நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் ‘செய்’. இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘சாரதி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் ‘செய்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின் மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் மன்னு, உமேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இது சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் ஒரு படமாக இருக்கும்.
இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று பிரசாத் லேப் தியேட்டரிலுள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ‘செய்’ படத்தின் தொடக்க நாள் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சுபின் பேசும்போது “இன்று தொடங்கியுள்ள இப்படம் வளர்ந்து வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை” என்று ஊடக உதவியையும் ஒத்துழைப்பையும் நாடினார்.
ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் பேசும்போது “இதுவரை முன்னணி நாயகர்கள் பலருடனும் பணியாற்றியுள்ள நான், முதன் முதலில் நகுலுடன் ‘செய்’ படத்தில் இணைகிறேன். இந்த ‘செய்’ படத்தில் நான் ‘செய்’ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதன் மூலம் எனக்கு நல்ல பெயர் வரும்.” என்றார் நம்பிக்கையுடன்.
‘காஞ்சனா’ புகழ் கலை இயக்குநர் ஜனா பேசும்போது “இதில் எதிர்பார்ப்புடன் பணி புரிகிறேன். அந்த அளவுக்கு கலை இயக்குநராக என் பங்கு இப்படத்தில் இருக்கும். ஒரு பயணம் போலவே இப்படம் இருக்கும்.” என்றார்.
கதை, திரைக்கதை எழுதியுள்ள ராஜேஷ் கே. ராமன் பேசும்போது “நமக்குள் நல்லது, கெட்டது, சாத்தான் எல்லாமும் இருக்கும். அதே போல இப்படத்திலும் நல்லது, கெட்டது எல்லாம் கலந்த வாழ்க்கை இருக்கும்.” என்றார்.
ராஜேஷ் சுக்லா இதன்மூலம் ஒளிப்பதிவாளர் ஆகிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான அவரும் பேசும் போது, படத்துக்கு ஊடக ஆதரவினைக் கோரினார்.
கதாநாயகி ஆஞ்சல் பேசத் தொடங்கியதும் “எல்லாருக்கும் வணக்கம்” என்று தமிழில் கூறி ஆரம்பித்து விட்டு ”தமிழில் இப்போது என்னால் பேச முடியவில்லை. இப்படம் நடிக்கும் போது தமிழ் பேசக் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். படம் முடியும் போது நிச்சயம் தமிழில் பேசுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.
நாயகன் நகுல் பேசும்போது “நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிப்பேன். யோசித்துதான் கதைகளைத் தேர்வு செய்வேன். இப்படத்தில் என் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அது வித்தியாசமாக இருக்கும்; படமும் மாறுபட்ட படமாக இருக்கும். இதில் நான் பங்குபெறுவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.
படத்தை இயக்கும் கோபாலன் மனோஜ் பேசும்போது ”இப்படத்தில் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல் ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களும் நடிக்கவுள்ளார்கள். இது எனக்கு முதல் தமிழ்ப்படம். ஒரு பெரிய நடிகராக நினைக்கும் ஒரு பையனும், ஒரு பெரிய இயக்குநராக நினைக்கும் ஒரு பெண்ணும் சந்திக்கிறார்கள். அந்தச்சந்திப்பு அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்குகிறது இந்தச் சிறுவரிதான் கதை” என்றார்.
ஆக சினிமா பின்னணியில்தான் ‘செய்’ படம் உருவாக இருக்கிறது எனலாம்.