காதலிலும் போரிலும் எதுவும் நியாயமே என்பார்கள் .இது பிரபஞ்ச மரபு.
ராணுவம் ,போர்,யுத்த கைதி ,காதல் என்பவற்றை வைத்து மணிரத்னம் தன் பாணியில் எழுதியுள்ள கவிதைதான்’காற்று வெளியிடை’ படம்.
இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி ராவும் காதலிக்கிறார்கள். இருவரது எண்ணங்களின் வேறுபாட்டால் இருவருக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அதனால் ஒரு கட்டத்தில் கார்த்தியை விட்டு அதித்தி பிரிந்து விடுகிறார். இதற்கிடையில் யுத்தம் ஒன்றின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் கார்த்தி அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறையில் தனது காதல் நினைவுகளில் மூழ்கியிருக்கும் கார்த்தி, ஒரு முறையாவது தனது காதலியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.அவர் தப்பித்துத் தனது காதலியைச் சந்தித்தாரா இல்லையா என்பது தான் கதை.
விமானப் படை வீரர்கள் பின்னணியில் காதல் கதையை சொல்லியிருக்கும் மணிரத்னம், விமானப் படை வீரர்களின் வாழ்க்கையை தேவையான அளவில் சொல்லியிருக்கிறார்.என்னதான் பெண்கள் படித்துப் பெரிய பணியில் இருந்தாலும், அவர்களை ஆண்கள் அடக்கி ஆளவே நினைக்கிறார்கள் என்பதை, காதலர்களின் மோதல் மூலமாக அழகாக சொல்லியிருக்கிறார். மணிரத்னம் இந்த படத்தில் காதலர்களின் மோதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது புதுவை..
இயல்பான வேடங்களில்சாதாரணமான பக்கத்துவீட்டு வாலிபனாக வளைய வரும் கார்த்தி, முதல் முறையாக இயல்பை மீறிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை .
நாயகி அதித்தி ராவ் பரவாயில்லை ரகம். ரவிவர்மனின் முயற்சியால் சில இடங்களில் அழகாக தெரிகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
காதலை மையமாக வைத்து மணிரத்னம் எடுத்த படங்கள் எவர்கீரின் காதல் படங்களாக இருப்பதற்கு காரணம் காதலர்களின் உணர்வுகள் மட்டுமல்ல, கதைக்களத்தின் பின்னணியும் தான். ஆனால், இந்த படத்தைப் பார்க்கும் போது ஏதோ போதாமை தெரிகிறது.
தீவிரவாதம், மத பிரிவினை, குடும்ப பின்னணி போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் காதல் படங்களை எடுத்துள்ள மணிரத்னம், அனைத்து படங்களிலும் இரண்டையும் சரிசமமாகக் கையாள்வார். இரண்டுமே படம் பார்ப்பவர்களை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பார். ஆனால், இந்த படத்தில் அத்தகைய எந்த காட்சிகளும் இல்லை. எதிரி ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளும் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முற்றிலுமாக தவிர்த்துள்ளார்.
இதுவும் ஒரு மணிரத்னம் படம் என்ற அளவில் உள்ளது.அது போதுமே அவரது ரசிகர்களுக்கு?