சினிமாவைவிட கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கிரிக்கெட் பின்னணியில் வந்திருக்கும் படம்.
சென்னை 28, ஆடாம ஜெயிச்சோமடா படங்களுக்குப் பின் ‘ஜீவா’கிரிக்கெட் பற்றி பேசுகிறது. அதன் பின்னணி கூறும் படமாக வந்துள்ளது.
மோகமாக அலையவைக்கும் கிரிக்கெட் எப்படி ஒருவனை நல்வழிப் படுத்துகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம்.
நாயகன் சிரிக்கெட் மோகம் உள்ளவன். பெற்றோரோ அவன் நல்ல பிள்ளையாக மாறி அரசுவேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இச்சூழலில் அவனுக்கு பக்கத்து வீட்டுக்கு குடிவரும் நாயகிமீது காதல். விஷயம் வெளியே தெரிய எதிர்ப்பு. விலகிப் போன நாயகன் குடியில் மூழ்கி அடிமையாகிறான். அவனை மீட்க பெற்றோரே கிரிக்கெட் விளையாட ஊக்கப் படுத்துகிறார்கள். அவன் மீண்டானா? கிரிக்கெட்டை, காதலியை சேர்ந்தானா என்பதே முடிவு .
நிஜத்தில் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளில் பட்டையை கிளப்பும் விஷ்ணு விஷால்தான் நாயகன். எனவே நன்றாக பொருந்துகிறது. விளையாடும் போது நிஜ உணர்வு நமக்கு. கனவு கலைந்து கலங்கி நிற்பதும் நண்பனை இழந்து கதறி தவிப்பதும் நடிப்புக்கு ஏற்ற கைதட்டல் இடங்கள்.
மாணவி, நாயகி, வேலைக்குப் போகும் பெண் என 3 முகங்கள் ஸ்ரீதிவ்யாவுக்கு, அட..! நண்பனாக வரும் ‘அன்னக்கொடி’ ‘லஷ்மன், கலகலப்புக்கு சூரி. விஷ்ணு அப்பாவாக வரும் மாரிமுத்து, வளர்ப்பு அப்பாவாக வரும் சார்லி, திவ்யாவின் அப்பா சிவா டி.ஆகியோரும் நினைவில் நிற்கிறார்கள்.
சுசீந்திரன் தேர்ந்த இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கிரிக்கெட் தேர்வு கமிட்டிக்குள் நடக்கும் பித்தலாட்டங்களை துணிச்சலாக தோலுரித்ததற்கு சபாஷ் போடலாம்.கிரிக்கெட் ஆட்டத்தை அள்ளும் மதியின் ஒளிப்பதிவும் இமானின் இசையும் ஏகப் பொருத்தம்.
யூகிக்க முடிகிற சில காட்சிகளை தவிர்த்து இருந்தால் ‘ஜீவா’வில் செஞ்சுரி அடித்த திருப்தி நமக்கு வந்திருக்கும்.