தேசப்பற்றையும் ,ராணுவத்தையும் மையமாக வைத்து இந்திய சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன.ஆனாலும், கடற்படையை,நீர்மூழ்கிக் கப்பலை மையமாக வைத்து உருவான முதல் படம் ‘காஸி’தான் எனலாம்.
அது 1971ஆம் ஆண்டு .அப்போதைய இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிடம் இருந்த சக்திவாய்ந்த நீர் மூழ்கிக் கப்பலான ‘காஸி’ யை எதிர்கொண்டு இந்திய கடற்படையினர் எப்படி அழித்து வென்றார்கள் என்பது தான் படத்தின் கதை.
பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கேட்டு பங்களாதேஷ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட, அவர்களை ராணுவம் மூலம் அடக்கும் வேலையில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்.ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாமல் திணறுகிறது. அப்போது கடல் வழியாக எடுத்துச் செல்ல முடிவு செய்யும் போது, அங்கே இந்தியக் கடற்படையின் பெரும் பலம் பொருந்திய கப்பலைத் தாண்டி செல்ல முடியாது என்பதால், அந்த கப்பலை அழிக்க ‘காஸி’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புகிறார்கள்.
இந்த விஷயத்தை முழுமையாக அறியாதபோதிலும் இந்திய உளவுத்துறை கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக, கடற்படையினரிடம் எச்சரிக்கின்றனர். இதையடுத்து இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபடுகிறது.
இந்தக் கப்பலின் கேப்டன் கே.கே.மேனன், துணை கேப்டன் ராணா, அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நீர்மூழ்கி கப்பலில் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.அப்போது, அங்கே எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். இதைத் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்குள் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, இவர்களது கப்பல் செயலிழந்து கடலின் அடிப்பகுதியில் விழுந்து விட நேரிடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்து, பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலை அழித்து நமது நாட்டை காப்பாற்றுகிறார்கள், என்பதே இப்படத்தின் முடிவு.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சில படங்கள் எடுக்கப்பட்டாலும் சினிமாவுக்காக அவற்றில் சில வணிக மசாலாக்களைத் தூவுவதுண்டு. ஆனால், இந்தப் படத்தில் அதுபோன்ற எதையும் திணிக்காமல், ‘காஸி’ கப்பல் குறித்து வரலாறு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்த ராணா, கே.கே.மேனன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதுடன், அவர்களது நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இறுக்கமான, கண்டிப்பான கேப்டன் என்கிற தோற்றத்தில் நடித்திருக்கும் கே.கே.மேனன் நடிப்பில் அனைவரையும் மிஞ்சிவிட்டார்.
அவரைப் புரிந்து கொள்ளாத ராணாவுக்காக கடைசியில் அவர் தன் உயிரை இழப்பதும், இதன் பின்பு கடற்படையின் வழக்கப்படி அவருக்கு நடக்கும் இறுதிச் சடங்கு மரியாதையும் மனதைத் தொடும் காட்சிகள்.
முன்னணி நாயகனாக இருந்தாலும் தனது நாயக பிம்பத்தை மறைத்துவிட்டு ஒரு கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் ராணா.சபாஷ்.
டாப்ஸிக்கும் பெரிய அளவுக்கு பங்கு இல்லை என்றாலும், அவசரத்திற்கு உதவிய மருத்துவராகவும் நடித்து திரைக்கதையில் பெரிதும் உதவியிருக்கிறார்.
மதியின் ஒளிப்பதிவும், கே-வின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருப்பது போல, ஆர்ட் டைரக்டர் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் ஆகியோரது பணியும் படத்திற்கு கூடுதல் பலம் .
இது போன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இயக்குநர் தெளிவாக புரிந்து செயல்பட்டிருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. நீர்மூழ்கிக் கப்பல் இப்படிதான் இருக்குமா? என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்கு, கப்பலில் உள்ள ஒவ்வொரு கருவிகளையும் வடிவமைத்திருப்பதுடன், நீர்மூழ்கி கப்பல் நீருக்குள் மூழ்குவது, மீண்டும் நீருக்கு மேல் எழும்புவது, தண்ணீரில் கப்பலின் செயல்பாடு உள்ளிட்டவை மிக நேர்த்தியாக உருவாக்கிக் காட்டப் பட்டுள்ளன.
இயக்குநர் சங்கல்ப் ரெட்டிக்கு இது தான் முதல் படம். நம்பமுடியாத அளவுக்கு அனுபவ முத்திரை தெரிகிறது.பாராட்டுகள்.
வரலாற்றில் நிகழ்ந்த ஒரே ஒரு சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுப்பவர்கள் அந்த சம்பவத்தை சொல்வதற்கு முன்பாக, சில முன்கதை, விவரணம் எனச்சொல்லி நமக்கு தலைவலி கொடுப்பது வழக்கம். ஆனால், இயக்குநர் சங்கல்ப் ரெட்டி, படத்தின் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டிய கதைக்குள் ரசிகர்ளை அழைத்துச் சென்றுவிடுகிறார். இதனால், குறிப்பிட்ட ஒரே இடத்தில் படம் நகர்ந்தாலும், சுவாரஸ்யமாக உள்ளது.விறுவிறுப்பு குறையவே இல்லை.
பாகிஸ்தான் கடற்படையின் தலைமை அதிகாரிகள் திட்டம் போடுவதில் தொடங்குகிற பதற்றம், அடுத்தடுத்த காட்சிகளில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும், பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளியாகும் குண்டுகளால், இந்திய நீர்மூழ்கி கப்பல் என்ன ஆகுமோ என்ற பதற்றம் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது.
கீழே கடலுக்குள் ஆழத்திற்குள் செல்லும்விதம்.. கடலுக்குள் கன்னி வெடி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இதுவரையிலும் பார்க்காத பல போர் விஷயங்களையும், போர்க் கப்பல் தொடர்பான பாடங்களையும் இந்தப் படம் சொல்லித் தந்திருக்கிறது.
படத்தில் படத்திற்கான பாடல்களே இல்லை. என்றாலும் ‘சாரே ஜகான்கி ஹச்சா’ பாடலும், ‘ஜன கன மன’ பாடலும் மிகச் சரியான நேரத்தில் படத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மொத்தத்தில் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கும் . அற்புதமான இயக்கம், நடிகர்களின் நடிப்பு வெளிப்பாடுகள், அருமையான ஒளிப்பதிவு, நொடிக்கு நொடி எதிர்பார்ப்பைத் தூண்டும் கச்சிதமான படத் தொகுப்பு, கதையையும், காட்சியையும் கெடுக்காத அளவுக்கான பின்னணி இசை, தத்ரூபமான கடல் சண்டை காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் என்று அனைத்திலும் ஒரு சிறிய குறைகூட சொல்ல முடியாத அளவுக்கு படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.அவரை முதுகு வலிக்கு அளவுக்குத் தட்டிக்கொடுக்கலாம்.
இந்தப் படம் நிச்சயம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்தமான படமாகத்தான் இருக்கும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதுவரையிலும் பார்க்காத ஒரு வித்தியாசமான திரைப்படம்தான். தயவு செய்து தவற விடவேண்டாம். இப்படம் நிச்சயமாக ஒரு புதிய திரை அனுபவம்தான்.