‘கொம்பு சீவி’ திரைப்பட விமர்சனம்

சரத்குமார்,சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், தர்னிகா,காளி வெங்கட்,ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர்,மதன் பாப் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுதி இயக்கி உள்ளார் பொன்ராம். ஸ்டார் சினிமாஸ் சார்பில் தயாரிப்பு முகேஷ் டி.செல்லையா.

படத்தில் கதை என்ன?

வைகை அணை கட்டுவதற்காகக் காலி செய்யப்பட்ட ஒரு கிராமத்து மனிதர்களின் கதையாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.அப்படி வைகை அணை நீரில் மூழ்கி இருக்கும் ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் தான் சரத்குமாரும், சண்முகப் பாண்டியனும்.ரொக்கப்புலி என்கிற சரத்குமார் பாண்டி என்கிற சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறார், பாண்டி ,சரத்தை மாமா என்று கூறிப்பழகுகிறார்.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சரத் தனது அடாவடித்தனத்தால் அந்த பகுதியில் செல்வாக்காக இருக்கிறார். அவர்தான் அங்கு அனைத்துமாக இருக்கிறார்.வைகை அணைக்கட்டு மீன் பிடிக்கும் ஏலத்தை யாரையும் எடுக்க விடாமல் சாத்தே எடுக்கிறார்.வேறு வேறு யாரும் எடுத்தாலும் அங்கே இயங்க முடியாது.அது மட்டுமல்ல கஞ்சா கடத்துவது போன்ற குற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார். காரணம் கேட்டதற்கு எங்கள் ஊர் நீரில் மூழ்கி விட்டது,மக்கள் கஷ்டப்படுகிறார்கள் வேறு  என்ன செய்வது என்று சொல்கிறார். இப்படிப்பட்ட சூழலிலதான் சரத் -சண்முக பாண்டியன் இருவரும் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி சுஜித் சங்கருடன் மோதல் ஏற்படுகிறது. எஸ்பி ஒரு பிடிவாதக்கார ஆணவக்கார குணச்சித்திரம் கொண்டவர். அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா போட்டியும் அதன் விளைவு என்ன என்பதும்தான் 130 நிமிடங்கள் கொண்ட ’கொம்பு சீவி’ படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி அடிதடி ஆக்சன் என்று களை கட்டுகிறது.இரண்டாவது பாதி செண்டிமெண்ட் எனக் காட்சிகள் செல்கின்றன.

படத்தைப் பெரிதும் ஆக்கிரமித்தும் பார்ப்பவர்கள் மனதில் இடம் பெறும் வகையிலும் சரத்குமாரின் ரொக்கப்புலி பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவரும் வித்தியாசமான தோற்றம் மதுரை மொழி அடிதடி சென்டிமென்ட் நகைச்சுவை என்று பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்.
பாண்டியாக வரும் சண்முகப் பாண்டியன் பாத்திரம் ஆரம்பத்தில் ஒட்டாவிட்டாலும் பிறகு அந்தப் பாத்திரம் பருத்திவீரன் கார்த்தி போல ஒரு போக்கிரியாக பார்ப்பவர்கள் மனதில்  ஒட்டிக் கொள்கிறது . அந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கண்களும், அடிதடிக் காட்சிகளும்,போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்னாவுடன் கலாய்க்கும் காட்சிகளும் அவருக்கு பாஸ் மார்க் வாங்கிக் கொடுத்து விடுகின்றன.தர்னா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருகிறார். களையான தோற்றம் குறும்பான நடிப்பு என்று காக்கி சட்டைக்குள்ளும் ஒரு கதாநாயகி போல கவர்கிறார்.எஸ் பி ஆக பிடிவாதமும் திமிரும் கொண்ட பாத்திரத்தில் சுஜித் சங்கர் நடித்துள்ளார். அவரும் அவர் பங்குக்கு தனது எதிர்மறை நடிப்பில் வீரியம் காட்டியுள்ளார்.
ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக வரும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான்,லாரி டிரைவராக முனீஷ் காந்த்,சரத்குமார் உடன் சுற்றும் அல்லக்கையாக கல்கி ராஜா ஆகியோர் தங்கள் நகைச்சுவைக்கான பங்கைச்  செய்துள்ளனர்.காட்டு கருப்பன், கஞ்சா கடத்தல், ஆந்திரா பயணம் என்று வரும் காட்சிகள் கலகலப்பு.

படத்தில் சரத்குமாருக்கும் சண்முக பாண்டியனுக்கும் இடையில் நல்ல பாத்திர புரிந்துணர்வு நிலவுகிறது.

இந்தப் படத்தை இயக்கியுள்ள பொன்ராம் ஏற்கெனவே வணிகரீதியிலாக வெற்றி பெற்ற ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’,’ ரஜினி முருகன்’ போன்ற படங்களை இயக்கியவர்.கலகலப்பு வணிக வெற்றி இவற்றை மட்டுமே குறிவைத்து தர்க்கங்களைப் புறந்தள்ளிவிட்டு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அம்மா என் தங்கக் கனி, உசிலம்பட்டி ராணி , வஸ்தாரா போன்ற விதவிதமான ரகங்களில் ஒரு நல்ல ஆல்பத்தைக் கொடுத்துள்ளார் . விதவிதமான பாடல்கள் படத்திற்குப் பலம். இளையராஜாவின் குரலிலும் பாடல் ஒலிக்கிறது.

இயக்குநர் பார்வையில் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்மின் கேமரா சுழன்றுள்ளது.
1990களில் நடக்கும் இந்தப்படத்தின் கதை 2025-ல் முடிகிறது.

தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.மொத்தத்தில்  வணிக ரீதியான சகல மசாலாக்களுடன் கலந்து உருவாகி இருக்கும் இந்தப்படம் திரையரங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.