‘சூது கவ்வும் 2’ திரைப்பட விமர்சனம்

மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு ,யோக் ஜேபி,அருள்தாஸ் ,கல்கி ராஜா, நக்கலைட் ஸ் கவி நடித்துள்ளனர் எழுதி இயக்கி உள்ளார் எஸ் ஜே அர்ஜுன்.திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் தங்கராஜ், சண்முகா சினிமாஸ் கே சுரேஷ் தயாரித்துள்ளனர்.

ஆள் கடத்தல் புகழ் தாஸ் அதாவது விஜய் சேதுபதி கோஷ்டியின் முன்னோடி குரு கோஷ்டி ,அதாவது மிர்ச்சி சிவாவின் கோஷ்டி.ஆனால் குரு ஒரு கொள்ளைச் சம்பவத்தில் சிறை செல்ல நேரிடுகிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் தனது குழுவினரைச் சேர்த்துக் கொண்டு ஆள் கடத்தும் வேலைகளைச் செய்யத் தொடங்குகிறார்.

இது காலச்சூழலில் பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து நிதி அமைச்சராகி சொத்துக்களைக் குவித்து இருக்கிறார் அருமை பிரகாசம், அதாவது கருணாகரன்.
ஒரு பழிவாங்கலுக்காக அவரைக் கடத்த நினைக்கிறார் குரு.நிதி அமைச்சரும் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. அதனால் அவரே தானாக குருவின் வலையில் விழுகிறார். அதன் பிறகு நடக்கும் களேபரக் கூத்துகள் தான்  130.50 நிமிடங்கள் கொண்ட படமாக உருவாகியுள்ள இந்த’ சூது கவ்வும் 2′

சூது கவ்வும் அச்சிலேயே வேறொரு கதையைத் தயாரித்து முன், பின்  இணைப்புகளுடன் இணைத்தது போல் தெரிகிறது.அப்படித்தான் இந்த இரண்டாம் பாகத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன்.முதல் பாகத்தில் குற்றச் செயல்கள் செய்யும்போதும் செய்யக்கூடியவை. செய்யக்கூடாதவை என்ற நிபந்தனைகள் ,அவருக்கென்று சில விதிகள் என்று வைத்துக் கொண்டு ஒரு புதிய கதாபாத்திரமாகத் தோன்றிய விஜய் சேதுபதியின் தாஸ் குணச்சித்திரமும் ,அந்த தாஸின்  உலகமும் அப்போது புதிதாகத் தோன்றின. அப்படி சிருஷ்டிக்கப்பட்ட அந்த உலகத்தில் பார்வையாளர்களைக் கொண்டு சென்றது.தாஸ் பாத்திரத்தின் குரு தான் இந்த மிர்ச்சி சிவா .ஆனாலும் அந்த தாஸ் பாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை இது ஏற்படுத்தவில்லை.

முதல் பாகம் டார்க் காமெடிக்கான ரகத்தில் புதியதாக வந்து ஆச்சர்ய அதிர்ச்சி ஊட்டியது. அதைக் கொடுக்க இந்தப் படம் தவறி இருக்கிறது. மிர்ச்சி சிவா  குருநாத் பாத்திரத்தில் மிரட்டவில்லை,ஜாலியான சிவாவாகவே சுற்றுகிறார் . ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.இன்விசிபில் நாயகியாக உடன் வரும் ஹரிஷாவும் பெரிதாக ஈர்க்கவில்லை.

சென்ற பாகத்தில் உடன் இருக்கும் ஆள் கடத்தல் கும்பலில் தனித்துவமான குணச்சித்திரங்கள் நல்ல நடிப்பு வெளிப்பாடாக இருந்தன அது இந்தப் பாகத்தில் காண முடியவில்லை. கல்கி ராஜா, நக்கலைட் ஸ் கவி இருவரும் பெரிதாக வெளிப்படவில்லை.பழக்கப்பட்ட பாத்திரங்களாக வரும் கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் , யோக்  , அருள் தாஸ் ஆகியோரிடம் மேலும் எதிர்பார்த்தோம் ஏமாற்றி விட்டார்கள்.

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.ஹரி எஸ்ஆர் பின்னணியில் கவரவில்லை.கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவில்  காட்சிகளின் தோற்றத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். ஆனால் கதாபாத்திரத்திங்களின் அழுத்தங்களில் தோன்றவில்லை.அதற்கு அவர் பொறுப்பல்ல.
.
மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படாத காதலி , போதை குறைந்தால் தெரியும் பாம்பு, புதிய முரட்டுத்தனமான வில்லன் போன்ற விஷயங்களை மேலும் பலப்படுத்தி இருக்கலாம், சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம்.
இரண்டாம் பாகம் எடுக்கும் போது , முதல் பாகத்தின் தலைப்பையும் படம் பற்றிய எதிர்பார்ப்பையும் எளிதாகக் கொண்டு சேர்த்து விடும் என்பது உண்மைதான். அது ஒரு சாதகமான அம்சம் தான். என்றாலும்,இரண்டாம் பாகத்தைக் கவனக் குறைவாக எடுத்து விட்டால் அதுவே அந்த படத்திற்கான பின்னடைவாக அமைந்து விடும்.

சிலகாட்சிகள் முதல் பாகத்தில் இருந்து அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் உள்ளன.அந்த அரசியல் நையாண்டி என்கிற பெயரில் அவர்கள் ஆரம்பித்த வாகை சந்திரசேகர் ,ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் தோன்றும்அந்த விஷயத்தையாவது முழுதாகச் செய்திருக்கலாம்.

முதல் பாகம் ஒரு புதிய நிறத்திலான படம் என்கிற அகமலர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் என்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பதால் அந்த திருப்தியைத் தராமல் ஏமாற்றம் அளிக்கிறது.