நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்து பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளிவந்துள்ளது தான் ‘சர்தார்’
சரி சர்தார் படத்தின் கதை என்ன?
தேச நலனுக்காகச் சிரமப்படும் உளவாளியின் செயல் திட்டத்தில் கார்ப்பரேட் வில்லனை இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் `சர்தார்’.
காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரியும் விஜய பிரகாஷ் ஒரு விளம்பரப்பிரியர். காவல்துறை குறித்து சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்வர்.
அப்படி ஒரு விளம்பரத்துக்காகத் தன் பார்வைக்கு வரும் ஒரு தேசத்துரோக வழக்கைக் கையில் எடுக்கிறார். அதில் தொடர்புள்ள ஒரு பெண் மூலம், தண்ணீர் மாஃபியா, நாட்டின் நலனுக்காக உயிரைப் பணயம் வைக்கும் உளவாளி, பக்கத்து நாடுகளின் சதித்திட்டம் எனப் பல அரசியல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
அந்த உளவாளி யார், அவருக்கும் விஜய பிரகாஷுக்கும் என்ன சம்பந்தம், தண்ணீர் மாஃபியாவில் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் எனப் பல கிளைக்கதைகள் விரிந்து விடைகளைத் தேடி முடிவைச் சொல்கிறது படம்.
ரகசிய பெயர் ‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ், காவல் ஆய்வாளர் விஜய பிரகாஷ் என இருவேறு வேடங்களில் வருகிறார் கார்த்தி.இரண்டிலும் தனித்தனி பரிமாணங்கள் தனித்தனி வகையான நடிப்புகள் என்று இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் கார்த்தி.
வயதான கார்த்திதான் அதிகம் கவர்கிறார். சர்தார் என்ற பெயரில் அந்த முதிர்ச்சிக்குரிய நடுக்கம், உடல்மொழி, அதே சமயம் பயிற்சிகள் பெற்ற ஓர் உளவாளிக்கான சாகச சண்டைக் காட்சிகள் என ஒரு நடிகராக கவனம் பெறுகிறார். வில்லனாக வரும் சங்கி பாண்டே மிரட்டலான வில்லனாக நம்பும்படி நடித்திருக்கிறார்.
நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன். ரஜிஷாவுக்கு மட்டும் பிளாஷ்பேக்கில் மனதில் நிற்கும் வேடம். மறுபிரவேசம் செய்திருக்கும் லைலாவின் பாத்திரம் கதையின் ஆரம்பப் புள்ளி எனலாம். லைலாவின் மகனாக வரும் ரித்விக்கின் காட்சிகள் மற்றும் போலீஸாக வரும் கார்த்தியின் பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டையும் இணைத்துக் காட்டும் அந்த ஒப்பீடு நல்லதொரு உணர்ச்சிகர சங்கிலி.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஏறுமயிலேறி’ பாடல் ஈர்க்கும் ரகம். ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களைக் காட்டிச் கவர்கிறது . ‘சர்தார்’ கார்த்தியின் சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.
குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் அட்டகாசம்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்த முறை உளவாளிகளின் சோதனையான வாழ்க்கை, தண்ணீர் மாஃபியா என இருவேறு விஷயங்களைக் கையில் எடுத்திருக்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இது எதை முன் நிறுத்துகிறது கேள்வி எழுகிறது.
போகிற போக்கில் எல்லா முதன்மை பாத்திரங்களின் குரல்களிலும் தரவுகள் கொட்டுகின்றன.
சிறுவன் ரித்விக் அரசியல் பேசுவது, வயதுக்கு மீறிய விவகாரங்களை அலசுவது மிகை.
எல்லா குறைகளையும் கேள்விகளையும் மறந்து ரசிக்க வைக்கும் விஷயங்கள் இரண்டு உள்ளன.
ஒன்று எங்குமே தேங்கி நிற்காத திரைக்கதை, இன்னொன்று கார்த்தியின் நடிப்பு. இவைதான் `சர்தாரை’ நோக்கி ரசிகர்களை ஈர்ப்பவை. இவைதான் எல்லா விதமான பள்ளங்களையும் நிரப்பி சமன் செய்கின்றன.கார்த்தியின் இரு வேட நடிப்பு ரசிகர்களுக்கு நல் விருந்துதான். மொத்தத்தில் சர்தார் வெல்வார்.