பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கைலாவைத் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சர்வதேச கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன்.
அறிமுக இயக்குநரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கைலா’ எப்படி ?
நாயகி தானா நாயுடு ஓர் எழுத்தாளர்.பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுத விரும்புகிறார். நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீடு ஒன்றில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.இது அவருக்குத்தெரிய வருகிறது. ஓர் அம்மாவும், சிறுமியும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த வீட்டில் அவர்களது ஆவி இருப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் நம்புகிறார்கள். அந்த வீட்டு அருகே இரண்டு தொழிலதிபர்கள், ஒரு காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் சாகிறார்கள். காரணம் பேய்தான் என்று ஊரே பேசுகிறது.
காவல் துறை அதிகாரியான அன்பாலயா பிரபாகரன், அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நாயகி தானாவும் இது குறித்த ஆய்வில் இறங்குகிறார். இறுதியில், அந்த வீட்டில் பேய் இருப்பது நிரூபிக்கப்பட்டதா, அந்த கொலைகளுக்கான பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதி.
அறிமுக நடிகை தானா நாயுடு, அமைதியாக நடிப்பதோடு அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். ஆனால், எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவம் காட்டுவது சலிப்பூட்டுகிறது.
படத்தை இயக்குவதோடு வில்லனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசனுக்கு வில்லனுக்கு ஏற்ற தோற்றம்தான் .ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லை.
கெளசல்யா, குழந்தை நட்சத்திரம் கைலா, அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரங்களும் கச்சிதம்.
பரணி செல்வதின் ஒளிப்பதிவு திகில் படத்திற்கு ஏற்றதை நிறைவாகக் கொடுத்திருக்கிறது. ஸ்ரவனின் இசையில் பின்னணி இசையும் நம்மை திகிலடைய செய்கிறது.
படம் பார்க்கும் ரசிகர்களை சற்றுப் பயமுறுத்துவதோடு, அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். தொடர் கொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற புதிரை இறுதி க்ளைமாக்ஸில் அவிழ்ப்பது எதிர்பாராதது. ஆனாலும் படத்தில் ஒரு போதாமை நிலவுகிறது.பட்ஜெட் காரணமாக இருக்கலாம். தான் சொல்ல வந்ததை இயக்குநர் முடிந்தவரை திருப்தியாகச் சொல்லியிருக்கிறார்.