‘சட்டம் என் கையில்’ திரைப்பட விமர்சனம்

சதீஷ் , அஜய்ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, Kpy சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம்தாஸ்  நடித்துள்ளனர்.

பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா, இசை- எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்.

நகைச்சுவை நாயகர்கள் கதாநாயகனாக மாறும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் அவர்களைச் சுமந்து பாய்ந்து சென்ற குதிரையே குப்புறத் தள்ளிவிட்டு விடும். சட்டம் என் கையில் படத்தில் கதை நாயகனாக மாறியிருக்கும் சதீஷ் தனது பாத்திரத்தைக் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளார். ஏனென்றால் இது ஒரு க்ரைம் திரில்லர் படம் .அந்த வகைப் படத்திற்கான அம்சங்கள் இடம் பெற்ற வகையில் அவர் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

சரி படத்தின் கதையைப் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் தொடங்கி முடிகிற மாதிரியான கதை. சதீஷ் ஏற்காடு நோக்கி காரை ஓட்டிச்சென்று கொண்டிருக்கிறார். இடையில் சிலர் அவருக்கு போன் செய்கிறார்கள்.அதனால அவர் பதற்றம் அடைகிறார் பதற்றம் காரின் வேகத்தில் காட்டப்படுகிறது. காரை அதிவேகமாக ஓட்டிச்செல்கிறார். அப்போது பைக்கில் குறுக்கே வருகிறார் ஒருவர். அவர் மீது மோதிவிட, வந்தவர் அவர் அங்கேயே இறந்துவிடுகிறார். மேலும் பரபரப்பான சதீஷ்,அவரது சடலத்தை எடுத்து கார் டிக்கியில் போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்கிறார். போகிற வழியில் ஏற்காடு பகுதி துணை ஆய்வாளர் பாவல் நவகீதன், சதீஷை குடித்து விட்டு கார் ஓட்டியதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறார். அப்போது ஓர் இளம் பெண் கொலை பற்றி உதவி ஆய்வாளர் அஜய்ராஜுக்குத் தகவல் வருகிறது. இதை, உடனே கண்டுபிடித்து முடிக்க மேலிட உத்தரவு.இதனால், இந்த கொலை வழக்கை சதீஷ் மீது போட்டு வழக்கை முடிக்கத் திட்டமிடுகிறார் பாவல் நவகீதன்.அதன் பிறகு என்ன நடந்தது, கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார், டிக்கியில் உள்ள சடலம் என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுக்கு கிடைக்கும் விடையே, சட்டம் என் கையில் படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்து  மசமசவென்று சில காட்சிகள் சுவாரசியமில்லாமல் தான் சென்று கொண்டிருக்கும். அந்த பைக் ஆக்சிடென்ட் காட்சிக்குப் பிறகு படம் சற்றுச் சூடு பிடிக்கிறது. அதன் பிறகு க்ளைமாக்ஸ் நெருங்கும்போது மேலும் சுவாரசியமாகிறது. இளம் பெண் கொலை, பைக் ஆக்சிடென்ட் என ஒவ்வொன்றாக நிகழ்ந்த சம்பவங்களின் மர்மங்களின் முடிச்சுகள் அவிழும்போது ஒரு முழுமையான க்ரைம் த்ரில்லர் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.  சில காட்சிகள் யூகிக்க முடிந்தாலும் சொல்லப்பட்ட விதம் சுவாரசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

இயக்குநர் சாச்சி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடப்பவற்றையும், காவல் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதல் காட்சிகளையும் அழகாக வடிவமைத்துள்ளார்.அந்தப் பாத்திரச் சித்தரிப்புகள் திரைக்கதையின் வேகத்தைக் கூட்ட உதவியுள்ளது.

நடிகர்களைப் பொறுத்தவரை சதீஷ் வழக்கமான நடிப்பினைத் தவிர்த்து, வித்தியாசம் காட்டி, ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.கொஞ்சம் கூட நகைச்சுவை நிறம் காட்டாமல் நடித்துள்ளது சிறப்பு. அஜய்ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, Kpy சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம்தாஸ்  என அனைவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு இயல்பான நடிப்பை  வழங்கியுள்ளனர்.

‘சட்டம் என் கையில்’ திரைப்படம், ஓஹோ ரகமில்லாவிட்டாலும் ஓகே ரகம் என்று கூறத் தகுதி கொண்டது. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.