யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர்,விக்ரமாதித்யன், ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எஸ் ஆர் ரமேஷ்பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ளனர்.
அது ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறண்டு போன கிராமம்.அங்கே வசிக்கும் மக்கள் கருவேல மரம் சூழ்ந்த வெம்மையில் குடிதண்ணீருக்காகப் படாத பாடுபடுகிறார்கள்.அங்கே குடிநீர் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள். ஒரு வழியாக ஒருவர் நீரோட்டம் பார்க்க வருகிறார். அவர் ஓரிடத்தில் நிலத்தடிநீர் இருப்பதாக கூறுகிறார். அது யோகி பாபுவின் வீட்டின் அருகே உள்ள இடம் .அங்கே போர் போடலாம் என்றால் கிணறு வெட்டலாம் என்கிறார் யோகிபாபுவின் தாத்தா விக்ரமாதித்யன்.கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல் கிணறு வெட்டும் போது அடியில் டைனோசரஸ் எலும்புக் கூடு தெரிந்தவுடன் ,பிரச்சினை வேறு மாறியாக திசை மாறுகிறது. தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிந்து அங்கே முகாம் இட்டு அந்த இடத்தையே கைப்பற்றிக் கொள்கிறார்கள்.அந்தக் கிராமத்தின் சூழலே மாறிப்போன நிலையில் அவர்களது குடிநீர்ப் பிரச்சினை தீர்ந்ததா? தொல்லியல் துறையினர் என்ன செய்தார்கள்? என்பதை நகைச்சுவையாகச் சொல்வதுதான் ‘கெணத்த காணோம்’ திரைப்படம்.
இந்தப் படத்தில் யோகிபாபுதான் கதை நாயகனாக வருகிறார்.கோவில் பூசாரியாகவும் இருக்கிறார். சிற்ப வேலைகளும் செய்கிறார் .அவரது கதாபாத்திரத்தைச் சரியாகச் சித்தரித்திருக்கலாம்.இருந்தாலும் தனது கிண்டல் கேலிகளை விட்டுவிட்டு இதில் குணச்சித்திரமாக அவர் வெளிப்பட்டுள்ளார்.சில காட்சிகளில் சிரிக்கவும் பல காட்சிகளில் சிந்திக்கவும் வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், சிறகடிக்கும் கண்களுடன் காதல் பார்வை பார்த்து யோகி பாபுவுடன் இணைகிறார்.பெரிதாக நடிப்பு வாய்ப்பு இல்லை.
யோகி பாபு வின் தாத்தாவாக கவிஞர் விக்ரமாதித்யன் வருகிறார் .அவரது தோற்றமே அவர் நடிக்க வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு பொருந் தியுள்ளது.
தொல்லியல் துறை அதிகாரியாக வரும் ரேச்சல் ரபெக்கா, அவரது உதவியாளராக வரும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் பாத்திரங்கள் பொருத்தமான தேர்வு.
உள்ளூர் வாசியாக நடித்துள்ள ஹலோ கந்தசாமி,அலட்டிக் கொள்ளாமலேயே இயல்பான வசனங்களின் மூலம் சிரிக்க வைக்கிறார்.
மாவட்ட ஆட்சியராக வரும் ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக வரும் நடிகை, ஊர்த் தலைவராக வரும் நடிகர் உள்ளிட்ட அனைவரும் மண் சார்ந்த மனிதர்களாக வந்து இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.
வெக்கை மணக்கும் பூமியை அழகாக ஒளிப்பதிவு செய்து கதாபாத்திர உணர்வுகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை அம்மக்களின் உணர்வோட்டத்தைக் கடத்துகின்றன.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர்ப் பிரச்சினையில் தவிக்கும் மக்களின் தசிக்கும் வாழ்க்கையை நகைச்சுவையோடு பதிவு செய்துள்ளார் .சில தெரிந்த முகங்களை தவிர மற்ற பாத்திரங்களில் வருபவர்களை மண்ணின் மைந்தர்களாகத் தேர்வு செய்து நடிக்க வைத்து படத்தின் இயல்புக்கு அழகு கூட்டி உள்ளார்.
ஆனால் ராமநாதபுரம் என்ற பகுதிக்குப் பதிலாகத் திருவண்ணாமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது போல் உள்ளது. அந்த மக்கள் பேசும் மொழியும் உடல் மொழியும் ராமநாதபுரம் பகுதிக்குப் பொருத்தமாக இல்லை என்பது ஓர் உறுத்தல்..
மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’ சிரிக்க மட்டுமல்ல.


