காளி வெங்கட் , சிறுவர்கள் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ் , ரதிஷ் , மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா , சாவித்திரி, செல்லா, குபேரன் நடித்துள்ளனர்.
ராசி அழகப்பன் எழுதிய கதைக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் கமலக்கண்ணன்.ஒளிப்பதிவு சுமி பாஸ்கரன், இசை ஜிப்ரான் வைபோதா,தயாரிப்பு சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம் ,சுமி பாஸ்கரன்.
சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்குப் பிறந்த மகன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டு சைக்கிளில் கம்பீரமாக ஊரைச் சுற்றி வலம் வர வேண்டும் என்று நினைக்கிறான். அவனது எண்ண ஓட்டத்தில் அவனது நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த சிறுவனின் கனவு நனவானதா இல்லையா என்கிற ஒரு இழைக் கதையை எடுத்துக்கொண்டு அழகாக அதை திரைக்கதையாக நெய்து மனம் கவரும் வண்ணமிகு திரைச்சீலை போலக் கண் முன் விரித்துக் காட்டுகிறார்கள் அதுதான் குரங்கு பெடல் படம்.
குரங்கு பெடல் என்பது சைக்கிளை முறையாகக் கற்று இருக்கையில் ஏறி அமர்ந்து ஓட்டுவதற்கு முன்பு பழகுநர் பருவத்தில் ஒரு பக்கமாக காலை விட்டு பெடல் செய்து ஓட்டுவதாகும். அந்த பழகுநர் பருவம் அனுபவத்தை கொங்கு மண்ணின் பின்னணியுடனும் கொங்கு மொழியின் இனிமையுடனும் கலந்து உணர்ச்சி உள்ள யதார்த்தமான திரைப்படமாகக் கண்முன் படைத்துக் காட்டியுள்ளார் இயக்குநர் கமலக்கண்ணன்.
இதில் கதை மாந்தர்களாக நடித்துள்ள சிறுவர்கள் அச்சு அசலாக அதே பாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள இயல்பை கேமராவில் படப்பதிவு செய்து படமாக்கி இருக்கிறார்கள். படத்திற்கான பின்புலம் பின்னணி இசை ஒளிப்பதிவு என அனைத்தும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.ஒரு நல்ல படத்திற்கு எல்லாமே இயைந்து அமையும் என்பார்கள் .அப்படித்தான் இப்படத்திற்கும் அமைந்துள்ளது.
மாரியப்பன் என்கிற சிறுவன் தான் பிரதான பாத்திரமாக இருக்கிறான். அவனது தந்தையாக காளி வெங்கட் சிறப்பான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் .படத்தில் முகம் காட்டும் நடிகர்கள் அனைவருமே நம் மனதில் பதிகிறார்கள்.
இதற்கு மேல் இதை விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை குடும்பத்தினருடன் பார்த்து மகிழ வேண்டிய ஒரு திரைப்படம் ‘குரங்கு பெடல்’ .இந்தத் தலைமுறை போன தலைமுறையின் துன்பங்களையும் வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள இதைப் பார்க்க வேண்டும் .படத்தின் கதை எண்பதுகளில் நிகழ்கிறது.
அந்தக் காலத்து தலைமுறையினர் தம் காலத்து நினைவலைகளில் மூழ்குவதற்கும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் இப்படி அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இந்த குரங்கு பெடல் திரைப்படம் உருவாகியுள்ளது.
‘குரங்கு பெடல்’ படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்!ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதனை வெளியிடும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் பாராட்டு.