தயாரிப்பாளர் பைஜா டாம்Lady Dream Cinemas நிறுவனத்தின் சார்பில் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சச்சின் மணி என்னும் புதுமுகம் நாயகனாக நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.மேலும், அருள்தாஸ், மனோபாலா, சித்ரா லட்சுமணன், ‘பாவா’ லட்சுமணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சென்றாயன், அப்புக்குட்டி, அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – சான் ரோல்டன், தயாரிப்பு நிறுவனம் – லேடி ட்ரீம் சினிமாஸ், தயாரிப்பாளர் – பைஜா டாம், எழுத்து, இயக்கம் – பாலையா டி.ராஜசேகர்.
‘காத்திருப்போர் பட்டியல்’ கதை எப்படி என்பதைப் பார்ப்போம்.
நாயகன் சச்சின் மணி,நாயகி நந்திதா ஸ்வேதாவைக் காதலிக்கிறார். மணி,வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதால் நந்திதாவின் அப்பா காதலுக்கு கறுப்புக் கொடி காட்டுகிறார். சச்சின் எப்படியாவது ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஆனால் நந்திதாவின் அப்பா வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை கவனிக்கிறார். இந்த விஷயத்தை அறியும் சச்சின், தனது காதலியைச் சந்திக்க சென்னையில் இருந்து ரயில் மூலம் பாண்டிச்சேரிக்கு போகிறார். ரயில் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு தவறுக்காக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.அவருடன் பலரும் சிக்குகிறார்கள்.கைதாகிறார்கள்.அறை`ஒன்றில் அடைக்கப்படுகிறார்கள்.
தான் எதற்காக பாண்டிச்சேரிக்கு அவசரமாகப் போக வேண்டும் என்கிற உண்மையான காரணத்தை அந்த அறையில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார் சச்சின்.
தான் காதலிக்கும் மேகலா என்னும் நந்திதா ஸ்வேதாவுக்கு அன்றைக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அதனை தடுத்து நிறுத்தி அவளை தான் திருமணம் செய்ய விரும்பியே பாண்டிச்சேரிக்கு உடனேயே போயாக வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார் சச்சின்.
கோர்ட், அபராதம் என்று போனால் நேரமாகிவிடும் தாமதமாகி நாள் ஓடிவிடும், என்று அவருடன் கைதானவர்கள் சச்சினுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
இவரது காதல் கதையைக் கேட்ட மற்ற அனைவரும் எப்படியாவது சச்சினை போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க வைத்துவிட திட்டம் தீட்டுகிறார்கள்.
அதனால் ரயில்வே போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிட்டு அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர், தப்பித்தாரா? தனது காதலியைக் கரம் பிடித்தாரா? இல்லையா என்பது தான் படத்தின் கதை.
கைதாகி அடைக்கப்பட அந்த அறையில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது, அவர்களுக்கு தனது காதல் கதையை சச்சின் சொல்லும் காட்சிகள் சில காமெடியாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் சுமார் ரகம்.
அறிமுக நாயகன் சச்சின் மணி,வணிக சினிமாவுக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறார். நந்திதா ஸ்வேதாவுக்கு மிகை ஒப்பனை தேவையா?
பாடல் காட்சிகளையும், பாண்டிச்சேரி காட்சிகளையும் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். .ஷான் ரோல்டன் பாடல்கள் மூலம் இசையில் தனது பெயரை நிலைநாட்டிவிட்டார்.
நாயகனுடன் ரயில்வே போலீஸிடம் கைதாகும், செண்ட்ராயன், அப்புக்குட்டி, மயில்சாமி, அருண்ராஜ், மனோ பாலா கூட்டணி காமெடிக் காட்சிகள் சில சிரிக்க வைக்கும். அவர்கள் பாதிக்குப் பாதி வசனங்களை கைப்பற்றி தங்களால் முடிந்த அளவுக்கு படத்தின் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள். ரயில்வே போலீசாக நடித்திருக்கும் அருள்தாஸ் இன்னொரு பக்கம் தனது கோபமான நடிப்பால் ஒரு சராசரி இன்ஸ்பெக்டரை நேரில் கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும் ரயில்வே போலீஸின் கைது நடவடிக்கை, நாயகனின் காதல் பிளாஷ்பேக் என்று படம் ரொம்ப சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் சச்சின் ரயில்வே போலிஸிடம் இருந்து தப்பிக்க போடும் பிளானும், அதனை சுற்றி வரும் காட்சிகளும் சற்று சுவாரஸ்யமாக நகர்கிறது.
சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டாலும், புதிய ஐடியாவோடு களத்தில் இறங்கியிருக்கும் இயக்குநர் பாலய்யா டி.ராஜசேகரின் கதை சொன்ன விதத்திற்கும், காட்சிகளை நகர்த்திய விதத்திற்கும் சபாஷ் சொல்லியாக வேண்டும்.