நாயகன் ரியோ ராஜும், நாயகி மாளவிகா மானோஜும் ஒரே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் . ரியோவுக்கு கேரள பெண்ணான மாளவிகாவை கண்டதும் காதல் ஏற்படுகிறது. இருவரது மனங்களும் ஒன்றிணைகின்றன. ஆம் பாஸ்பரஸ் பற்றிக்கொள்கிறது. பரஸ்பரம் காதலிக்கிறார்கள். வழக்கம் போல நாயகியின் குடும்ப எதிர்ப்பு வருகிறது.இதனால் காதலர்கள் பிரிய நேர்கிறது.தன் காதல் வாழ்க்கை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைகிற ரியோ தன்னையே அழித்துக் கொள்ள நினைக்கிறார்.அவரை ஆற்றுப்படுத்தி பெற்றோரும் நண்பர்களும் ஆறுதல் சொல்கின்றனர், நம்பிக்கை ஊட்டுகின்றனர்.அவர்கள் கொடுத்த நம்பிக்கை மொழிகளால் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். எனவே காதல் போயின் சாதல் என்பதில் இருந்து காதல் போயின் இன்னொரு காதல் என்று மாறுகிறது வாழ்க்கை.
எனவே மற்றொரு நாயகியான பவ்யா ட்ரிகாவை அவருக்கு மணம் செய்து வைக்கிறார்கள்.ஆனால் பவ்யாவிற்கு இதில் விருப்பம் இல்லாமல் ஒவ்வாமையுடன் இருக்கிறார்; கணவரைக் கண்டு எரிந்து விழுகிறார்.பவ்யாவின் உளவியல் சிக்கல் என்ன?ஒரு தேடுதலில் இறங்கும் ரியோ அதை அறிந்து கொள்கிறார்.அதற்குத் தீர்வு காண முயல்கிறார்.முடிவு என்ன என்பதை ஜோ படத்தின் கதை.
படம் அடிப்படையில் ரியோ ராஜ் நடித்த ஜோ என்ற டைட்டில் கதாபாத்திரத்தைப் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது அவரது வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியைச் சுற்றி வருகிறது, இரண்டாவது அவர் இறுதியில் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பது பற்றியது.
துடி துடிப்புள்ள காதலனாகவும் காதல் தோல்வியில் தவிக்கும் வாலிபன் ஆகவும் இரு வேறுதோற்றங்களில் இரு வேறு இயல்பு காட்டி ஈர்க்கிறார் ரியோராஜ்.
நாயகியாக வரும் அறிமுக நடிகை மாளவிகா மனோஜ்,எளிமையான தோற்றத்தில் ல் வந்து கவர்ந்து கவனம் பெறுகிறார்.காதலியாக வரும் போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு ரசிகர்களைக் கவரும்.
இன்னொரு நாயகியாக நடித்துள்ள பவ்யா ட்ரிகா,தன் பங்கைச் சிறப்பாக அளித்துள்ளார்.அவருக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் தருணங்கள் வாய்த்துள்ளன. அதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சார்லி,மற்றும் ரியோவின் சகாக்கள் அன்புதாசன், ஏகன், விஜே ராகேஷ், ஜெயகுமார் என பிற பாத்திரங்களில் வருபவர்களும் மனதில் ப்ளூ டிக் செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி.விக்னேஷ் இயக்குநரின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் சித்து குமாரின் இசை படத்தின் இன்னொரு பக்க பலம்.காதல் கதை என்றால் இசையமைப்பாளர்களுக்கு நல்ல இசை மனநிலை இசைவு வந்துவிடும் .அது இதில் செயல் புரிந்திருக்கிறது.
காதலின் ஆழத்தை புனிதத்தை சொல்வதாக காட்சிகள் வைத்து இருந்தால் படத்திற்கு ஒரு கிளாசிக் தோற்றம் வந்திருக்கும். ஆனால் அடுத்த காதல் என்று வைத்து கமர்சியல் ஆக்கி விடுவது ஏமாற்றமாக உள்ளது.
காதல் போல ஒன்று இல்லை தான் ஆனால் காதலே வாழ்க்கையின் எல்லை அல்ல,தேர்வு தோல்வி போல காதல் தோல்வியும் கடந்து போக வேண்டிய ஒன்று என்ற கருத்தைச் சொல்லி இருப்பதால் இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ்ஸைப் பாராட்டலாம்.
விரைவில் விரக்தி வசப்படும் இக்கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க பரிந்துரைக்கலாம்