’ஜோரா கைய தட்டுங்க’ திரைப்பட விமர்சனம்

யோகி பாபு ,சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, ,கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி ,அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ் , மேனகா ,நைரா நிஹார் நடித்துள்ளனர்.வினிஷ் மில்லேனியம் இயக்கி உள்ளார்.எஸ் என் அருணகிரி -ஜித்தின் கே ரோஷன் இசையமைத்துள்ளார்.வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார்.

தனது தந்தையைப் பின்பற்றி யோகி பாபுவும் மேஜிக் கலைஞர் ஆக இருக்கிறார்.தந்தை மறைவிற்குப் பிறகு அவர் அந்தக் கலையில் முத்திரை பதிக்க நினைக்கிறார்.ஆனால் அவரை மக்கள் விமர்சிக்கிறார்கள்.ஒரு நாசக்கார கும்பலால் அவரது கை வெட்டப்பட்டு தொடர்ந்து மேஜிக் செய்ய முடியாத நிலைக்குச் செல்கிறார்.
யோகி பாபுவின் கையை வெட்டிய ரவுடி கும்பல், அவருக்கு நெருக்கமான சிறுமியைக் கொலை செய்து விடுகிறது.  இதனால் தனது மேஜிக்கை வைத்து ரவுடி கும்பலை பழிவாங்க நினைக்கிற யோகி பாபு, அவர்களை எப்படிப் பழி தீர்க்கிறார், அதற்கு வரும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பரபரப்பில்லாமல் சொல்வதே ‘ஜோரா கைய தட்டுங்க’.

யோகி பாபுவின் சில நாட்கள் கால்ஷீட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவசர அவசரமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
யோகி பாபு தோற்றத்தின் மூலம் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தாலும் அவர் நடிப்பு பரிமளிக்கும் வாய்ப்புகள் படத்தில் இல்லை.எனவே பெரிதும் ஏமாற்றம் தருகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவுக்குப் பெரிதாக படத்தில் இடமில்லை.எப்போதும் சிரித்துக் கொண்டே வந்து போகிறார்.

போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா,  நைரா நிஹார் எனத் துணைப் பாத்திரங்களில் வருபவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் பணியில் குறை சொல்ல ஒன்றுமில்லை.இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் சுமார் ரகம்.

வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ்.கே,  பழிவாங்கும் கதையை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், பரபரப்பு இல்லாமல் கதை செல்வது படத்திற்குப் பலவீனம்.

யோகி பாபுவை காமெடியனாக மட்டுமே காட்டாமல் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் வினீஷ் மில்லினியம், திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்திருந்தாலும், 20 கிலோ மீட்டர் வேகத்து கார் போல மித வேகத்தில் செல்கிறது.தொடர் கொலைகள் செய்யும் யோகி பாபு, தனது மேஜிக் மூலம் அதில் இருந்து தப்பிப்பது போன்றவை ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில், ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்துக்கு சோர்வா கை தட்டலாம்.