சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் ‘ சித்தா ‘படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.யு. அருண்குமார்.சித்தப்பாவின் சுருக்கம் மட்டுமல்ல சித்தார்த்தின் பெயர்ச் சுருக்கத்திற்கும் பொருத்தமான தலைப்புதான் ‘சித்தா’
இதில் சித்தார்த், நிமிஷா விஜயன், அஞ்சலி நாயர்,சஹஷ்ரா ஸ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம், பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
பின்னணி இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – பாலாஜி சுப்ரமணியம்.
கதைப்படி அண்ணனின் திடீர் மரணத்துக்கு பிறகு அண்ணிக்கு தம்பியாகவும், அவரின் மகளான சேட்டை என்கிற சுந்தரியிடம் தந்தைக்கு நிகராக அன்பு காட்டியும் பார்த்துக் கொள்கிறார் சித்தார்த்.
தான் வேலை செய்யும் சுகாதார அலுவலகத்தில் தன் பள்ளிப்பருவ காதலி சக்தி (நிமிஷா விஜயன்) வந்து சேர்கிறார். அவர்களின் காதல் மீண்டும் துளிர்க்கிறது.
ஒரு பக்கம் காதலியுடன் நேசம் இன்னொரு பக்கம் அண்ணன் மகளுடன் பாசம் என்று இருக்கிறார் சித்தார்த்.
குழந்தைகளிடம் மிகுந்த அன்பு செலுத்தும் சித்தா, தன் நண்பனின் அண்ணன் மகள் பொன்னியுடனும் பாசத்தோடு பழகுகிறார். ஒரு கட்டத்தில் பொன்னி காணாமல் போகிறாள். பிறகு வீட்டுக்கு வருகிறாள்.இதனால் சித்தாவிற்குப் பெரிய சிக்கல் வருகிறது.
சிறுமியான பொன்னியை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள். இதன் பின்னணியில் வக்கிர புத்தி கொண்ட சைக்கோ இருக்கிறான்.ஆனால், அந்தப் பழி சித்தார்த் மீது விழுகிறது.போலீஸ் நிலையம், வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார் சித்தார்த்.பழியில் இருந்து மெல்ல மீண்டு வரும் போது சித்தாவின் அண்ணன் மகள் சேட்டை காணாமல் போகிறாள்.
அண்ணியும், சித்தாவும் நிலை குலைந்து போகின்றனர். சேட்டையைத் தேடி சித்தா தன் போலீஸ் நண்பருடன் தேட ஆரம்பிக்கிறார். இறுதியில் சித்தா சேட்டையை கண்டுபிடித்தாரா? சேட்டை யாரிடம் மாட்டிக் கொண்டாள்? மீட்கப்பட்டாளா? என்பதே சிததா படத்தின் கதை.
ஈஸ்வர் என்கிற பெயரில் சித்தா என்று அழைக்கப்படும் சித்தப்பாவாக வருகிறார் சித்தார்த்.
கண்ணியமான சித்தப்பா என்கிற ஸ்தானத்தை உயர்வாக தன் நடிப்பில் மூலம் பதிய வைத்துள்ளார் சித்தார்த்.
வீண் பழியை சுமக்கும் போது அவமானத்தால் ஏற்படும் மனவலி, மனஉளைச்சலைத் தன் முகபாவனையில் இயல்பாகப் பிரதிபலித்துள்ளார்.
காதலியாக வரும் நிமிஷா விஜயன் தன்னுடைய நடிப்பாலும் வசனத்தாலும் ஈர்க்கிறார்.
அண்ணியாக அஞ்சலி நாயர், தன் கணவனின் தம்பியை தன் பிள்ளையாக பாவிக்கும் கதாபாத்திரம். சித்தார்த்தின் மீது பழி சுமத்தும் போது கதறும் கதறல், அதன் பின்னர் தன் மகளுக்கு அறிவுரை கூறி புரிய வைக்கும் போது சித்தார்த் பார்வையில் ஏற்படுத்தும் சங்கடம் என்று படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.
சேட்டையாக வரும் சஹஷ்ரா ஸ்ரீ எட்டு வயது குழந்தைக்குள் முதிர்ந்த நடிப்பு.பொன்னியாக எஸ்.ஆபியா தஸ்னீம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
இவர்களுடன் போலீஸ் நண்பராக பாலாஜி, போலீஸ் பெண் உயர்அதிகாரி, சித்தார்த்தின் நண்பர்கள் என்று ஒவ்வொருவரும் புதுமுகங்கள் என்றாலும் அழுத்தமான நடிப்பால் அடையாளம் பெறுகிறார்கள்.
இவர்களுடன் சைக்கோ வில்லனாக வருபவர் சட்டென்று மாறும் மனநிலையுடன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
விவேக், யுகபாரதி, எஸ்.யு.அருண் குமார் ஆகியோரின் பாடல் வரிகளுக்கேற்ற திபு நைனன் தாமஸ் இசையும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்தின் பக்கபலமாக இருந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.
இயக்குநரின் தேவை அறிந்து பணியாற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.
கதை பெண்கள் குழந்தைகளுக்கான விழிப்புணர்வைத் தருகிறது தான். ஆனால் இவ்வளவு விரிவாக அந்தக் கொடுமைகளை காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையைஅதன் கொடூரத் தன்மையை புரிய வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி அழுத்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார்.
கச்சிதமான நடிகர்களின் தேர்வு, திரைக்கதையில் விறுவிறுப்பு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, யதார்த்தமான கதைக்களம், சமூக அக்கறையோடு எழுதி இயக்கியிருக்கும் எஸ்.யு. அருண்குமார் கவனிக்க வைக்கிறார்.