‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்பட விமர்சனம்

விஜயராகவேந்திரா, கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே,உஷா பண்டாரி மற்றும் பலர்  நடித்துள்ளனர்.தேவி பிரசாத் ஷெட்டி எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு:ஹேமந்த் ,
இசை : நவனீத் ஷாம், படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா,கலை : பவானி ஷங்கர் அனேகல்.

தயாரிப்பு : தேவிபிரசாத் ஷெட்டி – சாத்விக் ஹெப்பார், இணைத் தயாரிப்பு: அரவிந்த் ஷெட்டி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

அந்த ஊரகப்பகுதியில் வரிசையாக தொடர் கொலைகள் மர்மமான முறையில் நடந்து வருகின்றன. மக்கள் பீதியில் இருக்கிறார்கள். தனியாகவோ காரணம் இன்றியோ மக்கள் வெளியே செல்லக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கிறது.பத்திரமாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.இந்தக் கொலையில் காவல்துறை அதிகாரியும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களையே காப்பாற்ற முடியவில்லை மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சனமும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொலையாளியைத் தேடி போலீஸ் புறப்படுகிறது.இந்தப் பரபரப்பான சூழலில் காவல் நிலையத்திற்கு செபஸ்டியன் என்ற பெயர் கொண்ட ஒருவர் ‘என் மகளைத் தேடி ஒருவர் வருகிறான்.ஏதோ செய்து விடுவான் என்று பயமாக இருக்கிறது .தயவு செய்து என் மகளைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார்.அவர் பயந்தபடியே அவர் வீட்டுக்கு அப்படி ஒருவன் வருகிறான். அவனை அவர் கொலை செய்து மறைத்து விடுகிறார்.

போலீஸ் சீதாராம் அவரது வீட்டுக்குச் செல்கிறார்.அங்கே ஏதோ தகாதது ,அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று யூகித்துக் கொள்கிறார். இது தெரிந்தவுடன் அப்போது அந்த போலீசை செபஸ்டியன் சுட்டு விடுகிறார். சூழல் பரபரப்பாகிறது.  சீதாராம்  காப்பாற்றப்படுகிறார்.இது ஒரு புறம் இருக்க, அந்தக் கொலைகள் மீண்டும் தொடர்கின்றன. அந்த கொலைகளுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி போலீஸ் ஆராய்கிறது .அதில் ஒரு துப்பு கிடைக்கிறது. அது பழைய காலக் கதையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் மீது சந்தேகம் வர ஆரம்பித்து, பிறகு இந்தத் தொடர் கொலைகளில் மையம் வேறொரு திசைக்குச் செல்கிறது .அதற்கு பின்பு எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாகிறது படம்.இதற்குப் பிறகு என்னென்ன நடக்கிறது என்பதே 119.59 நிமிடங்கள் கொண்ட’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ படத்தின் மீதிக் கதை.

குற்றவாளி -போலீஸ் துப்பறியும் கதையாக இல்லாமல் போலீஸ்காரர் குடும்பத்து கதையாகவும்  இது இருக்கிறது.

போலீஸ்காரர் சீதாராமாக விஜய ராகவேந்திரா நடித்துள்ளார்.சினிமாவில் வரும் செயற்கையான,உணர்ச்சிகளற்ற டெம்ப்ளேட் போலீஸ்காரர் போல் அல்லாமல் அவரது நடை உடை பாவனைகளில் போலீஸ் உடையில் இருக்கும் ஒரு மனிதரைக் குணசித்திரமாகக் காட்டியுள்ளது நன்று .அந்த பாத்திரத்தை உணர்ந்து விஜயராகவேந்திராவும் சிறப்பாக நடித்துள்ளார். செபஸ்டியன் பாத்திரத்தில் வரும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவும் ஒரு பொறுப்புள்ள தகப்பனைப் போல் வந்து அவரது குரூரம் காட்டும் பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.சீதாராமின் அக்காவாக வரும் உஷா பண்டாரி ஒரு நடிகை போல் தெரியாமல் அந்த பாத்திரமாகவே தெரிகிறார்.அதேபோல இந்த படத்தில் வரும் மஞ்சா, அவனது காதலி, அந்தக் காதலியின் தந்தை போன்ற பாத்திரங்கள் உயிரோட்டமாக அமைந்துள்ளன.

கொலையாளியின் தொடர் பட்டியலில் போலீஸ்காரர் சீதாராமின் அக்கா குடும்பமும் வரும்போது கதையில் மேலும் பரபரப்பு கூடுகிறது.தொடர் கொலைகள் செய்பவன் இசை கற்றுக் கொள்ளும் தன் மகளுக்கு இடையூறாக இருக்கும் தந்தையாகப் பார்த்துக் கொலை செய்கிறான்.அதற்கான அழுத்தமான காரணங்கள் இல்லாதது நெருடுகிறது.அந்தத் தொடர் கொலையாளியின் முன் கதையில், கொலையாளியாக மாறியதற்கான பின்புலமான காரணங்கள் நம்பகமாகச் சொல்லப்படவில்லை.ஆனால் படத்தின் உருவாக்கத்தில் நல்ல முதிர்ச்சி தோன்றுகிறது என்பதை மறுக்க முடியாது. காட்சிப்படுத்தலில் திகில் அனுபவத்தை ஊட்டவும் தவறவில்லை.இந்த வகையில் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டிக்கு வெற்றிதான்.

மிகவும் சிக்கலான சிறிய இடத்திலும் கூட கேமராவை வைத்துப் படமாக்கி அந்த திகில் உணர்வை கடத்துகிறது ஹேம்நாத்தின் ஒளிப்பதிவு.அது போல நவநீத் ஷாமின் இசையும் திரைக்கதையின் பயணத்திற்கு ஏற்ற உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளது. நாம் இனிமையாக நினைக்கும் வயலின், வீணை போன்ற வாத்தியங்களைக் கூட அச்சமூட்டப் பயன்படுத்தி வித்தியாசம் காட்டி இருக்கிறார்கள்.

கதை நிகழும் பின்புலக் காட்சிகள், காவல்துறை நடைமுறைகள், படமாக்கப்பட்டிருக்கும் இடங்கள் யாவுமே இயல்பாக நம்பும் வகையில் உள்ளன.

குற்ற செயல்கள் அனைத்திலும் மனிதனின் இழிவான குணங்களே என்றும் காரணமாக இருக்கும்.மனதை அரித்துக் கொண்டிருக்கும் தீய உணர்வுகள் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தால் அது ஒரு மனநோயாக மாறிவிடும். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?என்பதை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. பொறாமை, வஞ்சகம், பழி, அவதூறு போன்றவை மூலம் மனித மனம் நிறம் மாறி ஆடும் கெட்ட ஆட்டத்தைக் காட்சிகளாக்கி உள்ளார்கள்.

உருவாக்கத்தில் சிறப்பாக அமைந்த அளவிற்கு உள்ளடக்கத்திலும் சில தர்க்க மீறல்களைத் தவிர்த்து இருந்தால் இந்தப் படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் .மற்றபடி இது ஒரு திகில் அனுபவத்தைக் கொடுக்கும் படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.