‘சொர்க்கவாசல் ‘ திரைப்பட விமர்சனம்

ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் ,சானியா ஐயப்பன், ஷரப் உதீன், சந்தான பாரதி, ஹக்கீம் ஷா,பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் ஷோபா சக்தி,அந்தோணி தாசன், ரவி ராகவேந்திரா, சாமுவேல் ராபின்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சித்தார்த் விஸ்வநாத் எழுதி இயக்கியிருக்கிறார்.ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

சிறைச்சாலையின் உள்உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’.

சின்ன சாப்பாட்டுக் கடை திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு பெண், தாய் என்று எளிமையான வாழ்க்கை வாழ்கிறான் பார்த்திபன். அவன் செய்யாத குற்றத்திற்காகச் சிறை சென்றிருக்கிறான் .ஒரு சாமானியனுக்கு சிறைக்குள், நுழைந்த போது தெரிகிறது அங்கே இருப்பது நரகத்திலும் நரகம் என்று. குற்றவாளிகள், வன்முறைகள். கொடுமைகள்,வதைகள்,வாதைகள்,போதை மருந்து பிரயோகங்கள், போலீஸ் குற்றவாளிகள் கள்ள உறவுகள் என்று அங்கே இருப்பது நரகம் என்று அவனுக்குப் புரிகிறது.

அங்கே சிகாமணி என்கிற கைதி சிறையை ஆட்டி வைக்கிறான்.அவனது ஆட்களைக் கொண்டு சிறையை தனது சாம்ராஜ்யமாக மாற்றி கோலோச்சுகிறான். அவன் செய்த கொலைக்காகவே ,தான் தண்டனை அனுபவிப்பதாக நினைத்து அவனைச் சந்திக்கச் செல்கிறான் பார்த்திபன். ஆனால் சந்திக்க விடாமலேயே சிகாமணியைச் சுற்றி இருப்பவர்களால் தாக்கப்படுகிறான்.போலீஸ் உதவியால் சமையல் கூடத்தில் சமையல்காரர் பாலாஜி சக்திவேலுக்கு உதவியாளராகச் செல்கிறான். ஒரு வழியாக அதிர்ச்சியில் இருந்து மீண்டவன்,சமையலில் நல்ல பெயர் எடுக்கிறான்.

சிகாமணி போலீசுக்கு அடங்காதவனாக இருக்கிறான். அவனைப் பழி தீர்க்க போலீஸ் திட்டம் போடுகிறது. அதற்கு பார்த்திபனை ஒரு கருவியாகப்பயன்படுத்துகிறார்கள் .எப்படியாவது வெளியே  சென்று விட வேண்டும் என்று ஏங்குகிற அவனும் அதற்குச் சம்மதிக்கிறான்.போலீஸ் திட்டப்படி சிகாமணிக்கான சாப்பாட்டில் பேதி மருந்தைக் கலந்து விட வேண்டும்.அதன்படி வயிற்று வலியால் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படுகிற சிகாமணி இறந்து விடுகிறான்.சிறைக்குள் கலவரம் நடக்கிறது சிகாமணியின் வலது கை போல் இருந்த மணி பார்த்திபனைச் சந்தேகித்து,கொன்றுவிடத் துடிக்கிறான். பார்த்திபன் எங்கு ஓடினாலும் ஆட்கள் துரத்துகிறார்கள்.யாரை நம்புவது என்று தெரியவில்லை.சிறைக்குள் கலவரம்,போலீஸ் துப்பாக்கிச் சூடு என்று சிறைச்சாலையே அல்லோகலப்படுகிறது.முடிவு என்ன என்ன என்பதுதான் ‘சொர்க்கவாசல் ‘திரைப்படத்தின் மீதிக் கதை.

சிறைக்குள் நடக்கும் நடவடிக்கைகள் போலீஸ் குற்றவாளிகள் செயல்பாடுகள் பற்றி ஏராளமாக படங்கள் வந்துள்ளன. தமிழிலும் வந்துள்ளன. ஆனால் இந்தப் படம் ஒரு 3டி அனுபவம் போல் நம் கண்ணருகே இமைகளை திறக்கச் செய்து அந்தக் காட்சிகளை நம் கண் முன்னே இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறது.

சிறையில் பணியாற்றிய கருணாஸ் முன் கதையை ஒரு விசாரணை அதிகாரியிடம் சொல்வது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கருணாஸ் ஒவ்வொரு அனுபவமாகச் சொல்லச் சொல்ல காட்சிகள் விரிகின்றன. நேரடியாகக் கதை சொல்லாமல் இப்படிச் சொல்கிற அந்த யுக்தி ஆரம்பத்தில் இடையூறு போல் தோன்றினாலும் போகப்போக அதுவே படத்திற்கான தனி நிறமாக மாறிவிடுகிறது.

இப்படத்தில் இதுவரை விளையாட்டுத்தனமான பாத்திரங்களில் காமெடி ஜோக்ஸ் என்று ஒரு மலினமான பாதையில் சென்று கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி ஓர் அழுத்தமான பாத்திரத்தில் நடித்து வேறு பாதையில் பயணப்பட்டு இருக்கிறார். அந்தப்பார்த்திபன் பாத்திரத்தில் அவர் நன்றாகவே நடித்திருக்கிறார் ,என்பதை விட அவரிடம் இயக்குநர் நன்கு வேலை வாங்கி இருக்கிறார்  என்றே சொல்ல வேண்டும்.

20 கொலைகள் செய்த ஒரு கொடூர குற்றவாளி சிகாமணியாக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். இறுக்கமான முகம், இரக்கமற்ற குணம் என்று அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற நியாயத்தைச் செய்துள்ளார். இனி அவர் பிரமாதமான வில்லனாக கலக்குவார் என்று நம்பலாம்.

சிறைக்குள் ‘குக்கர்’ என்கிற பெயரில் தலைமை சமையல்காரராக பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். அவர் அந்த இருட்டறை வாசத்தில் பழகிப்போன மனமிறுகிய ஒரு பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

கருணாஸை அசட்டுத்தனமான காமெடி வேடங்களில் பார்த்திருக்கிறோம். சில படங்களில் சுமாரான பாத்திரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் அவரது சிறை போலீஸ் கட்டபொம்மன் பாத்திரம் அழுத்தமானது ,ஆழமானது. வாய்ப்பு கொடுத்தால் சோபிப்பார்கள் என்பதற்கு அவரது பாத்திரம் ஒரு சான்று.

ஆர்கே பாலாஜியின் காதலியாக சானியா ஐயப்பன் வருகிறார். அவருக்கு மிகச் சில காட்சிகள் இருந்தாலும் ,போதுமானதாகத் தோன்றுகிறது.

இதுவரை நட்டி ஒரே மாதிரி தோற்றத்தில் வந்தவர் இதில் மீசையை எடுத்துவிட்டு வேறு மாதிரியாக வருகிறார். அசிடிட்டி உடல் பிரச்சினை கொண்டவரான அவரது பாத்திரச் சித்தரிப்பின் இயல்பும் அவர் வெளிப்படுத்திய விதமும் நன்று.

சிகாமணிக்கு நெருக்கமான மணி பாத்திரத்தில் கொடூரமான வில்லனாக ஹக்கீம் ஷா வருகிறார்.
அவருக்கு இணையான கவனம் பெறும் போலீஸ் எஸ் பி சுனில் குமார் பாத்திரத்தில் ஷரப் உதீன் வருகிறார்.சிறை எஸ்பியாக அந்தப் பாத்திரமாகவே தோன்றுகிறார்.

சிறைக்குள் இருக்கும் இலங்கைத் தமிழராக வரும் எழுத்தாளர் ஷோபா சக்தி அந்தப் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.வ.ஐ.ச. ஜெயபாலன் போல இவருக்கும் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும்.

சிறையில் இருக்கும் ஆப்பிரிக்க வாலிபன் கெண்ட்ரிக் பாத்திரத்தில் வரும் சாமுவேல் அபியோலா ராபின்சனும் மனதில் பதிகிறார்.கிறிஸ்தவம் பைபிள் என்று இருக்கும் அவரது பாத்திரம் தனியே கவனம் பெறுகிறது.

ரோஜா ரோஜா என்று காதல் நினைவுகளில் மூழ்கி, போதைப்பொருள் பிரியராகத் திரியும் ரவி ராகவேந்தர், தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யத் துணியும் அரசியல்வாதி சந்தான பாரதி ,சமையல் கூடத்தில் ஆர்.ஜே பாலாஜியிடம் நட்பு பாராட்டும் திருநம்பி இப்படி நிறைய பாத்திரங்கள் படத்தில்  கவனம் பெறுகின்றன. இவர்கள் மட்டுமல்ல படத்தில் பெயர் தெரியாத பல்வேறு பாத்திரங்களும் நம் மனதில் பளீர் பதிவு ஆகின்றன.

இருட்டு அறையில் உள்ள உலகத்தை, கம்பிகளுக்குள் குற்றவாளிகளுக்குள் நிகழும் மோதல்கள், வன்முறைகள்,அதன் விளைவாக நிகழும் கயமைகளையும் கொடுமைகளையும் காவல்துறையின் இழிவான, கம்பீரமான, மூர்க்கமான அனைத்து குணங்களையும் பல்வேறு பாத்திரங்களின் மூலம் காட்சிகளாக்கி உள்ளார் இயக்குநர்.

இத்திரைப்படத்தில் சில காட்சிகளை யூகிக்க முடிந்தாலும்,அவற்றைக் காட்டியிருக்கும் விதம், வீரியமாகச் சொல்லி இருக்கும் விதம் , மனதை உறைய வைக்கும்.

இது ஒரு திரைப்படம் இதில் நடிப்புக் கலைஞர்கள் நடித்துள்ளார்கள் என்பதை விட்டு விலகிச் சென்று பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் அழுத்தமான காட்சிகளாக உருவாகியுள்ளன.நீட்டி முழக்கும் வசனங்கள், வாய்ச்சவடால்கள் இல்லாமலேயே ‘சுருக்’ வசனங்கள் மூலம் பதிகின்றன காட்சிகள்.
சிறைச்சாலையின் அமைப்பு உள் விரிவு, நடைமுறைகள், உள்ளே நிகழ்பவை போன்றவற்றை நம்பகத்தன்மையுடன் காட்ட பட குழுவினர் மிகவும் உழைத்து உள்ளார்கள்.

படத்திற்கு இயக்குநரின் கனவை மெய்யாக்கி உள்ள ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் உழைப்பு சபாஷ் போட வைக்கிறது.கிறிஸ்டோ சேவியரின் இசையில் பின்னணி இசையில் எந்தக் குறையும் இல்லாமல் பளிச்சிடுகிறது. பின்புலத்தில் இயங்கி சம்பவங்கள் நிகழ்விடத்தைக் கண்முன் காட்டியதில் கலை இயக்குநர் எஸ் ஜெயச்சந்திரன் குழுவினரின் உழைப்பு மகத்தானது.படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே படத்தை விறுவிறுப்பாக மாற்றி உள்ளார்.

மொத்தத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் விதத்தில் தான் ஒரு நல்ல இயக்குநர் என்று பளிச்சென அறிமுகம் பெறுகிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.

‘சொர்க்கவாசல்’ திரைப்படம் சிறைச்சாலை என்கிற நரகத்தைக் கண்முன் காட்டுகிற படைப்பு என்று கூறலாம்.