கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்….
“ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.
அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.
In case if you have missed watching Karthik Dial Seytha Yenn