‘சூரகன் ‘ விமர்சனம்

அறிமுகத் தயாரிப்பாளராகி இப்படத்தை தயாரித்துள்ள வி கார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுபிக்ஷா நாயகியாக வருகிறார்.இவர்களுடன் நிழல்கள் ரவி, வின்சென்ட் அசோகன், பாண்டியராஜன், சுரேஷ் மேனன், ஜீவா ரவி,மன்சூர் அலிகான்,
ரேஷ்மா பசுபுலேட்டி,வினோதினி வைத்தியநாதன்,நடன இயக்குநர் ஸ்ரீதர்
ஆகியோர் நடித்துள்ளனர்.சதீஷ் கீதா குமார் இயக்கியுள்ளார்.

அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இப்படத்தை 3rd ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

அடுத்தடுத்து பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் .அதைச் செய்பவர்கள் யார் ? ஏன்?என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்கும் போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் காவல்துறைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை.

கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு ஒரு விபத்தில் பார்வையில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதன் பாதிப்பில் ஒரு சூழலில் இவர் எதிரிகளைச் சுடும்போது எதிர்பாராமல் குறிதவறி ஓர் அப்பாவிப் பெண்ணைச் சுட்டு விடுகிறார், இதனால் இவரது வேலை போகிறது. ஒருநாள் இவர் சாலையில் ஆபத்தான ரத்தக் காயங்களுடன் கிடக்கும் பெண்ணைப் பார்க்கிறார்.அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதற்குள் அவர் இறந்துவிடுகிறார்.

நிழல்கள் ரவியின் பேத்தியும் மர்மமான முறையில் இறந்திருப்பார். தன் பேத்தி இறப்பிற்குக் காரணமானவன் யார் என்பதைக் கார்த்திகேயனிடம் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கச் சொல்கிறார்.
இது பற்றி விசாரிக்கும் சமயத்தில் மற்றொரு பெண் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த 3 பெண்களின் இறப்பின் பின்னணி என்ன என்று கண்டுபிடிக்க கார்த்திகேயன் துடிப்பாக இறங்குகிறார்.அதற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய காவல்துறையோ மொ முட்டுக்கட்டை போடுகிறார்கள்.உண்மைக் குற்றவாளிகளை நாயகன் கார்த்திகேயன்
கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குநர் சதீஷ் கீதா குமார் இயக்கியுள்ளார்.

நாயகன் கார்த்திகேயன் ஈகை வேந்தன்  பாத்திரத்தில் துடிப்பான இளைஞராக வருகிறார் . கட்டுமஸ்தான தோற்றம் ஓகே.ஆனால் நடிப்பை முகபாவனைகளில் காட்டுவதில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.
நாயகி சுபிக்ஷா பப்பில் ஆடும் பெண்ணாக இலக்கியா என்கிற பாத்திரத்தில் வருகிறார்.அவருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. வின்சென்ட் அசோகன் ஏற்றுள்ள பாத்திரம் நம்ப முடியாத வகையில் மிகையாக உள்ளது.நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான் போன்றவர்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.

படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சூரகன் தலைப்பு ஏற்றபடி ஆளாளுக்குத்  துப்பாக்கியுடன் ஓடுகிறார்கள்.அதன் மூலம் செயற்கையான பரபரப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அழுத்தமான காட்சிகள் இல்லாததால் அந்த ஆக்சன் காட்சிகள் மனம் கவரவில்லை.
கதையோடு உள்ளார்ந்த அம்சமாக ஆக்சன் காட்சிகள் இருக்கும் போது தான் ரசிக்கப்படும்.இல்லாவிட்டால் அவை வெறும் சண்டைக் காட்சிகளாக சாதாரணமாகவே மாறிவிடும்.இப்படத்தில் கதையைப் பற்றிக் கவலைப்படாமல் லாஜிக் பற்றி லட்சியம் செய்யாமல் திரைக்கதை பற்றி மெனக்கெடாமல் ஓடி ஓடி உழைத்து சண்டை போடுகிறார்கள் .எனவே அது விழலுக்கு இறைத்த நீராகி இருக்கிறது.

குறைந்த பட்ஜெட் என்பது மட்டுமே ஒரு படத்திற்குத் தர நிர்ணயமாகிவிடாது.நல்ல கதையும் சுவாரஸ்யமான திரைக்கதையும் நடிப்புக் கலைஞர்களிடம் வாங்கப்பட்ட நடிப்பும் தான் சிறு பட்ஜெட் படங்களையும் வெற்றிப் படமாக மாற்றி உள்ளன. இதைப் புரிந்து கொள்வார்களா?இவர்கள் முயற்சியில் பட்ஜெட்டில் சிக்கனம் தெரியவில்லை படைப்பாற்றலில் தான் போதாமை தெரிகிறது.