இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர்,சரண்யா பொன்வண்ணன் , விடிவி கணேஷ், ஆனந்தராஜ்,ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதுவரை உள்ளூர் பேய்களை வைத்து பேய்ப் படங்களை எடுத்தவர்கள் இப்போது வெள்ளைக்காரப் பேய்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
நாயகன் சதீஷ் வீடியோ கேம்கள் வடிவமைப்பதில் வல்லவராக இருக்கிறார்.அவர் ஒரு நாள் தெரியாமல் சூனியம் செய்து வைத்திருக்கும் Dream catcher-ல் இருந்து ஓர் இறகைப் பிய்த்து எடுத்துவிடுகிறார்.அதன் விளைவாக அவர் தூங்கும் போதெல்லாம் கெட்ட கனவு வந்து ஒரு பேய் உலகத்தில் பேயிடம் சிக்கிக் கொள்கிறார்.
அவரைப் போல அதே தவறு செய்து அவரது குடும்பத்தினர் நண்பர்கள் என்று சிக்கிக் கொள்கிறார்கள். அதன்படி, அவரது தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் அந்தக் கனவு உலகத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.
அதன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த ஆபத்துகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் ரீல் முழுக்க கதாநாயகன் சதீஷ் பயந்து நடுங்கும் காட்சி வருகிறது காட்சிகளை விட அந்த ஓசை பயமுறுத்துகிறது.பயப்படுவதைத் தவிர பெரிதாக அவருக்கு நடிக்க வாய்ப்பு இல்லை.அவருடைய நகைச்சுவையும் எடுபடவில்லை..பேய் ஓட்டுபவராக நாசர் வருகிறார்.அவரது தோற்றம் நன்றாக இருக்கிறது மேலும் அவரது நடிப்புக்குத் தீனி போட்டு இருக்கலாம்.
அவரது அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு படத்திற்குப் பலம். சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
விடிவி கணேஷ், நமோ நாராயணன், மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை. பேயாக நடித்த அந்த நடிகையின் நடிப்பு ஓகே.
பல நடிப்புப் பேய்கள் இருந்தும் பயன்படுத்தாத நிலை தெரிகிறது. இயக்குநரான செல்வின் ராஜ் சேவியர் எடுத்துக்கொண்ட கதைக்களம் வழக்கமான பேய் கதைகளை விட சற்று மாறுபட்டதாகவே இருந்தது.
முதல் பாதி பயமுறுத்துகிறது. விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவு தான்.ஆனாலும் அந்த ஆங்கிலேய காதலர்களின் கதை எபிசோடு நன்றாக உள்ளது.
பேய் எப்போது வரும் என்று நம்மால் யூகிக்க முடிகிற காட்சிகள் படத்தின் பலவீனம்.
கதையின் நிறைய நகைச்சுவை வாய்ப்பு இருந்தாலும அதைச் சரியாக செய்யாமல் கோட்டை விட்டுள்ளார்கள்.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. திகில் படத்துக்கு தேவையான ஒலி அமைப்பும் நன்றாக உள்ளது.
பெரிய படத்திற்கான தொழில்நுட்ப வேலைகளைத் தயாரிப்பு நிறுவனம் சரியாக செய்துள்ளது .இருந்தாலும் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி இருந்தால் படத்தின் தரம் கூட இருக்கும். கான்ஜுரிங் கண்ணப்பனிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்.லாஜிக் மறந்து உட்கார்ந்து குழந்தை மனதோடு பார்த்தால் இந்தப் படத்தை ரசிக்கலாம்.