சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, மனோபாலா, ஸ்ரீமன்,அமிர்தா ஹல்தார், ஜாக் ராபின்சன், மஞ்சீரா ,ராஜகோபால் நடித்திருக்கிறார்கள்..எழுதி இயக்கியிருக்கிறார் முத்து.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் ,பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார் .விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார் .எஸ் எஸ் பி பிலிம்ஸ் சார்பில் சீனிவாசன் குரு .ஏ தயாரித்துள்ளார்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் குழந்தைகள்.அவர்களிடம்’ எங்க காலத்திலே எப்படின்னா ‘என்று கதை பேச முடியாது.ரகசியங்களற்ற அவசர யுகத்தில் வாழ்கிறார்கள்.போன தலை முறை
நடந்து கடந்த தூரத்தை அவர்கள் பறந்து கடக்கிறார்கள்.தலைமுறை இடைவெளி பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும்படியான, மூத்தவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் புரிந்து கொள்ளும் படியான ஒரு அதிர்ச்சி தரும் கதையை எடுத்துக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.
அறிவையும் சம்பாத்தியத்தையும் தனது சுதந்திர வெளியாக உணரும் தலைமுறை இது.அதன் மூலம் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் குடும்ப பிரச்சினைகள் சமுதாய சீர்கேடுகள் என்று கலந்து கட்டி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகள்.பிள்ளைகள் போலவே அவர்களது பெற்றோரும் நட்புடன் இருக்கிறார்கள். மூன்று பேரும் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டுத் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கிறார்கள்.தங்கள் பிள்ளைகளைப் பெரிதும் நம்புகிற பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வருகிறது. கலக்கத்துடன் தங்கள் பிள்ளைகளைத் தேடிச் செல்கிறார்கள்.இறுதியில் யார் நினைத்தது நடந்தது என்பதை இரு தரப்பினர்க்கும் அறிவுரையாக சொல்வதே ‘சிக்லெட்ஸ்’.
கதைக்கு ஏற்ப படத்தில் நடித்திருப்பவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலிஜமா காட்டியுள்ளனர். இந்தக் காலகட்டத்தின் மேட்டிமை வர்க்கப் போக்கை காட்டி நடித்திருக்கிறார்கள்.நாயகிகள் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்.
ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது,ஆனாலும் தடம் மாறி, தடுமாறிப் போய்விடுகிறார்களோ என்று வயிற்று நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கும் சமகாலப் பெற்றோரின் மனசாட்சியாக தோன்றுகிறார்கள்.
இளசுகளுக்கு ஏற்ற சொகுசுக் காட்சிகளாக ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார் இளமை பொங்கும் தாராள காட்சிகளை விருந்தாக்கி உள்ளார்.
பாலமுரளிபாலுவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் இளமை ஊஞ்சலாடுகிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று அபாய நிலையில் உள்ள காதலுக்கும் காமத்துக்கும் ஆன மயிரிழை வேறுபாட்டை இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளார்கள்.ஆனால் துரதிர்ஷ்டம் காமம் மேலோங்கி விட்டது. சைலன்ஸ் என்பதைக் கூட சத்தம் போட்டுச் சொல்வது போல,செய்யக்கூடாதவற்றையெல்லாம் செய்து காட்டி காட்சிகளை வைத்துள்ளார்கள்.மிகவும் எச்சரிக்கையாக கையாண்டு இருக்க வேண்டிய கதையைச் கவனக்குறைவாக கையாண்டுள்ளார்.
எச்சரிக்கை செய்வது போல் பேசக்கூடாததைப் பேசி ,காட்டக் கூடாததைக் காட்டி, செய்யக்கூடாததைச் செய்து முடித்துவிட்டார்கள்.அதன் விளைவு எப்படி இருக்கும் ?இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதற்குப் பதில் கூற முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுகிறது.