அனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் காதல் பாடல்களில் ஒன்றான ‘துஹிரே’ (டேவிட்) மூலம் முந்தைய சாதனையான உலகப் புகழ்பெற்ற ‘கொலவெறி’ பாடலின் சாதனையை முறிடித்தார். அவரது குரல் மொழி தடைகளைத் தாண்டி அபரிமிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தில் அனிருத் பாடிய ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்திருப்பதால், இந்தி பேசும் பிரதேசங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்திய கலைஞர்களுடன் அனிருத் இணைந்த பாடல்கள் எப்போதும் மிகப்பெரிய வெற்றியையே பெற்றுள்ளன. இந்த முறை, அவர் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவரான த்வானி பானுஷலியுடன் இணைந்திருப்பது இரட்டிப்பு விருந்தாக அமைந்துள்ளது. அனிருத்தின் குரல் பிரபாஸுக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருப்பது வட இந்தியர்களை ‘சாஹோ’ நேரடியாக தமிழில் உருவாக்கப்பட்டதா? என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அத்தகைய அற்புதமான வரவேற்புடன், பாடல் யூடியூப் மற்றும் பிற இசைத்தளங்களில் பெரிய அளவில் பரவியிருக்கிறது. குறிப்பாக, பிரபாஸுக்கும், ஸ்ரத்தா கபூருக்கும் இடையிலான அனல் தகிக்கும் கெமிஸ்ட்ரி ‘காதல் சைக்கோ’ பாடலுக்கு கூடுதல் சுவையை கூட்டியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் மற்றும் த்வானி பானுஷாலி ஆகியோருடன் இணைந்து பாடலை பாடியதோடு தனிஷ்க் பக்சி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றான “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். சுஜீத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் ஷர்மா, சுப்ரீத், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர் மற்றும் டினு ஆனந்த் போன்ற அகில இந்திய அளவிலான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் அதன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்காக ஏற்கனவே அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. கென்னி பேட்ஸ், பெங் ஜாங், திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, ஸ்டீபன், பாப் பிரவுன் மற்றும் ராம் – லக்ஷ்மன் போன்ற உலகம் முழுக்க இருந்து வந்திருக்கும் மிகச்சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் சண்டைக் காட்சிகளை வடிவைத்துள்ளனர். மதி (ஒளிப்பதிவு), சாபு சிரில் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), ஆர்.சி. கமலகண்ணன் (விஷுவல் எஃபெக்ட்ஸ்), வைபவி மெர்ச்சண்ட் & ராஜு சுந்தரம் (நடனம்), ஜிப்ரான் (பின்னணி இசை) மற்றும் சிங்க் சினிமா (ஒலி) என தங்கள் துறைகளில் தங்களின் மகத்தான பங்களிப்பு மூலம் கலைஞர்கள் இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை வழங்கியுள்ளனர்.
உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளியாகிறது ‘சாஹோ’.