கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், ஷரத் லோகித்ஸ்வா, மதுமிதா நடித்துளளனர். இயக்கம் கோகுல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ் .இசை சந்தோஷ் நாராயணன்.
ஆவிகளுடன் பேசமுடியும் என்றும் ஆவிகளைக்கட்டுப் படுத்த முடியும் என்றும் பிரபலமாக இருக்கிறார் விவேக் அவரது மகன் காஷ்மோரா கார்த்தி மற்றும் குடும்பத்தினர். டிவி சேனல் ரியாலிடி ஷோவில் இதை நம்பாதவர்களை தனியே அழைத்து கலங்கடிக்கிறார் கார்த்தி.
இந்நிலையில் உள்துறை அமைச்சரின் நம்பிக்கை பெற்றுவிட்டதால் அவரது பணம் பலகோடி ரூபாய் வருமான வரி சோதனைக்குப் பயந்து கார்த்தி குழுவிடம் வருகிறது. போலி மந்திரவாதி கார்த்திக்கு நிஜமாகவே ஒரு பழைய அரண்மனைக்குள் இருக்கும் ஆவிகளை சாந்தி செய்து மேல் உலகம் விரட்டும் மாபெரும் வேலை வருகிறது. தாம் இதுவரை செய்ததெல்லாம் மந்திரம் அல்ல தந்திரம்தான் என்பதால் பயப்படுகிறார். இருந்தாலும் சமாளிப்புக்காக ஒப்புக் கொள்கிறார். கையில் உள்ள பண மூட்டைகளுடன் அங்கு போனதும் நடக்கும் ஆவிகளின் களேபரங்கள் அதிரவைக்கின்றன. அவற்றின் பின்னணி என்ன? இதிலிருந்து கார்த்தி குடும்பத்துடன் தப்பினாரா இல்லையா என்பதே மீதிக் கதை.
முதல் பாதியில் போலி மந்திரவாதியாக வரும் கார்த்தியை வைத்துக் கலகலப்பு என்கிற பெயரில் மலிவான காட்சிகளால் சிரிக்க வைக்கிறார்கள். அப்பாவாக வரும் விவேக்கும் அப்படியே. போலியை அடையாளம் காட்டும் முனைப்பான பெண்ணாக ஸ்ரீதிவ்யா வருகிறார்.
மறுபாதியில் ப்ளாஷ்பேக் வருகிறது. ராஜ்நாயக்காக கார்த்தி. ரத்னமகா தேவியாக நயன்தாரா. அவர்கள் தொடர்பான கதை விரிகிறது. மறுபாதிப் படம் பாகுபலி பாணியில் பிரமாண்டத்தில் மிரட்டுகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் விழிகளை மிரள வைக்கின்றன. படத்தின் மறுபாதியை கிராபிக்ஸ் கலைஞர் கையில் எடுத்துக் கொண்டு கவர்கிறார்.
பிரமாண்ட அரங்குகள், நட்சத்திர பலம் இருந்தும் உயிரோட்டமுள்ள கதையமைப்பில் கோட்டை விட்டுள்ளார் கோகுல். இருப்பினும் முழுநீள வணிகப்படமாக நிச்சயமாக காஷ்மோரா ரசிகர்களை ஏமாற்றாத திரை விருந்துதான்.