‘சார்’ திரைப்பட விமர்சனம்

விமல், சாயாதேவி ,சிராஜ் எஸ், சரவணன், வ.ஐ.ச ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரானா, எலிசபெத் நடித்துள்ளனர்.கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் போஸ் வெங்கட். வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் கம்பெனி வழங்க எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் சார்பில்சிராஜ் எஸ், நிலோபர் சிராஜ் தயாரித்துள்ளனர் .ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஒளிப்பதிவு இனியன் ஜெ. ஹரிஷ்,இசை சித்துகுமார், பாடல்கள் விவேகா, ஆந்தகுடி இளையராஜா, மற்றும் இளம் கவி அருண். எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங், கலை பாரதி புத்தர்.

சாமானிய மக்கள் கல்வி பெறுவதற்கும் உயர் கல்வி பெறுவதற்கும் இன்றும் கூட நீட் போன்ற தடைகள் உள்ளன. இப்படிப்பட்ட இந்த நாட்டில் 60களில் அவர்கள் கல்விக்குத் தடையாக மூடநம்பிக்கையும் மேல் தட்டு வர்க்கத்தின் சுயநல நடவடிக்கைகளும் எப்படி இருந்தன என்பதைச் சொல்கிற 163 நிமிடங்கள் கொண்ட படம் தான்  ‘சார்’.

மாங்கொல்லை என்ற அந்த கிராமத்தில் மேல் ஜாதிக்காரர்களுக்குக் கூலி வேலை பார்ப்பதற்காக இருக்கும் அடித்தட்டு மக்கள் கல்வி பெற வேண்டும் என்று அண்ணாதுரை என்கிற ஆசிரியர் அந்த ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் கொண்டு வர நினைக்கிறார். ஆனால் அந்த ஊரை கட்டுக்குள் வைத்திருக்கும் கோலோச்சு என்கிற குடும்பம் கடவுள் பக்தி, சாமி என்கிற பெயரில் அதற்குத் தடை போடுகிறார்கள். அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் பள்ளிக்கு இடம் தருகிறார் .ஆனால் அதற்கும் சாமி செல்லும் வழியில் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது ,அது சாமி குத்தம் என்றும் என்று தடை போடுகிறார்கள். பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது.பல்வேறு சதிகள் செய்து அந்தப் பள்ளிக்கூடத்தை தகர்க்க முயற்சி செய்கிறார்கள்.அதற்கு எதிராகவும் ஏழை மக்கள் கல்வி பெறவும் அந்த ஆசிரியர் முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்குப் பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் அவர் மன நோயாளி ஆகிறார்.அதே பள்ளிக்கு அவரது மகனும் ஆசிரியராக வருகிறார்.தந்தையின் வழியைப் பின்பற்றியதால் தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆகிறது. அந்த பள்ளிக்கூடத்தையும் இடிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் பிறகு அவரது மகன் அதே பள்ளிக்கு வருகிறார் .அதே தடைகள் இடையூறுகள் மூன்றாவது தலைமுறையாகவும் தொடர்கின்றன. மூன்றாவது தலைமுறை நாயகன் விமல் இதற்கெல்லாம் எப்படி முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதுதான்’ சார்’ படத்தின் கதை.

இன்று அனைவருக்கும் சமமான கல்வி என்ற இலக்கை அடைவதற்கு முன் எவ்வாறான இடையூறுகளையும் தடைகளையும் இன்னல்களையும் கடந்து இந்த நிலையை எட்டி இருக்கிறோம் என்பதற்காக இந்தப் படத்தைப் பார்த்து வரலாற்றை அறிந்து கொள்ளலாம் .அந்த வகையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.அந்த ஊருக்குப் பள்ளிக்கூடம் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட சரவணனின் அப்பாவைக் கிறுக்கு வாத்தியார் என்று சிறுவர்கள் கேலி பேசுவதும் அதற்காக பேரன் மனம் வருந்துவதும் அவமானப்படுவதும் என்று வருகிற காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது.

பள்ளிக்கூடத்தின் பெருமை, ஆசிரியர்களின் பெருமை, கேள்வி கேட்க வேண்டியதன் அவசியம் போன்றவற்றை பிரச்சார தொனியில் இல்லாமல் கதை அம்சத்தோடு  இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட் .அதற்குள் மேல் கீழ் தட்டுகளின் மோதல்களையும் மூடநம்பிக்கை , கடவுள் நம்பிக்கை என்கிற பெயரிலும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கதையின் ஊடாகவே கூறியிருக்கிறார் இயக்குநர்.

இதில் நடித்திருக்கும் விமல் ‘வாகை சூடவா ‘படத்திற்குப் பிறகு பள்ளிஆசிரியராக வேறொரு வகையிலான கதையில் நடித்துள்ளார்.ஆரம்பத்தில் அங்கு வரும் ஒரு ஆசிரியை மீது மையல் கொண்டு வருவதும் அதில் இருந்து அவர் விலகுவதும் என்று சென்றாலும், பிறகு அந்த பள்ளிக்கூடத்திற்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து வேறு வகையிலான ஆவேச நடிப்பைக் காட்டி உள்ளார்.

நாயகியாக அந்த ஊருக்கு புதிதாக வரும் ஆசிரியையாக நாயகி சாயாதேவி நடித்திருக்கிறார். அளவான அழகு தேவையான நடிப்பு என்று வருகிறார்.விமலின் அம்மாவாக சரவணனின் மனைவியாக நடித்துள்ள ரமா நல்லதொரு நடிப்புக்கு ஏற்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெளிப்படுத்தி இருக்கிறார்.

பருத்திவீரன் சரவணன் இதுவரை எதிர்மறை நிழல் படிந்த பாத்திரங்களில் நடித்து வந்தவர் இதில் கல்விக்காகப் போராடுகிற ஆசிரியராக நடித்துள்ளார். அவரது தந்தையை மன நோயாளியாக சித்தரிப்பதை கண்டு வெகுண்டு வருந்தும் மகனாகவும் பள்ளிக்குப் போராடும் ஆசிரியராகவும் மகன் விமல் காதலில் விழுந்த போது பணியில் தடுமாற்றம் நிகழும் என்று வருந்துகிற தந்தையாகவும் ,பள்ளிக்கான போராட்டத்தில் தாக்கப்பட்டதால் மனப்பிறழ்வு கொண்டவராகவும் எனப் பல்வேறு வகை நடிப்பு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.சில இடங்களில் மிகையாகத் தோன்றினாலும் அந்தப் பாத்திரத்தில் அவர் பதிகிறார்.

விமலின் நண்பனைப் போல் வந்து பிறகு அவருக்கு எதிரான காரியங்களில் நரித்தனம் செய்யும் வில்லனாக தயாரிப்பாளர் சிராஜ் நடித்துள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத அதே நேரத்தில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ள நடிப்பு சபாஷ் போட வைக்கும். இவர் தொடர்ந்து இது மாதிரி வில்லனாக நடிக்கலாம். அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் இருக்கிறது. பள்ளிகொண்டு வருவதற்கு இடையூறு செய்யும் ஆதிக்க வர்க்க குடும்பத்தின் தலைவராக எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலன் நடித்துள்ளார். அவரது தோற்றமும் நடிப்பும் வெகு பொருத்தம்.குறுக்கு வழியில் மார்க் பெறுவதற்கு விமலிடம் படிக்கும் சிறுவன் செய்யும் சேட்டைகள் கலகலப்பு.

கதை நிகழும் 80 களின் காலகட்டத்தைப் பொருத்தமான காட்சிகள் வழியாக மட்டுமல்ல ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டுக் காதுகள் வழியாகவும் கடத்துகிறார் இயக்குநர்.

இசையமைப்பாளர் சித்துகுமாரின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். குறிப்பாக ‘படிச்சிக்கிறோம் பொழச்சிக்கிறோம் ‘பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் உரிமை கீதமாக ஒலிக்கிறது.1960 மற்றும் 1980 என்று செல்கிற கதையில் அந்தக் காலகட்டங்களைக் கண்முன் கொண்டு வருகிறார் ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ. ஹரிஷ்.ஆங்காங்கே பளீர்  வசனங்களும் வருகின்றன வசனம் சுகுணா திவாகர்.

மொத்தத்தில் வணிக மசாலா படங்கள் வெளிவரும் இன்றைய திரைச் சூழலில் ஒரு நல்ல கருத்தை விதைக்கும் படமாகவும், கல்வியின் அவசியத்தைக் கூறும் படமாகவும், இன்று நமக்கு கிடைப்பதெல்லாம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த பரிசாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று  கூறும் படமாகவும் இந்த சார் இருக்கிறது.

கல்வி வணிக மயமாகி வரும் இன்றைய சூழலில் ,கிடைத்திருக்கும் இலவசக் கல்வி உரிமையை நாம் இழந்து விடக்கூடாது என்று எச்சரிக்கைப் பாடமும்  எடுக்கிறார் இந்த ‘சார்’.