திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கெத்து’. எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் உதயநிதி, எமிஜாக்சன், ராஜேஷ், கருணாகரன், விக்ராந்த், இயக்குநர் திருகுமரன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் உதயநிதி பேசும்போது, ‘நான் இதுவரை கமர்ஷியல், குடும்பப்பாங்கான படங்களில் மட்டும் நடித்திருந்தேன். முதல் முறையாக ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறேன். முதலில் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் காமெடியாக சென்றது. பின்னர் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் பயந்தேன். பிறகு பழகிவிட்டது. வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் நானும், விக்ராந்தும் சண்டை போடும் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் எங்கள் இரண்டு பேரையும் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவழியாக்கிவிட்டார். இரண்டு பேருக்கும் காயம் எல்லாம் ஏற்பட்டது.
இப்படத்தின் கதைக்கு வில்லனாக, இந்தி நடிகர்கள் அல்லது பிற மொழி நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் கூறினார். ஆனால், நான் தான் இந்த கதாபாத்திரத்திற்கு விக்ராந்த் பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்தேன். விக்ராந்த்தை கேட்டபோது, என்னை டம்மி வில்லனாக்கி விடாதே என்று கேட்டார். அதற்கு நான், வில்லனை ஹீரோவாக காண்பித்தால் ஹீரோவுக்கு வேலை இருக்காது என்றேன்.
கருணாகரனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது, எமிஜாக்சனை காப்பாற்றினார். சத்யராஜ் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகருடன் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.
இயக்குநர் திருகுமரன் பேசும்போது, ‘நான் இயக்கிய மான் கராத்தே படத்தில் உதயநிதிதான் நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அடுத்ததாக ‘கெத்து’ படத்தின் கதையை உருவாக்கிய பின்பு உதயநிதிதான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நடிக்க வைத்துள்ளேன். ஒரு சண்டைக்காட்சியில் உதயநிதி ஒரே டேக்கில் நடித்து முடித்தார். உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். முதலில் எமி ஜாக்சனுக்கு தமிழில் வசனம் சொல்ல கஷ்டப்பட்டேன். பின்னர் நாளடைவில் தமிழில் சொன்னால் கூட புரிந்துக் கொண்டார்’ என்றார்.
நிகழ்ச்சியில் நாயகி எமிஜாக்சன், கருணாகரன், விக்ராந்த் , இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,ஒளிப்பதிவாளர் சுகுமார்,பாடலாசிரியர்கள் ஆகியோரும் பேசினர்.