பொதுவாக நட்சத்திரங்களும் இயக்குநர்களும் ஒரு பாணிக்குள், ஒரு முத்திரைக்குள் அடங்கிக் கொண்டு சிறைப் பட்டு விடுவதுண்டு. அதில் இருந்து வெளிவரத் தயங்குவார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருந்த சந்தானம், குலு குலு படத்தின் மூலம் வெளியே வந்துள்ளார்.
மேயாத மான், ஆடை என வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் குலுகுலு. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
படத்தின் கதை?
உதவி என யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு ஓடோடி உதவி செய்பவர் நாயகன் சந்தானம். அப்படி ஒருநாள் சில இளைஞர்கள் தங்கள் நண்பனைக் காணவில்லை அவரைக் கண்டுபிடித்து தாருங்கள் என அவரிடம் உதவி கேட்டு வருகின்றனர். இறுதியில் நாயகன் காணாமல் போன நண்பரைச் கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை.
இந்தக் கதையை இயக்குநர் ரத்னகுமார் கையாண்ட விதம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.இயக்குநர், தான் ஏற்கெனவே இயக்கி உள்ள படங்களிலிருந்து விலகியும் சந்தானம் ஏற்கெனவே தான் நடித்து வந்த படங்களின் பாத்திரங்களிலிருந்து மாறுபட்டும் பணியாற்றியுள்ள படம் இது. முதலில் அந்த எதிர்பார்ப்பில் வருபவர்களுக்கு ஏமாற்றம் தரலாம். ஆனால் மாற்றம் ஒன்றுதானே முக்கியம்?
ஜிப்ஸி நாயகன் போல் ஒரு வெளிநாட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு நாடோடி இனத்தின் இளைஞனாக வருகிறார் சந்தானம்.
சற்று சீரியஸான எமோஷனலான கதாபாத்திரத்தில் நடித்து சந்தானம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அவர் தன் பாணியிலிருந்து விலகி இருப்பதே ஒரு புதிய மாற்றம் தான்.
நீங்கள் எந்த இடத்தில் சந்தானம் எப்படிப் பேசுவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தால் அப்படி இருக்காது அப்படி ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடித்து உள்ளார்.சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பு படத்திற்குப் பக்கபலமாக இருக்கும்.
நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்த்ரா இரண்டு பேரும் நாயகிகளாக அல்லாமல் கதாபாத்திரமாக வலம் வருகிறார்கள். இருவரும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருப்பதோடு, தேவையான இடத்தில் காமெடியாக நடித்து சிரிக்கவும் வைக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் ப்ரதீப் ராவத், போலீஸாக நடித்திருக்கும் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் படம் முழுவதும் கதையோடு பயணித்து கவனம் பெறுகிறார்கள்.படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை சிரிக்க வைத்தாலும், சந்தானத்தின் கதாப்பாத்திரம் மட்டும் மிக அழுத்தமாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சித்தரிக்கப்பட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
குறிப்பாகப் படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தைத் தாங்கி நிற்கின்றன.
காதல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் புதிய விளக்கத்தை கொடுக்கும் விதத்தில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்
ரத்னகுமார். அவரது திரைக்கதைக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது சந்தோஷ் நாராயணனின் இசை.
படத்தில் பல விஷயங்கள் பாராட்டும் வகையில் அமைந்தாலும் முதல் பாதியில் திரைக்கதை மித வேகத்தில் செல்கிறது. ஆனால் இடைவேளை முதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
மொத்தத்தில் சந்தானம் மற்றும் ரத்னகுமார் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.