சூர்யா -ஹரி கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாகவும் வந்துள்ளதுதான் இந்த ‘சி 3’ படம்.
இதன் கதைதான் என்ன? முதலில் தமிழகத்தில் தனது கடமையை செய்து வந்த துரைசிங்கம், பின்பு வெளிநாடு போய் கலக்கினார்.
இந்தப் படத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சென்று அம்மாநில போலீசாக மாறி, அம்மாநிலத்தை ஆட்டிப்படைக்கும் தாதாவை எப்படி அடக்குகிறார்? அவருக்கு துணையாக இருக்கும் ஆஸ்திரேலிய தாதாவை எப்படி அடக்குகிறார்? அவர்கள் எந்த மாதிரியான குற்றங்களைச் செய்கிறார்கள்? அதை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே சிங்கம் 3 -யின் கதை. படத்தின் கதை இதுதான் என்று முதல் ரீலிலேயே தெரிந்து விடுகிறது.
சூர்யாவுக்கு போலீஸ் தோற்றம் பொருத்தம்தான். அதில் குறையில்லை. ஆனால் முந்தைய படதிருப்தி இதில் குறைவாகவே உள்ளது. ஒரு படத்தின் தொடர்ச்சியை இரண்டாம் பாகத்தில் திறமையாக கையாண்ட இயக்குநர் ஹரி, மூன்றாம் பாகத்தில் வேகம் என்ற ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, சுவாரஸ்யம் என்பதே இல்லாதவாறு திரைக்கதை அமைத்திருப்பது, படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.
தனது உணர்ச்சிகரமான நடிப்பால் காட்சிகளை மக்கள் மனதில் நிலை நிறுத்தும் சூர்யா, தன்னால் முடிந்தவரை தனது நடிப்பு மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருந்தாலும், காட்சிகளின் வடிவமைப்பு செயற்கையான வேகத்தில் உள்ளதால் அவரது நடிப்பும் எடுபடாமல் போகிறது.
பாகத்திற்கு பாகம் வில்லன்களை மாற்றம் செய்யும் இயக்குநர் ஹரி, நாயகி அனுஷ்காவை மட்டும் மாற்றாதது அலுப்பு. முதல் பாகத்தில் அனுஷ்காவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், அவர் சூர்யாவுடன் திருமணமாகி, குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தால்கூட ஏற்றுக் கொண்டிருப்பார்கள், ஆனால், அவர் தொடர்ந்து சூர்யாவுடன் டூயட் பாடினால் எப்படி இந்த உடம்பை வைத்துக் கொண்டு?அதுவும் இந்த இஞ்சி இடுப்பழகியால் முடியுமா?
மற்றொரு நாயகியான ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் படத்தில், திருப்பு முனையை ஏற்படுத்துவது போல நினைத்து அமைத்துள்ளார்கள்.ஆனால் அது , பொருந்தாத இடைச்செருகல் என்று ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது. இறுதியில் அவரும் சூர்யாவை காதலிப்பதாக சொல்வது காதுல பூ. ரகம்.
ஒளிப்பதிவாளர் ப்ரியன், ஹரியுடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றுவதால் அவர் என்ன எதிர்ப்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு பம்பரமாய்ச் சுழன்று பணிபுரிந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சுமார்தான்.
பரபரப்பாக்கி ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்க திரைக்கதை வேகம் முக்கியம்தான். அதற்காக காட்சிகளையும் படத்தொகுப்பின் மூலம் வேகமாக நகர்த்தி ஒன்ற விடாமல் வெறுப்பேற்றியுள்ளார் இயக்குநர் ஹரி .
”வாழ்க்கையில் சாவதை விட வாழ்வதே கஷ்டம், அதிலும் நல்லவனாகவும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமலும் வாழ்வது என்பது, ரொம்பவே கஷ்டம்” உள்ளிட்ட சில வசனங்கள் ரசிக்க கூடியவை.
அதேபோல், ஆஸ்திரேலிய போலீசாரால் விமான நிலையத்தில் சூர்யா கைது செய்யப்படும் போது, சர்வதேச போதைப்பொருள் குற்றவாளியை கைது செய்த தமிழக போலீஸ் துரை சிங்கம் நான் தான், என்று சூர்யா சொல்ல, உடனே கூகுளில் அதைப் பார்த்துவிட்டு அவருக்கு ஆஸ்திரேலிய போலீஸ் மரியாதை செய்யும், காட்சி ரசிக்க வைக்கிறது.
இப்படி சில காட்சிகளும், வசனங்கள் மட்டுமே படத்தில் ரசிக்கும்படியாக இருந்தாலும், காரில் செல்பவர்களை ஓடியே சேசிங் செய்யும் காட்சி, ரன்வேயில் செல்லும் விமானத்தை காரில் சென்று சேசிங் செய்வது, உள்ளிட்ட பல காட்சிகள் சாரி ரொம்பவே ஓவர் ரகங்கள்.
அதேபோல், காமெடி என்ற பெயரில் சூரியை வைத்து ரசிகர்களைக் கடிப்பது கொடுமை. முந்தைய விவேக் காமெடி அளவுக்கு சூரி கூட்டணி இதில் சோபிக்கவில்லை.அது சரி ஹரி வைக்கும் கெட்டவார்த்தை காமெடிகளை எல்லாம் எவன் ரசிப்பதாகச் சொன்னான்? திருந்தவே மாட்டாரா? படம் பார்ப்பவர்களை நெளிய வைக்கிறாரே?
அசத்தலான சாகசக்கதையாக இருக்கவேண்டிய படம் மலிவான நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் அதிரடி காட்சிகள் நிறைந்த சாதாரண பொழுதுபோக்கு சித்திரமாக மாறிவிட்டது.
இயக்குநர் ஹரிக்கு ஒரு வேண்டுகோள்! அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகரான சூர்யாவை இனிமேலும் மிகையான கற்பனையான காக்கிச்சட்டைக் கதைகளில் அடக்க நினைக்காதீர்கள். அவருக்கான நடிப்பு வாய்ப்புள்ள கதையை புதிதாக உருவாக்குங்கள். செயற்கையான நம்பகத்தன்மையற்ற கதாபாத்திரங்கள் இனியும் வேண்டாம். அதற்கு ஒன்று செய்யுங்கள் சிங்கம் அடுத்த பாக விபரீத முயற்சி இனியும் வேண்டாம். அடுத்தபாகம் என்றாலே புதிதாக யோசிக்கத் தோன்றாது.ஆட்களை மாற்றி லொக்கேஷன்களை மாற்றி ஏமாற்றவே உங்களுக்கும் தோன்றும்.
சூர்யாவுக்கான வேறொரு பரிமாணத்தைக் காட்டும்படி புதிய கதையை உருவாக்குங்கள். உங்களால் முடியும் .