‘சரீரம்’ திரைப்பட விமர்சனம்

தர்ஷன் ,சார்மி, ஜே. மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கவுரி, மிலா, ஜி.வி. பெருமாள் மலைச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி வி . பெருமாள்இயக்கியுள்ளார். இசை -பாரதிராஜா,ஒளிப்பதிவு டொர்னலா பாஸ்கர் ,பரணி குமார் ,நடனம் -ஜே மனோஜ், தயாரிப்பு -ஜி. வி.பி  பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள்.

காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த கதை மாந்தர்களைத் திரையில் பார்த்திருக்கிறோம்.தங்கள் காதல் நிலைத்திருக்க சரீர மாற்றம் செய்து கொள்ளும் அதாவது பால் மாற்றம் செய்து கொள்ளும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய கதை இது.

கல்லூரியில் படிக்கிற தர்ஷனும் சார்மியும் வழக்கம் போலக் காதலிக்கிறார்கள். வழக்கம்போல வீட்டாரிடமும் எதிர்ப்பு.நாயகியின் மாமாவுக்கு நாயகியைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விருப்பம்.எனவே முதல் வில்லனாக சார்மியின் மாமா தர்ஷனை அடித்து துவைக்கிறார். ஒரு கட்டத்தில் கட்டி ஆற்றுக்குள் வீசுகிறார்கள்.இதனை அறிந்த காதலி, காதலன் இறந்து விட்டதாகத் தற்கொலை முயற்சி செய்கிறார்.நல்லவேளை காப்பாற்றப்படுகிறார். இருவரும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.ஒரு வழியாக அங்கிருந்து தப்பிக்கிறார்கள் ஆனால் எதிர்ப்பு விடாமல் துரத்தவே ஒரு விபரீத முடிவெடுக்கிறார்கள்.அதாவது பால் மாற்றிக் கொண்டு ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் வாழலாம் என்றுமுடிவெடுக்கிறார்கள்.அதன் விளைவு என்ன என்பதை சொல்வதே 125 – 16 நிமிங்கள் கொண்ட  ‘சரீரம்’ திரைப்பட மீதிக்கதை.

சரீரம் என்றால் உடல். உள்ளத்தால் இணைந்த இருவர் சரீரம் என்கிற உடலைத் தங்கள் காதலுக்கு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதே இந்தக் கதை.

நீதிமன்றக் காட்சியில் தொடங்குகிற படம் மெல்ல மெல்ல ப்ரியன் – சார்மி ஆகியோரின் காதல் கதைக்குள் இழுத்துச் செல்கிறது.பிரியனாக நடித்துள்ள தர்ஷன் புதுமுகம் போல் தெரியாத அளவிற்கு நடித்துள்ளார்.ஆரம்பத்தில் அவர் முகம் ஒட்டவில்லை என்றாலும் போகப்போக அந்தப் பாத்திரமாக மாறிவிடுகிறார்.பிற்பாதியில் வரும் அவரது தோற்ற மாற்றம் நம்ப வைக்கிறது.
நாயகி சார்மியின் தோற்றமும் நடிப்பும் ஓகே ரகம்.அவர் நடிப்பில் வெளிப்படுத்தும் பெண்ணின் மன உணர்வுகளைக் காட்டும் காட்சிகளும் நன்றாகவே உள்ளன.

நாயகி தாய் மாமா ஆக வரும் ஜே. மனோஜ்,வில்லனுக்கே உரிய தோற்றம் பாவனைகளில் பொருந்துகிறார். வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் என்றாலும் சில இடங்களில் மிகை நடிப்பாகத் தோன்றுகிறது.படத்தில் கதாநாயகியின் தந்தையாக வரும் புதுப்பேட்டை சுரேஷ், தாயாக வரும் கௌரி, நீதிபதியாக வரும் பாய்ஸ் ராஜன், மருத்துவராக வரும் ஷிகிலா , வழக்கறிஞர் மதிமிதா ,இன்ஸ்பெக்டர் ஜிவி பெருமாள் மலைச்சாமி என அனைவரும் அந்தந்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் கே.டொர்னலா பாஸ்கர் -பரணி குமார் இரட்டையர் ஒளிப்பதிவு படத்திற்கு உதவி இருக்கிறது.மாமல்லபுரம் மற்றும் குறிப்பிட்ட கதை நிகழ் விடங்களில் படமாக்கியே அதைத் தெரியாத அளவிற்குக் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

இன்றைய காதலுக்கு ஆயுள் குறைவாக உள்ளது. இந்நிலையில் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

கதையின் புதுமையைப் போன்று காட்சிகளிலும் கதை நிகழ்விடங்களிலும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி படம் எடுக்கப்பட்டுள்ளதால் அந்தப் போதாமை வெளியே தெரிகிறது.இதையே பெரிய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தால் இன்று அது பேசு பொருளாக மாறி இருக்கும். எனவே இவர்களுக்கு விதிக்கப்பட்ட மைதானத்தில் விளையாடி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘சரீரம்’ வித்தியாசமான மட்டுமல்ல விபரீதமான காதல் கதை என்று கூறலாம்