‘கேம் சேஞ்சர்’ திரைப்பட விமர்சனம்

ராம் சரண், கியாரா அத்வானி,சமுத்திரகனி , ஜெயராம்,ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில், மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஷங்கர் இயக்கி உள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

இயக்குநரின் சங்கரின் கற்பனையில், ‘ஓர் அநியாயம் அதனை எதிர்த்து நிற்கும் நியாயவான் ஒருவர்’ என்கிற ஒரு வரி மாயக்கதையில் இதுவும் ஒன்று.

இந்த கேம் சேஞ்சர்  ஊழல் செய்யும் அமைச்சரை எதிர்த்து நிற்கும் நேர்மையான அதிகாரியின் கதையாக வந்துள்ளது.இயக்குநர் ஷங்கர் வழக்கமாக நல்ல கதையையும் அதற்குரிய பிரம்மாண்டத்தையும் கலந்து கொடுத்து படங்கள் இயக்குவார்.இப்படத்தில் கதையை விட பிரம்மாண்டத்தை நம்பி இறங்கியுள்ளார்.

சரி படத்தின் கதை என்ன? ராம்சரண் ஒரு கலெக்டர். ஐபிஎஸ் முடித்து போலீஸ் வேலையில் பணியாற்றி பிறகு கலெக்டர் ஆனவர்.இப்படி சொல்லும் போதே அவருக்குள் இருக்கும் முரட்டுத்தனம் புரியும். அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு புதிய கலெக்டராக வருகிறார்.ஆந்திராவின் முதல்வராக ஸ்ரீகாந்த் இருக்கிறார். அவர் அடுத்த சில மாதங்களுக்காவது நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அவரது இளைய மகன் எஸ் ஜே சூர்யா ஓர் அமைச்சர். அவரோ ஊழலில் திளைக்கிறார்.முதல்வரின் விருப்பப்படி நல்லாட்சிக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கிறார் கலெக்டர் ராம் சரண். இந்த விஷயத்தில் கலெக்டர் ராம்சரணுக்கும் அமைச்சர் எஸ் ஜே சூர்யாவிற்கும் பகைமை வளர்கிறது. மோதல் வெடிக்கிறது .முடிவு என்ன என்பது தான் கதை.இந்தக் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார்.ஷங்கரின் பழைய படங்களின் பாதிப்பில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.இந்த கதையை ஷங்கரே எழுதி விடுவாரே என்று தோன்றுகிறது.

ஷங்கரின் படத்தில் இருக்கும் வணிக மூலங்கள்,வெற்றிக்கான சூத்திரங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளன.ஐஏஸ் அதிகாரியாக படம் முழுவதும் அதிரடி காட்டியிருக்கிறார் ராம் சரண். அவரது சுறுசுறுப்பான, பரபரப்பான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.அவருக்கான வணிக வியாபாரத்தை விஸ்தரித்துக் காட்டுகின்றன இந்தப் படத்தின் பிரம்மாண்ட காட்சிகள்.ராம்சரண் ஆவேசம் பொங்கும் காட்சிகளில் தந்தையைப் போன்று தோன்றுகிறார்.முன் கதையாக விரியும் காட்சிகளில் கிராமத்துப் போராளியாக வந்து பார்வையாளர்கள் மனதில் தங்கி விடுகிறார்.

பொதுவாக சினிமாவில் கதாநாயகனை முன்னிறுத்தும் ஆக்சன் படங்களில் கதாநாயகிக்கு சரியான இடம் அளிக்கப்படுவதில்லை.வியாபாரத்திற்கும் நட்சத்திர நோக்கத்திற்கும் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.அந்த டெம்ப்ளேட்டில் தான் கியாரா அத்வானிக்கு படத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இரண்டு மூன்று பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள்,வழக்கமான முக பாவனைகள் என அவருடைய வேலைகளைச் செய்து விட்டு சென்றுள்ளார்.

முன் கதையில் ராம் சரண் மனைவியாக வரும் அஞ்சலிக்கு அழுத்தமான முக்கியமான கதாபாத்திரம்.தொடங்கும்போது அவரா இவர் என்று வியக்கவைக்கிறார் தோற்றத்தில்.

எதிர் நிலை நாயகனாக எஸ்ஜே சூர்யா. ஏற்ற பாத்திரத்தில் அமர்க்களப்படுத்துகிறார்.சற்று மிகை நடிப்பு என்றாலும் திரை அரங்க அனுபவத்திற்கு அவர் உதவுவார். ஆனாலும் ஒரே மாதிரியான பாத்திரங்களாகவே அவர் வருவதாகத் தோன்றுகிறது.ஆனாலும் இது தெலுங்கு ரசிகர்களைக் குறி வைத்து எடுத்திருக்கப்படக் கூடும்.

முதல்வராக வரும் ஸ்ரீகாந்த்,அவருடைய நண்பர் சமுத்திரக்கனி இருவரும்தான் படத்தில் இயல்பாக நடிக்க முயன்றுள்ளவர்கள் .சூர்யாவின் அண்ணனாக வரும் ஜெயராம் சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார். கலெக்டரின் பின்னால் வரும் அதிகார பரிவாரங்கள் போல் துணை நடிகர்கள் பட்டியல் நீள்கிறது.

தமன் இசையில் படம் முழுவதும் வணிக வாசனை மூக்கைத் துளைக்கிறது. ஜருகண்டி’ பாடல் மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் வியக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் முழக்கம்.படத்தின் கிளைமாக்ஸ் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிகை ரகம்.

தெலுங்கு ரசிகர்களை முன்னிட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது சற்று மசாலா நெடி தூக்கலாக உள்ளது.
பிரம்மாண்டத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஷங்கர் அதை ஈடுகட்ட முயன்று உள்ளார் .தன்பாணியில் அப்படி இன்னொரு படத்தை அளித்துள்ளார்.