பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சாம்ஸ், சிங்கமுத்து நடித்துள்ளனர்.
இசை- பரத்வாஜ், கதை,திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு, இயக்கம்
தங்கர் பச்சான்.
தயாரிப்பு : ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்.
ஒரு காலத்தில் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் பிரிந்தவர்கள் வேறு இணையோடு வாழும்போது தங்கள் காதல் ஜோடி இப்போது எப்படி இருப்பார்களோ என எண்ணுவதுண்டு.அன்று நேசித்தவர்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் ? நன்றாகத்தானே இருக்கும்.?.
கடந்து போன- தொலைந்து போன தங்களின் வாழ்க்கையை , அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று ஏங்குவதுண்டு. ஆனால் பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் போது நினைத்த அளவுக்கு சகஜமாக சந்தோஷமாக இருக்க முடியுமா?
அப்படித்தான் இந்தக் காதலர்களும் சந்திக்கிறார்கள். அதன்பின் அவர்கள் இலகுவாக இருக்க முடியவில்லை .தங்கள் காதல் உணர்வுகள் மீண்டும் கிளர்ந்து எழ, இருவேறு வாழ்க்கை வாழும் அவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட வலிநிறைந்த போராட்டமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் காதலுக்கும் அன்புக்கும் விசுவாசத்துக்குமான மும்முனைப் போராக எப்படி மாறுகிறது என்பதை சொல்கிற படம்தான் ‘களவாடிய பொழுதுகள்’.
தன்னால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் போராடும் காதலன், அபரிமித அன்பு காட்டி நேசிக்கும் கணவன், இருவர் முன் அலைக்கழியும் இதயம் என்ன செய்யும்?
ஒரு முடிவெடுக்கிறார் பூமிகா. அது என்ன ? அதே மனநிலையிலுள்ள பிரபுதேவாவின் முடிவு என்ன?
எல்லாமும் அறிந்த கணவன் பிரகாஷ்ராஜ் என்ன செய்கிறார்? என்பவை கதைப்போக்கு குவியும் மையம்.
பொற்செழியனாக வரும் பிரபுதேவா தான் ஒரு வணிக நடிகர் என்கிற பிம்பத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். அவர் மேல் ஒட்டியிருந்த ஓட்டை உடைத்து வெளியேறிப் புதுப்பரிமாணம் காட்டியிருக்கிறார்.
காதலனாக உற்சாகமாகத் துள்ளல் காட்டியவர், சமூகக் கோபம் உள்ள பொறுப்புள்ள இளைஞனாக எழுச்சியும் காட்டுகிறார்.
காதலியை மீண்டும் சந்திக்கும் காட்சிகளில் மனப்போராட்டத்தை வெளிப்படுத்தும் மனிதனாக உள்ளாதிக்கம் செய்யும் நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். அதிகம் பேசாமலேயே நுட்பமான நடிப்பை வழங்கியுள்ளார் பிரபுதேவா.
ஜெயந்தியாக வரும் பூமிகாவும் சளைத்தவரல்ல. இதுவரை நடித்த படங்களிலேயே இதில் முத்திரை அழுத்தம் அதிகம். மனப்போராட்டமுள்ள பெண்ணாக வாய் திறந்து வெளியே சொல்ல முடியாத உணர்வுகளை கண்களாலும் வெளிப்படுத்த முடியாத மன உணர்வுகளை முகபாவத்திலும் காட்டியே கவர்கிறார்.
பிரகாஷ்ராஜ் நடிப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். சிலநேரம் மிகைநடிப்பாகி விடும் அபாயம் உள்ளதை அறிந்து கவனமாக கத்திமேல் வெற்றிகரமாக நடந்துள்ளார்.
தன் மனைவியின் காதல்கதையை அறிந்து அதைப் புரிந்து கொள்ளும் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி இயலாமையா கோபமா பகையுணர்வா என்று அதைப்பார்ப்பவர்களுக்குள் எல்லாம் கேள்வி எழுப்பும் உணர்வு. அப்போது அவர் காட்டும் முகபாவம் அடடா.. !
படத்தின் பின்பாதியில் ஒரு கட்டத்தில் கதையின் எடை சுமப்பவராக மாறி பிரகாஷ்ராஜ் வெற்றி கண்டிருக்கிறார் .
பிரபுதேவாவின் மனைவியாக வரும் இன்பநிலா . வியர்வை வழியும் முக்கத்துடன் நடுத்தர வர்க்கக் கனவுகளுடன் வாழும் பெண்ணாக வருகிறார். இயல்பான நடிப்பால் வாழ்ந்துள்ளார். மகள் யாழினியாக வரும் சிறுமியும் மனதில் பதிகிறார். ‘நாம மறுபடியும் ஏழையாய்ட்டோமா? ‘ என்று கேட்கும் போது அப்பாவித்தனம் காட்டும் அந்த குழந்தைமை அழகு.
படத்துக்கு ஒளிப்பதிவையும் இயக்குநர் தங்கர்பச்சானே செய்துள்ளார். ஒரு துறையில் பெயர் பெற்றவர்கள் இயக்குநராகும் போது நிபுணத்துவம் பெற்ற அந்தத்துறை, எட்டிப் பார்க்கும்; தலைகாட்டும். இப்படத்தில் அந்த அபாயத்தை கடந்துள்ளார் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்.
படத்தின் காட்சிப்படுத்தலில் கூட்டம், பரபரப்பு, நெடுஞ்சாலைப் பயணம், துரத்தல் என ஓர் ஒளிப்பதிவாளருக்குச் சவால் தரும் காட்சிகளும் உள்ளன. எல்லாவற்றையும் இயக்குநரின் பாதையிலேயே சென்று எல்லைதாண்டாமலேயே இயங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் .
இயக்குநராக தங்கர் பச்சான் வெற்றி பெற்றிருப்பது சக கலைஞர்களை எல்லை மீறாமல் வேலைவாங்கி அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் வழிவகை செய்திருப்பதில்தான் எனலாம். அடுத்து அவர் அமைத்திருக்கும் திரைக்கதை. படத்தின் முற்பாதியில் காதலர்களின் காதல் வளர்ந்த கதை என்று மிதமாகச் செல்கிற திரைக்கதையின் பயணமும் பாதையும் மறுபாதியில் வேகம் பிடிக்கிறது. நின்று நிதானித்து, நீர்ச்சுழிகளோடு, பீறிட்டு, வளைந்து, தடை தாண்டி ,விலகி சுழித்துத் திரும்பி ஓடும் ஆற்றின்நீரோட்டம் போலச் செல்கிறது. வணிக சினிமாவுக்கான செயற்கையான பரபரப்பு, திடுக் திருப்பம் என இல்லாமல் அதன் போக்கில் கதையை அனுமதித்து அழகு காட்டியிருக்கிறார்..
சற்றே இடைவெளிக்குப் பிறகு பரத்வாஜ் இசையில் படம் வந்துள்ளது. சோடை போகாத மெட்டுகள், சலிப்பூட்டாத பின்னணி இசை. ஐந்து பாடல்கள் .
‘அழகழகே’ என்று காதல் வளர்க்கும் பாடலை அறிவுமதி எழுதியுள்ளார்.
‘சேரன் எங்கே’ பாடலில் வைரமுத்து நடப்பு தமிழக அவல நிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மற்ற பாடல்களில் ‘குற்றமுள்ள பார்வை’ வித்தியாசமான சூழலுக்கேற்ப வீரியமுள்ள பாடல்.
‘தயவு செய்து என்னைக் களவாடு’ காதல் ரசம் சொட்டும் கவிதை.
‘தேடித்தேடிப்பார்க்கிறேன்’ பாடல் ஆங்காங்கே துண்டு துண்டாக ஒலித்தாலும் ஒவ்வொரு துணுக்கும் தத்துவச் சாரம் நனைந்து கதையின் அடர்த்திக்கு அழகு சேர்க்கும் ரகம்.
படத்தில் பல இடங்களில் நீளும் வாய்ப்பு இருந்தும் அடக்கி வாசிக்கும் அளவான காட்சிகள் வசனங்கள் அழகு.
இடைத்தேர்தல் பற்றி கஞ்சா கருப்பு கூறும் அந்தக்காட்சிகளில் மட்டுமல்ல பெரியார், ஜீவா தோன்றும் காட்சிகளிலும் கருத்து நெடியும் பிரச்சார தொனியும் உள்ளதாகத் தோன்றலாம். அவற்றை ஒட்டாமல் படத்தில் வரும் திணிப்பு போலக் கருதலாம். இருப்பினும் அவை காலத்துக்கு ஏற்றவைதான் என்கிற சமாதானத்தோடு அவற்றைக் கடந்து படத்துக்குள் செல்ல முடிகிறது.
இந்தக் காதல் கதையில் போகிற போக்கில் மதுபானக் கடை ஒழிப்பு, அரசுப்பள்ளி, அதிகாரவர்க்கச் சுரண்டல், மேலடுக்கு சமூக ஆணவம், ஏழைகள் புறக்கணிப்பு பற்றியெல்லாம் ஆங்காங்கே தனது ஆதங்கப் பொறிகளை தூவியுள்ளார் இயக்குநர்.
மொத்தத்தில் இப்படம் காதலித்தவர்கள் மட்டுமல்ல காதலிப்பவர்கள் மனங்களையும் களவாடும்.