‘சப்தம்’ திரைப்பட விமர்சனம்

ஆதி,லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்எஸ் பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர். அறிவழகன் இயக்கி உள்ளார்.எஸ் தமன் இசையமைத்துள்ளார்.7ஜி பிலிம்ஸ் சார்பில் 7ஜி சிவா தயாரித்துள்ளார்.

கதை குன்னூரில் நடக்கிறது. அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. ஏனென்றால் அங்கே மூன்று மாணவர்கள் மர்மமாக இறக்கிறார்கள்.அங்கே உண்மையிலேயே அமானுஷ்யமிருக்கிறதா அல்லது கதை  விடுகிறார்களா என்று ஆராய்வதற்காக கல்லூரி நிர்வாகம் அழைப்பதால் மும்பையில் இருந்து நாயகன் ஆதி அங்கே வருகிறார்.

ஆவி பற்றிய விசாரணைகளில் இறங்கி மர்ம மரணங்களின் காரணத்தை ஆராய்கிறார்.இந்த பயணத்தில் அவருக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன.அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரும் பட்ட மேற்படிப்பு மாணவி  ஆன லட்சுமி மேனனை ஒரு அமானுஷ்ய சக்தி பின் தொடர்கிறது. இதை ஆதி கண்டுபிடிக்கிறார்.அதன் உள்ளே சென்ற ஆழமாக ஆராய்ச்சி செய்யும் போது இங்கே 42 ஆத்மாக்கள் உலவுவதை அறிய முடிகிறது. இந்த 42 பேர் யார் அவற்றுக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதைப் பற்றிச் சொல்வதே சப்தம் படத்தின் மீதிக்கதை.

நடிகர் ஆதி எப்போதும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். வாய்ப்பு வருகிறது. என்பதற்காக நடிப்பவர் அல்ல. அப்படித்தான் இந்தப் பாத்திரத்தையும் உணர்ந்து நடித்துள்ளார்.கச்சிதமான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.ஆவியால் பாதிக்கப்பட்டவராக லட்சுமி மேனன் வருகிறார்.அந்தப் பாத்திரம் வழக்கம் போலத் தோன்றினாலும் தனது நடிப்பால் அதைப் பளிச்சிட வைத்துள்ளார்.

சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பாத்திரங்களில் வருகிறார்கள்.இவர்கள் அனைவருமே இரண்டாம் பாதியில் வந்து கதைக்கு எடை கூட்டி உள்ளார்கள்.

சிரிக்க வைப்பதாக நினைத்து ரெடின் கிங்ஸ்லி வெறுப்பேற்றுகிறார்.எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா ஆகியோர் மிகச் சில காட்சிகளில் நடித்திருந்தாலும், மனதில் பதிகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், திகில் படங்களுக்கு ஏற்ற வண்ணத்தைச் சரியாகப் பயன்படுத்தி படப்பதிவு செய்து காட்சிகளை ரசிக்கும்படி மாற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் தமனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் .படமே ஒலியை மையமாக வைத்துள்ளதால் அவரது பங்கு பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஒலிக்கலவை செய்திருக்கும் டி.உதயகுமார் மற்றும் ஒலி வடிவமைப்பு செய்துள்ள சிங்க் சினிமா படத்தில் நல்ல பங்களிப்பைச் செய்துள்ளனர். ‘ஈரம்’ படத்தில் நீரை ஒரு உயிராகக் காட்டி நம்மை மிரள வைத்த இயக்குநர் அறிவழகன், இதில் ஒலி அலைகளை வைத்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மிரள வைத்திருக்கிறார்.சத்தங்கள் மூலம் ஆன்மாக்களை உணர வைத்துள்ளார்.

மொத்தத்தில், ‘சப்தம்’ திரையில் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை