தனது ’வெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய
வசந்தபாலன், இப்போது ‘ஜெயில்’ படத்தில் அவரைக் கதாநாயகனாக்கி இருக்கிறார்.
நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்த சென்னையின் பூர்வீகக் குடிகளை, அவர்கள் காலகாலமாக வசித்திருந்த வாழ்விடங்களில் இருந்து அகற்றிச் சென்னைக்கு 30 கி.மீ தள்ளி மறு குடியமர்வு செய்திருப்பதைப்பற்றிச்சொல்வதாக ஆரம்பிக்கிறது படம். கண்ணகி நகர் என்பதை காவேரி நகர் என்று பெயர் மாற்றி, அங்கு வாழும் கர்ணன், ராக்கி, கலை எனும் மூன்று இளைஞர்களின் வாழ்வு இடப்பெயர்வால் எப்படிச் சிதைவுறுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
இடம் பெயராதிருந்தால் இந்த இளைஞர்களின் வாழ்வு எதிர்த் திசையில் பயணித்திருக்காது என்பதை இன்னும் வலிமையான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கலாம்.
காவேரி நகர் பகுதி மக்களைக் குற்றப் பின்னணியுடன் நகர்ப்புற மக்கள் அச்சத்துடன் நோக்குவதற்கு அரசியல் கட்சியினரும், போலீஸாரும் எவ்வாறு உடந்தையாக இருக்கின்றனர் என்பதைச் சில காட்சிகளில் காட்டுகிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரவிமரியாவின் முருகப்பெருமாள் பாத்திர அமைப்பின் மூலம் போலீஸார் இப்பகுதி மக்களை எப்படிக் கையாள்கின்றனர் என்பதை உதாரணப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
காவேரி நகரில் கஞ்சா விற்கும் இரண்டு பிரிவினரிடையே தொடர்ந்து இருக்கும் தொழில்போட்டி, மோதல்கள்,கொலைச் சம்பவங்களை அடுக்கடுக்காகக் காட்சிப்படுத்தியுள்ளனர். தனது சுயநலத்துக்காக ராக்கியை பயன்படுத்துகிற முருகப்பெருமாள், பாண்டிச்சேரியில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கைப்பற்றி வரச் சொல்ல,அதைக் கைப்பற்றி வந்து மறைத்து வைத்த ராக்கி, முருகப்பெருமாளை ஏமாற்ற முயல, அவர் துரத்துகிறார். ராக்கியுடன் இணைந்து கர்ணனும் கலையும் இணைந்து தப்பிக்கும்போது ராக்கி கொலை செய்யப்படுகிறான். நண்பனின் கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியை கர்ணன் பழிவாங்க நினைக்கிறான்.எப்படிப்பழி வாங்குகிறான்? முடிவு என்ன? என்பதுதான் மீதிக் கதை.
தனக்குக் கொடுத்த பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் கர்ணன் எனும் முரட்டு இளைஞனாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். வாய்மொழியிலும் உடல் மொழியிலும் அப்படியே அக்மார்க் சென்னைப் பையனாக
வருகிறார். கதாநாயகியாக நடித்துள்ள அபர்ணதி சரியான தேர்வு. அழகான ராட்சசியாக மிளிர்கிறார். தள்ளு வண்டி சாப்பாட்டுக்கடை நடத்துகிறார்.போலீஸிடம் இருந்து தப்பிக்க அனுமதியின்றித் தன் வீட்டுக்குள் நுழையும் ஜீவி பிரகாஷை அடித்துப் புரட்டி எடுக்கும்போதும் ஜிவி பிரகாஷிடம் முரட்டுத்தனத்தை மீறி உள்ளே உள்ள ஈர அன்பைப் புரிந்து கொண்டு காதல் கசிகிற போதும் என இவருக்கு நடிப்பை வெளிப்படுத்த பல வாய்ப்புகள்.
ராக்கியாக இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராமும்,கலையாக ‘பசங்க’ பாண்டியும் சென்னையின் அசல் லோக்கல் பையன்களாக வந்து தன் பங்குக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குநர் ரவிமரியா நடிப்பில் ஆர்ப்பாட்ட வசனங்கள் பேசாமலேயே அழுத்தமாகப் பதிகிறார்.
ஜி.வி.பிரகாஷுக்கு அம்மாவாக வரும் ராதிகா, சமூக ஆர்வலராக வரும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கதைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் ‘காத்தோடு காத்தானேன்’ மற்றும் ’டுமாங்கோலி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மற்ற பாடல்களில் மனம் ஒட்டவில்லை. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் இணைந்து எழுதிய வசனங்களில் மறுகுடியமர்வு மக்களின் பேச்சு வாசனையடிக்கிறது. கணேஷ் சந்திராவின் கேமரா காவேரி நகரின் சந்துபொந்துகளைக்கூட அள்ளிவந்து நம் கண்முன் நிறுத்துகிறது.குறிப்பாகத் துரத்தல் காட்சிகள் பார்ப்பவர்களுக்கே மூச்சிரைப்பு வரும் அளவுக்கு முழுஇயல்பாக இருக்கின்றன.வியர்வை வழிய
கேமரா சுமந்து கொண்டு ஓடி ஓடி உழைத்த கரங்களுக்குப் பாராட்டுக்கள்.
பின்புலக் காட்சிகளில் எந்தக் குறையும் இல்லாமல் அச்சு அசலாகக் காவேரி நகரை உணர வைக்கிறது.
சண்டைக்காட்சிகளை கலப்படமில்லாத யதார்த்தத்துடன் அமைத்திருக்கும் அன்பறிவ் மாஸ்டர்களைப்பாராட்டலாம்.
திரைக்கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது குறை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் என்பதால் பரவலாகப் பழமை தட்டுகிறது.
சென்னையின் பூர்வக்குடிகள்பிரச்சினையைச் சித்தரிக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளதாகப் படம் பற்றிப் பேசப்பட்டது. ஆனால் தனிநபர் சார்ந்த மோதல்களுக்குள் கதை சிக்கிக் கொண்டதால் கட்டாய இடப்பெயர்வு பற்றி அழுத்தமாகச் சொல்லப்படவில்லை என்கிற குறை தெரிகிறது.
பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்த உணர்வைத் தருகின்றன. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. இதில் வசந்தபாலனின் முத்திரை ஆங்காங்கே தெரிந்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை.
கடைசியில் என்ன ஆயிற்று வசந்த பாலனுக்கு ?என்ற கேள்வியே மிஞ்சுகிறது .மொத்தத்தில் ’ஜெயில் ’ ரசிகனைச் சிறைப்படுத்தவில்லை.