
படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ இது ஒரு Heistகாமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதை படத்தின் கதை.
இந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் – 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுட அவரும் ஒப்புக்கொண்டார்.
மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவா விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்.

ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி பாண்டே. சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இவர் கதையின் திருப்புமுனையான கேரக்டர் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.
படத்தில் மூத்த நடிகர் ராதாரவி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கடும் கோடை என்றும் பாராமல் படபிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது.
இந்த படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் பிடிக்கும் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.’ என்றார்.