இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படம் சன் டிவியில் வெளியாவதாக கம்பீரமான அறிவிப்பைக் கேட்டிருப்பார்கள்.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நேரடியாகவே சன் தொலைக்காட்சியில் வெளியாகும் படம் தான் ‘நாங்க ரொம்ப பிஸி’.
சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் – சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ்.
டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.
இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும்.
கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில்
அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான் .அதுமட்டுமல்ல
செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான்.
முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது.
படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,
“கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தை எடுக்கும் போது எனக்குப் பல சவால்கள் இருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2016-ல் கொண்டுவரப்பட்டது.
அந்தக் காலத்தில் கதை நடப்பதால் யார் முகத்திலும் மாஸ்க் போட்டு இருக்கக் கூடாது.
ஆனால் படப்பிடிப்பு நடைபெறுவதோ கொரோனா காலத்தில்.
நாங்கள் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்திய போது எவ்வளவுதான் கவனமாகப் பார்த்துக் கொண்டாலும் ஆங்காங்கே மாஸ்க் அணிந்தவர்கள் எங்காவது பின்னணியில் தென்படுவார்கள் யாரோ எங்கோ தெரிந்தார்கள் அவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு பல இடங்களில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.ஏன் பரபரப்பான சாலைகளில் கூட படப்பிடிப்பு நடத்தினோம்.இது ஒரு சவாலான விஷயம்.
சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சவாலான ஒன்று. அதை நாங்கள் திட்டமிட்டபடி 30 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறோம் என்றால் எங்கள் குருநாதர் சுந்தர்.சி அவர்களிடம் நாங்கள் கற்ற குறித்த நேரத்தில் எதையும் முடிப்பது என்கிற பாடம் தான் காரணம்.
படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் .அவர்கள் அத்தனை பேரின் திறமைக்கும் தீனி போட்டு அவர்களை நடிக்க வைத்துக் கையாள்வது என்பது பெரிய சவால் . அதுவும் எங்கள் இயக்குநரிடம் நாங்கள் கற்றது தான்.
இந்தக் கொரோனா காலத்தில் எந்த வேலையும் செய்ய முடியாமல் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது அனைவரும் சொல்ல விரும்பிய வார்த்தைதான் ‘நாங்க ரொம்ப பி ஸி’ அதுதான் படத்தின் தலைப்பாக உள்ளது.
இந்த படம் தீபாவளி நேரத்தில் அனைத்து மன அழுத்தங்களிலிருந்து பார்ப்பவர்களை விடுதலை செய்யும்படியான முழுநீள நகைச்சுவைப் படமாக இருக்கும்.குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து பார்க்கும்படியான அத்தனை அம்சங்களும் கலந்த படம் இது என்பதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பத்ரி.