செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் பிரபு, அறிமுகம் எல். கே. அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி டிசம்பர் 25 இல் வெளியாக உள்ள திரைப்படம்’ சிறை’ . இப்படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘சிறை’ திரைப் படத்தின் மீது திரையுலகில் தரமான படம் என்பதற்கும், வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் நிறைந்த படம் என்பதற்கும் உத்திரவாதமளிக்கும் நம்பிக்கை நிலவுகிறது.
இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
1.கதை அடர்த்தியுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தனது திரைப் பயணத்தில் நிதானமாக வெற்றி நடை போட்டு வருகிற விக்ரம் பிரபு ,இந்தக் கதை பிடித்து,பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
2 .’டாணாக்காரன்’ என்கிற அழுத்தமான படத்தை இயக்கி அனைவரிடமும் பளீர் கவனம் பெற்ற இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்குக் கதை எழுதியுள்ளார்.
3.வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.திரைப்பாடம் பயின்ற பள்ளி என்கிற வகையில் வெற்றி மாறனின் உதவியாளர் என்பதற்கான எதிர்பார்ப்பு உள்ளது.
4.’சிறை’ படத்தின் அறிமுகவிழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு படத்தைப் பற்றிப் பாராட்டிப்பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் பெப்ஸி தலைவர் ஆர் .கே . செல்வமணி படத்தில் இடம்பெற்றுள்ள நுணுக்கமான சித்தரிப்புகளைப் பாராட்டி உள்ளார். படத்த இயக்கிய சுரேஷ் ராஜகுமாரி , தான் படித்த சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் என்ற வகையிலும்
இயக்குநர் பா. ரஞ்சித் படத்தைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார். தனது மாணவனான சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
5.திரையீடு மற்றும் விநியோக துறையில் அனுபவம் பெற்ற திருப்பூர் சுப்ரமணியம் பேசும்போது, ‘ஒரு விழாவில் கதாநாயகனாக நடித்தவரை பற்றிப் பேசுவதை விட, எப்போது இயக்குநரின் திறமையைப் பற்றிப் பேசுகிறார்களோ? அது தான் வெற்றிப்படம். இயக்குநரின் திறமையைப் பேசினால் அது வெற்றிப்படமாக இருக்கும் ‘ என்று கூறியுள்ளது ,படத்தைப் பற்றிய ஒரு நற்சான்று எனலாம்.
6. படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பு நடந்த அறிமுக விழாவில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் படத்தை இயக்கிய சுரேஷ் ராஜகுமாரிக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார்.இதெல்லாம் சாதாரணமாக நிகழ்ந்து விடாது.
7.திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு அபரிமிதமான வரவேற்பு பெற்று பார்வையாளர்களிடம் பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
8.திரைப்படத்திற்கான சமரசமற்ற திரையாக்கம் இதில் நிகழ்ந்துள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.இப்படி எப்போதாவது தான் பேசப்படுவதுண்டு.
9. திரைப்படம் ஒரு சக்தி மிக்க ஆயுதம். வணிகம் என்கிற பெயரில் மலிவான படங்கள் வரும்.அல்லது மிக தீவிரமான என்கிற பெயரில் பார்வையாளர்களுக்கு விலக்கம் தரும் வகையில் வருவதுண்டு. ஆனால் வெற்றி பெறும் வகையிலும் உணர்ச்சிகளைத் தீவிரமாக வெளிப்படுத்தி, சமரசமற்ற நேர்த்தியான திரை உருவாக்கத்தில் என்று சில படங்கள் தான் வருவதுண்டு. அப்படி ‘சிறை’ அமைந்துள்ளது என்கிற பேச்சு நிலவுகிறது.
10. பொதுவாக வெளியாகும் படங்களுக்கு வெளியாகிற அன்றுதான் ஊடகங்களுக்கான காட்சி திரையிடப்படும். படத்தின் மீது பெரும் நம்பிக்கை இருந்தால் தான் சில நாட்கள் முன்பே திரையிடுவார்கள். அப்படி இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே திரையிடப்படுவதால் அதன் மீது ஊடகத்தினர் மத்தியிலும் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
இப்படி ‘சிறை’ திரைப்படம் திரை வெளியீட்டுக்கு முன்பே நம்பிக்கைகளை விதைத்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


