18 லிட்டரும், நடைபயிலும்போது 27லிட்டரும் மூச்சுக்காற்று தேவைப்படுகிறது. சராசரியாக 250கோடி முறை துடிக்கும் இந்த இருதயம் ஒருநாளில் 18000லிட்டர் ரத்தத்தை இறைக்கிறது; காற்றால்தான் அந்த இயக்கம் நடைபெறுகிறது.
இந்தக் காற்றுதான் நுரையீரல் சென்று, உயிர்வளி, நைட்ரஜன், ஹைட்ரஜன், உயிராற்றல் எல்லாவற்றையும் உதிர ஓட்டத்தில் கலக்கிறது. உதிர ஓட்டத்தின் மூலம் அவை செல்களுக்குப் பரிமாறப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் மீண்டும் உதிரத்தில் கலக்கின்றன. அந்தக் கழிவுகளையெல்லாம் நாம் விடும் வெளிமூச்சுதான் வெளியேற்றுகிறது. உட்சுவாசம் உணவு; வெளிச்சுவாசம் கழிவு. உயிரின் இயக்கம் காற்றுதான். சொல்லப்போனால் உயிரே காற்றுதான். அந்தக் காற்றை இழுத்தல் – இருத்தல் – வெளியிடுதல் மூன்றுக்கும் ஒரு கணக்கிருக்கிறது என்று கண்டார் திருமூலர். அந்தக் காற்றைப் பிடிக்கும் கணக்கை அவர் வழியில் உங்களுக்குக் காட்ட விழைகிறேன்.
முவ்வழிகளில் வினைப்படுகிறது மூச்சு. பூரகம் கும்பகம் மற்றும் இரேசகம். பூரகம் என்பது காற்றை இழுத்தல். கும்பகம் என்பது உள்ளே இருத்துதல். இரேசகம் என்பது வெளியே விடுதல். இந்தப் பூரகம் கும்பகம் இரேசகம் மூன்றுக்குமான கால அளவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. 16நொடி மூச்சை உள்ளிழுத்து, 64நொடி அதை உள்ளே இருத்தி, 32 நொடி மூச்சை வெளியிட்டால் மட்டுமே சித்தர்கள் கண்டறிந்தபடி 72000 நரம்புகளுக்கும் உயிர்ச்சத்து ஓடி உட்சேரும் என்பது திருமூலர் கணக்கு. “ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத்திரண் டதிரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே!” என்பதே காற்றைப் பிடிக்கும் கணக்கு.
இது சராசரி மனிதர்க்கு சாத்தியமில்லை; சாத்தியம் செய்தோன் சராசரியில்லை.உயிரியக்கத்தின் வழியே காற்றும் காற்றியக்கத்தின் வழியே உயிரும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்வதன் கருமூலம் கண்டு சொன்னவர் திருமூலர். அருகம் புல்லின் நுனியில் தூங்கும் பனித்துளியளவில், விந்தணுவில் ஒரு கரு முளைவிட்டதும் ஓடிவந்து சூழ்ந்து நின்று அந்தக் கருமுளையைக் காவல் செய்வதும் காற்றுதான், உயிருள்ள காலம்வரை உடன் உறைவதும் காற்றுதான். இப்படிப் பேணப்படும் உடம்பின் பெருமை சொன்னதும் திருமூலர்தான்; உயிர் விட்டதும் இது உதவாத பொருளென்று உதறித் தள்ளுவதும் திருமூலர்தான்.
மரணத்தைப் புரிந்து கொள்வதில் தொடங்குகிறது மனித இனத்தின் நாகரிக முதிர்ச்சி. மரணம்தான் இந்த பூமியின் தொடர்ச்சி. அது இன்னோர் உயிருக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும் இடப்பெயர்ச்சி. சொல்லப்போனால் மரணம்தான் பூமியின் புராதனச் சுத்திகரிப்பு. நாம் எல்லோருமே நம் முன்னோர்களின் மரணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்துதான் புதிய தளிர் புறப்பட்டு வருகிறது. மரணம் என்பதைப் பூரணம் என்று புரிந்துகொள்கிறவன் பெரும் பேற்றாளன். மரணத்தால் இந்த உடல் பெருக்கி எறியப்படும்போது அதனால் பெருக்கி எறிய முடியாத பெருஞ்செயல் செய்தவனே மரணத்திற்கு மரணம் தருகிறான். “மரணத்தை வீரத்தோடு தழுவிக் கொள்கிறவன் தன்னைத் தானே ஆசீர்வதித்துக் கொண்டவன்” என்ற உத்தமர் காந்தியடிகளின் வாசகம், நல்ல மரண ஊர்வலத்திற்கு முன்னால் நடந்துபோவதைப் பார்க்கிறேன்.
நிலையாமையைச் சொல்லி நெஞ்சுறுதியூட்டுகிறார் திருமூலர். செல்வத்தின் நிலையாமை சொல்லவந்த திருமூலர், “உனது செல்வம் உன்னை ஒருபோதும் காப்பாற்றாது; உனது நிழலில் நீ ஒதுங்க முடியுமா?” என்று கேட்கிறார். “குடம் உடைந்தால் ஓடு மிச்சம்; உடல் உடைந்தால் ஏது மிச்சம்?” என்று எள்ளி நகையாடுகிறார். மரணம் பூமியின் நிலைத்த மெய் என்று உலகோடு உரையாடுகிறார்.
எப்போதோ பயின்ற ஒன்று இப்போது நினைவாடுகிறது.வாழ்க்கை மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம் : “என்னை ஏன் நேசிக்கிறார்கள். உன்னை ஏன் வெறுக்கிறார்கள்? மரணம் சொன்னதாம் : “ஏனெனில், நீ ஓர் அழகான பொய்; நான் கடினமான உண்மை”. உண்மையை எதிர்கொள்வதும் கடைசியில் ஏற்றுக்கொள்வதுமே வாழ்வின் உள் மையம்.
“ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பின் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினுள் மூழ்கி நினைப்பொழிந் தார்களே”என்று போகிற போக்கில் மரணத்தைப் புறங்கையால் தள்ளிவிட்டுப் போகும் திருமூலர், ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்று அவநம்பிக்கையோடு முடிந்தாரில்லை. அதிலும் அவர் உறுதிப்பொருளே உரைக்கிறார். “அழிவனகண்ட மனிதா! இன்னுமா நீ அறமறிந்திலை?” என்று மனிதகுலத்தின் கபாலத்தின் மீது இடித்துரைக்கிறார். “ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம் அறியாரே”நிலையாமையும் மரணமும் மனிதனை அறத்திற்கே ஆற்றுப்படுத்த வேண்டும் என்று ஆணையிடும் திருமூலர் மனிதகுலத்தின் மாமருந்தானவர். இப்படி ஒரு ஞான மகனைப் பெற்றெடுக்க என்ன தவம் செய்ததோ எம் தமிழினம்? ஆனால் இந்த ஞானத்தையெல்லாம் விட்டுவிட்டு எம் மனிதக்கூட்டம் புறவழியிலும் பொய்யிலும் போய்க் கழிகிறதே என்று ஒலியெழுப்புகிறது உடைந்த இருதயம்.
ஆட்டின் காம்பினைப் போலவே அதன் கழுத்தில் ஒரு தாடி உண்டு. ‘அதர்’ என்று பெயர் அதற்கு. காம்பென்று கருதி அதில் பால்கறக்கப் பார்க்கலாமோ? அறவழி உதறிப் புறவழி செல்வது திருமூலர் மொழியில் ஆட்டின் கழுத்தில் ‘அதர் கறந்தற்றே’ என்றே சொல்லத் தோன்றுகிறது.ஏ தமிழா… அறிவியல் வழிப்பட்ட திருமூலரின் திருச்சொல் கேள்; அறம் புரி; அன்பு கொள்; உடல் பேணு; உயிர் வளர்; வெட்டவெளியெங்கும் உன் மனப்பறவையை ஓட்டு. நட்சத்திரம் கொத்து; சூரியன் தின்; நிலாப்பால் பருகு. உன் இதயவெளி பெரிது. அதில் கடல் ஒரு குடம். ஆகாயம் ஒரு சாளரம். கொடி கோணலாகிக் கிடந்தாலும் பூ நிமிர்ந்தே பூக்கிறது. ஒவ்வொரு மலரும் ஓர் உலகம். ஒவ்வோர் உலகமும் ஒரு மலர். குறையுடைய வாழ்விலும் குற்றமேதுமில்லை. இறக்கை ஒடிந்த குயிலும் சுதிமாறிப் பாடுவதில்லை. வாழ்க்கை இன்பத் தோட்டம். மரணம் ஒரு கொண்டாட்டம். இறைவன் இருப்பது உண்மையானால் நீ நம்பு. நீ இருப்பது உண்மையானால் இறைவன் உன்னை நம்பட்டும். திருமந்திரத்தின் நறுமந்திரத்தை ஓதி ஓதி உள்வாங்கு. நல்லன புதுக்கு; அல்லன ஒதுக்கு. ஒரு ஞானப்பரம்பரையின் நீட்சி நீ என்று நினை. திகைக்கும் உனக்குத் தீருமூலன் துணை.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”இது திருமூலர் சொன்னது.“என்னை நன்றாக இயற்கை படைத்தது முன்னோர் பெருமை முறைசெய்யு மாறே”இது – எளியவன் எனக்கு நானே சொல்லிக்கொண்டது.
மூவாயிரம் பாடிய திருமூலருக்கு ஒருமந்திரம் பாட என் உள்ளுயிர் துடிக்கிறது. பாடுகிறேன் :
“பூவிடும் மூச்சோ புறவெளி போகும்
தீவிடும் மூச்சோ திசைவழி ஏகும்
மேவிடும் தமிழால் மெய்ம்மறை சொல்லி
நீவிடும் மூச்சே நித்தியமாகும்”
வணங்க வேண்டும்;
உன் திருப்பாதம் காட்டு திருமூலா!
நன்றி: தினமணி