2005ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சந்திரமுகி 2 ‘ ஆக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ளது.
படத்தின் கதை என்ன?
ராதிகா ஒரு பெரிய பணக்காரர். அவரது குடும்பத்தில் அடுத்தடுத்து எதிர்பாராத விபத்துகள் உயிராபத்துகள் என்று நிகழ்கின்றன.
காரணமும் தீர்வும் தெரியாமல் தவிக்கிறது குடும்பம். வசதிகள் உள்ளவர்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் குலதெய்வத்தை மறந்து விடுகிறார்கள் .எனவே குடும்பமாக குலதெய்வ கோயிலைப் புனரமைத்துவிட்டு, அங்கே பூஜை செய்து வழிபட வேண்டும் என்று தீர்வு சொல்லப்படுகிறது. கோயில் பழுது பார்ப்பு, புனரமைப்பு வேலைகள் முடியும் வரை வேட்டையபுர அரண்மணையில் தங்குவது என்று ராதிகா மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர்.
அந்த அரண்மனையோ பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கிறது. பூட்டிக் கிடக்கும் அந்த அரண்மனையில் புகுந்து கொண்டுள்ள அமானுஷ்ய சக்தி என்ன? நுழைந்த பிறகு, அரண்மனையில் இருந்த சந்திரமுகி, வேட்டையன் ஆவிகள் வெளியே வருகின்றன. அதிர்ச்சிக்கு ஆளான ராதிகா குடும்பம் ஆவிகளை எப்படி எதிர்கொள்கிறது? பின் விளைவுகள் என்ன என்பதுதான் கதை.
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு பாண்டியன், வேட்டையன் என இரண்டு பாத்திரங்கள்.அதன் பின்னணியும் தொடர்பும் பற்றி ஒரு முடிச்சு .லாரன்ஸ் ஏற்றுள்ள இரண்டு பாத்திரங்களில் வேட்டையன் பாத்திரத்தில் அவர் மேலோங்கித் தெரிகிறார் .ரஜினியின் மேனரிசமும் கூட வெளிப்படுகிறது.ரஜினி நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அப்படிச் செய்தார்களா?
நடிகைகள் லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா எனப் பலர் இருந்தாலும் லட்சுமி மேனனின் திவ்யா பாத்திரத்திற்கு மட்டும் எடை கூட்டி சற்றுக் கூடுதல் கவனம் காட்டியுள்ளார்கள்.இடைவேளைக்கு முன்பு அவருக்குள் புகுந்து கொண்டு சந்திரமுகி போடும் ஆவேச ஆட்டம் ரணகளம். லட்சுமிமேனன் சிறப்பாகவே நடிப்பில் மிளிர் கிறார்.மேலும் கூட அவரிடம் இருந்து கூடுதல் காட்சிகள் வைத்து நடிப்பை வரவழைத்திருக்கலாம்.
ராதிகா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், அவர்களின் மனைவிகள், குடும்பங்கள், பிள்ளைக்குட்டிகள் , மனோபாலா, ஆர்.எஸ். சிவாஜி, வேலையாட்கள், சித்தர், சாமியார் என ஏராளமான கதாபாத்திரங்கள் அணிவகுகின்றன. இப்படிப் பெரும்படையையே வைத்து வேலை வாங்கி உள்ளார் இயக்குநர் பி.வாசு.முதல் பாகத்தில் நகைச்சுவையின் சதவீதத்தை அதிகப்படுத்தி வெற்றி பெற்ற இயக்குநர் இரண்டாம் பாகத்தில் அமானுஷ்யத்தின் சதவீதத்தை கூட்டி உள்ளார்.
பழைய சந்திரமுகி முருகேசனாக வருகிறார் வடிவேலு . முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் வடிவேலு மட்டுமே இதில் நடித்துள்ளார். அவருக்கு இன்னும் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பேயின் கதையைச் சொல்லும் லாரன்ஸ் அந்த நகைச்சுவைப் பகுதியையும் அவரிடம் இருந்து கைப்பற்றி விடுகிறார். கங்கணா ரணாவத் என்கிற நடிகைக்கு விளம்பரங்களில் கொடுத்த முக்கியத்துவம் படத்தில் இல்லாதது ஓர் உறுத்தல். நடனக் காட்சிகளிலும் நாய்களுடன் ஆவேசமாக சண்டையிடும் காட்சிகளிலும் ரகளை செய்து
அவரும் முடிந்தவரை ஜமாய்த்துள்ளார்.
ஆஸ்கார் நாயகன் கீரவாணியின் இசையில் பாடல்களில் கிளாசிக் டச்சில் வருகிற ‘ஸ்வாகதாஞ்சலி’யும், ‘ரா… ரா…’ பாடலின் மறு உருவாக்கமும் ரசிக்க வைப்பவை.
படத்தில் ஆரம்பத்தின் சண்டைக் காட்சிகள் முதல் கிளைமாக்ஸ் சண்டைகள் பூஜைகள் வரை கணினி தொழில்நுட்ப வெளிப்பாடுகளின் ஆதிக்கம் அதிகம்.படத்தின் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் விழிகளை விரிய வைக்கின்றன.கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணம். கண்கொள்ளாத விசாலமான காட்சிகளை ஒளிப்பதிவு செய்து ஆர்.டி.ராஜசேகர் தன் திறமையைக் காட்டியுள்ளார்.
சந்திரமுகி முதல் பாகத்தில் உளவியல் பிரச்சினையைக் கூறிய பி. வாசு, இதில் அதைக் கைவிட்டு,இதில் முழுக்க முழுக்க அமானுஷ்யத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதில் முன் கதையில் ஓர் வரலாற்றுக் கதையை யாரும் எதிர்பார்க்காத இடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கொடுத்துள்ளார் இயக்குநர் பி. வாசு. அந்த முன்கதை படத்திற்குப் பெரிய பலமாக நின்று தூக்கி நிறுத்துகிறது. அதில் செங்கோட்டையன் பாத்திரத்தில் வரும் ராகவா லாரன்சும் சந்திரமுகி பாத்திரத்தில் வரும் கங்கனா ரணாவத்தும் சண்டைக்காட்சியில் மட்டுமல்ல நடிப்பிலும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
ஏராளமான நட்சத்திரங்கள், கண்ணைக்கவரும் அரங்க அமைப்புகள், திரையை நிறைக்கும் பாடல் காட்சிகள், மிரள வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் என ஒரு முழு நீள வணிகப் படத்தினை வழங்கியுள்ளார் இயக்குநர் பி.வாசு. லைக்காவின் தயாரிப்பு பிரமாண்டத்துக்கு உத்திரவாதம் தருகிறது. மொத்தத்தில் அனைவருக்கும் ஏற்ற அமானுஷ்யம் கலந்த பொழுதுபோக்குச் சித்திரம்.