காணாமல் போகும் அதிர்ஷ்ட நாய் அதைத்தேடும் நான்கு பேர் பற்றிய கதைதான் ’ஜூலியும் 4 பேரும்’.
நாய்களில் அதிர்ஷ்ட நாய்களும் உண்டு, அந்த நாய்களை வைத்திருப்பவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ,செல்வம் குவியும் என்ற நம்பிக்கையோடு, நாய் கடத்தல் குறித்தும் சொல்லியிருக்கும் படம் .
காணாமல் போன வாஸ்து மீன் ,அதற்கான தேடுதல்கள் , துரத்தல்கள்,தாதாக்கள், பரபரப்பு என்கிற பார்முலாவில் அண்மையில் வந்த படம் ‘கட்டப்பாவ காணோம்.’ அதே ரகக் கதை .மீனுக்குப்பதிலாக நாய் அதுதான் ’ஜூலியும் 4 பேரும்’.
சென்னையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவர் தனது தொழில் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிர்ஷ்ட நாய் ஒன்றை, நாய் கடத்தல் கும்பலிடம் இருந்து விலைக்கு வாங்குகிறார். சென்னைக்கு வரும் அந்த நாயை தொழிலதிபரிடம் இருந்து மீண்டும் கடத்தி வேறு ஒருவருக்கு விற்க நாய் கடத்தல் கும்பல் திட்டமிடுகிறது. அதே நேரம், வேலை தேடி சென்னை வரும் மூன்று இளைஞர்கள் தங்களது பணத்தை இழந்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தஞ்சமடைகிறார்கள். இந்தா நான்கு பேருக்கும் அந்த லக்கிடாக் குறித்து தகவல்கள் தெரிய வர, நாயை கடத்தி தொழிலதிபரிடம் பணம் பறிக்கத் திட்டமிடுகிறார்கள்.
ஒரு வழியாக இந்த நான்கு பேரும் நாயை கடத்திவிட, நாயோ இவர்களிடம் இருந்து தப்பிக்கிறது. இந்த நிலையில், ஜூலி என்ற பெண் காணாமல் போக, அந்த பெண்ணை தேடுபவர்களிடம், நாயை தேடுபவர்கள் சிக்க, ஒரே குழப்பமான சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தின் கதை.
அதிர்ஷ்ட நாய் என்பது பொய்யான நம்பிக்கையாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டு இயக்குநர் சதீஷ் ஆர்.வி.திரைக்கதை அமைத்த விதம் நன்றாக இருக்கிறது.
ஜூலி என்ற அந்த அதிர்ஷ்ட நாய், நான்கு பேரிடம் கிடைத்ததும் அவர்களுக்கு கோடி கணக்கில் பணம் கிடைப்பது. அதே நாய் போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் இருக்கும் போது, அந்த அதிகாரிக்கு புரமோஷன் கிடைப்பது, அந்த நாயால் நாயகிக்கு வெற்றி கிடைப்பது, என்று அந்தநாய் யாரிடம் இருக்கிறதோ, அவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லியிருக்கும் காட்சிகள் கலகலப்பு..
படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான அமுதவன், ஜார்ஜ் விஜய், சதீஷ் ஆர்.வி, யோகானந்த், நாயகி அலயா மானஷா ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், அவர்களது காமெடிக் காட்சிகள் ஒன்று கூட எடுபடவில்லை. அதிலும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காமெடி அப்பப்பா!.
இது ஆபாசக்கலப்பில்லாத படம். சிறுவர்களைக் குறிவைத்து எடுத்துள்ளார்கள்.இன்னும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம்.