சுந்தர் சி.யின் சமயோசித புத்தி!


பி.டி. சுரேஷ்குமார்

தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று  வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது.

அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேறு படத்துக்காக வெளியூர் செல்ல வேண்டிய கட்டம். ஒரு காமெடிக் காட்சி எடுக்கப்பட வேண்டும். ஷாட் பிரிச்சு எடுக்க குறைந்தது இரண்டு இரண்டரை மணிநேரமாகும். நிறைய ஆர்டிஸ்ட் வேறு காட்சியில் இருப்பார்கள். எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தோம். எப்படியும் வடிவேல் சம்பந்தப்பட்டதை எடுக்க வேண்டும். என்ன செய்வது?

நாங்கள்தான் குழம்பிக் கொண்டிருந்தோம். இயக்குநர் சுந்தர் சி. பதற்றமில்லாமல் இருந்தார். அந்த சீனை இப்ப எடுக்கிறோம் என்றார். கேமரா ஆங்கிள் டிராலி எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்று தயாராக இருக்கச் சொல்லிவிட்டு ஒரே ஷாட்டில் அந்த சீனை எடுப்பது என்று முடிவெடுத்தார். உடனடியாக செயல்பட்டார். ஒரு மானிட்டர் பார்த்தார். உடனடியாக நடிக்க வைத்தார். ஒரே ஷாட்டில் 8 பக்கமுள்ள அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது மணி 6.20. எங்களுக்கு தாங்க முடியாத ஆச்சரியம். ஒரு பதற்றமான சூழலில் உடனடியாக அதிரடியாக முடிவெடுத்து சமயோசிதமாக செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் சில காட்சிகளை காமெடி என்று எடுக்கும்போது எங்களுக்க சந்தேகமாக இருக்கும். இதை எப்படி மக்கள் ரசிப்பார்கள் என்று. அவரோ நம்பிக்கையுடன் இருப்பார். படம் வெளியாகி தியேட்டரில் போய் பார்த்தால் அதற்குத்தான் சிரிப்பொலி வரும். மக்களை எப்படி அவரால் மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.