பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தரகர்களைப் பற்றிய கதையாக செல்ஃபி உருவாக்கப்பட்டுள்ளது.
நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் பொறியியல் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார்.முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ஏற்கெனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கும் மோதல் உண்டாகிறது,
இறுதியில் ஜி.வி.பிரகாஷ் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.. பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப்போய் நிற்கும்போதும், கோபத்தைக் காட்டும் போதும் கைதட்டல் பெற்றிருக்கிறார்.
ரவி வர்மா கதாபாத்திரத்தில் தரகராக நடித்திருக்கிறார் கவுதம் மேனன். ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார்.
சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர் , ஸ்ரீஜா,தங்கதுரை, சாம் பால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது செல்ஃபி படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு பாராட்டுகள். தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குநர் மதி.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை , விஷ்ணு ரங்கசாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். போலியான பெற்றோர்கள் காட்சி நல்ல திருப்பமாக அமைந்திருக்கிறது.
நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் மதிமாறன்.
மொத்தத்தில் ‘செல்ஃபி’ கல்வி மாஃபியா.