வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், மைம் கோபி, சஷாங்க் மற்றும் பலர் நடித்துள்ளனர்.அனில் கார்ட்ஸ் இயக்கியுள்ளார். இசை கோபி சுந்தர், ஒளிப்பதிவு ராகுல் ஸ்ரீவத்சவ்.
வரலட்சுமி சரத்குமாரும் கணேஷ் வெங்கட்ராமனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . அதனால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் .தனியே வசிக்கும் அவர்களுக்குப் பள்ளி செல்லும் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் கணேஷ் வெங்கட்ராமனுக்கும் உடன் பணியாற்றும் பெண்ணுக்கும் ஒரு காதல். அல்ல அது ஒரு காமத் தொடர்பு.இதைப் பார்த்துவிட்டு வரலட்சுமி உடனே வீட்டை விட்டு வெளியேறுகிறார். மென்பொருள் துறையில் இது எல்லாம் சகஜம் என்கிறார் கணேஷ். பிடிவாதமாக வரலட்சுமி வெளியேறிடுகிறார் .விவாகரத்தும் கேட்கிறார். குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்கிறார் கணேஷ். ஒருவரை ஒருவர் பழி தீர்க்க நினைக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அந்த பெண் குழந்தை வரலட்சுமிக்கு பிறந்த குழந்தை அல்ல, அவருக்குப் பிறந்த குழந்தை இறந்து விட்டதால் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது என்று கூறுகிறார் கணேஷ்.வரலட்சுமியும் உண்மையை அறிய விசாரிக்கிறார். அது உண்மை என்று தெரிகிறது. அதே நேரம் அந்தக் குழந்தையைத் தேடி ஒரு மன நோயாளியைப் போல் மைம் கோபி வரலட்சுமியைத் தொடர்ந்து வருகிறார். ஆள்மாறாட்டத்தில் மாற்றப்பட்டது அவரது குழந்தை தான் என்று புரிகிறது .வளர்த்த பாசம் விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. முடிவு என்ன? என்பதுதான் கதை.
இப்படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவர் இப்போது அலங்கார கதாநாயகி போல் நடிக்காமல் ஏதாவது குணசித்திரம் கலந்த நேர்நிலை எதிர்மறை பாத்திரங்களில் நடிக்கிறார். எனவே அவருக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிக்க முடியாது .இதிலும் அப்படித்தான் ஒரு குழந்தைக்குத் தாயாக சுயமரியாதை கொண்ட மனைவியாக சொந்தக்காலில் நிற்கும் பெண்ணாக அந்தப் பாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். கணேஷ் வெங்கட்ராமனும் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார்.உருட்டி மிரட்டிப் பார்க்கும் விழிகளோடு மைம்கோபியும் நன்றாக வில்லத்தனம் காட்டியுள்ளார்.
கதை சிக்கல் இல்லாமல் தெளிவாக இருப்பதால் தொழில்நுட்ப ரீதியாக எந்த வித்தைகளும் படத்தில் காட்டப்படவில்லை. கதைக் கேற்ற வகையில் ஒளிப்பதிவும் இசையும் துணையாக உதவியுள்ளன.சில காட்சிகள் இதன் ,மூலம் தெலுங்கு என்பதைக் காட்டிக்கொடுக்கின்றன. இருந்தாலும் உணர்ச்சி என்பது மொழிகடந்தது என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.
குடும்பத்துக்கு ஏற்ற கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது. இப்படத்தைக் குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் விரும்பிப் பார்க்கலாம்.செண்டிமெண்டல் விரும்பிகளுக்கு இந்தப் படம் பிடிக்கும்.