அண்மையில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த’ நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பின் நானும் போலீஸ்தான் என்று வந்திருக்கும் படம். அதில் ரவுடிதான் கெத்து என்றவர். இதில் போலீஸ்தான் கெத்து என்கிறார்.
மதுரைப் பகுதியில் நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய்சேதுபதி.ஒருபக்கம் வேலையில் நேர்மை,நீதி என்றிருப்பவர்,இன்னொருபக்கம் மனைவி, இரண்டு குழந்தைகள் என்று குடும்பப் பாசத்தில் கரைபவர்.
அவ்வூரில் வேல ராமமூர்த்தி, தன் அடியாள் பரிவாரங்களுடன் அத்தனை அடாவடிகளையும் செய்பவர்.
ஒரு இனஸ்பெக்டரை ஆள்மாறாட்டமாக கொலை செய்து விடுகிறது வேல ராமமூர்த்தி கும்பல். அந்த வழக்கு விஜய்சேதுபதியின் கையில் வருகிறது. சக்திவாய்ந்த அவரை தன் திறமையால் அடித்து இழுத்து கைதுசெய்கிறார். அவர்களோ பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
அவர்களை சமாளிக்கிறாரா சரிகிறாரா என்பதே கதை.
எத்தனையோ பேர் காக்கிச் சட்டை போட்டிருந்தாலும் விஜய் சேதுபதி போடும் போது நடிப்பில் மிகை நெடி அடிக்காமல் யதார்த்த வாசனை வந்து விடுகிறது. மிகையான சித்தரிப்பு இல்லாமல் அவரது பாத்திரம் மிளிர்கிறது.இதில் அப்பா, கணவர், போலீஸ் என மூன்று முகம் காட்டியுள்ளார். சபாஷ் .அருமை மனைவியாக ரம்யா நம்பீசன் வருகிறார்.பாந்தமான பாத்திரம். காதல் மனைவி,தாய் என குடும்பத் தலைவியாகவும் வாழ்ந்திருக்கிறார்.
வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி நடிப்பில் நல்ல பெயர் சொல்லும் வில்லன். போலீஸ் ஸ்டோரி என்று உள்ளே போனால் மனைவி கொஞ்சல்,குடும்பம் என்றும் குழந்தை பாசம் எனவும் நிறைய காட்சிகள் உள்ளன. இவை படத்திற்கு ஒரு வகையில் தாய்மார்களைக் கவரும்படியான பலம். இன்னொரு வகையில் கதையின் திசை மாற்றம் என்கிற பலவீனம். ‘பண்ணையாரும் பத்மினியும்’ தந்த இயக்குநர் அருண்குமார் இதில் கமர்ஷியலாகவும் கதை கூறி வெற்றி பெற்றுள்ளார்.