சித்தார்த், திவ்யான்ஷா , யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், முனீஷ்காந்த் ராம்தாஸ் நடித்துள்ளனர். கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
பணமே உலக இன்பங்களுக்கெல்லாம் காரணம், பணமே அனைத்திற்கும் தீர்வு என்று பணத்தைத் தேடி அலையும் கதாநாயகனுக்கும் பணமே உலக துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பணத்தைவிட்டு விலகித் துறக்க நினைக்கும் கதாநாயகிக்கும் இடையில் நிகழும் முரண் விளையாட்டை வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘டக்கர்’.
எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வருகிறார் குணசேகரன் என்கிற சித்தார்த்.வந்த இடத்தில் ஓட்டல் ,ஜிம் என்று பல்வேறு வேலைகளைப் பார்க்கிறார். எங்கேயும் அவரால் நிலைக்க முடியவில்லை.ஒரு கட்டத்தில் பென்ஸ் கார் டிரைவராகப் போகிறார்.சென்னை நிழல் உலகத்தில் நுழைகிறார்.சந்தர்ப்பவசத்தால் தான் ஒட்டி செல்லும் காரில் கடத்தப்பட்ட கதாநாயகியைச் சந்திக்கிறார். இருவரையும் வில்லன்கள் துரத்துகிறார்கள். முடிவு என்ன என்பதுதான் கதை.
குடும்பத்தின் வறுமையால் பணத்தைத் துரத்தும் ஒரு துடிப்பான இளைஞராகவும் காதலில் விழும் சாக்லேட் பாய் நாயகனாகவும் அதிரடி ஆக்சன் காட்டும் இளைஞனாகவும் வாழ்வில் தோல்வி விரக்தியில் தற்கொலை முடிவு எடுக்கும் கோழையாகவும் வருகிறார்.ஆசை கோபம் அழுகை ஆவேசம் எனப் பல வகைகளில் தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியு ள்ளார் . அவரது பாத்திரத்தை மேலும் செழுமை செய்திருந்தால் படம் மேலும் வலிமையாக மாறி இருக்கும்.
நாயகியாக வரும் திவ்யான்ஷா ஏற்றுள்ள தனது பாத்திரத்தின் மூலம் முரட்டுத்தனமாகவும் அது சார்ந்த உடல் மொழியாலும் புதிதாகத் தெரிகிறார். செக்ஸ் பற்றிய கருத்து கூறுவது , கஞ்சா அடிப்பது என்று மிரட்டுகிறார். ஆனால் அப்படிப்பப்பட்டவர்,பிறகு சாதாரண கதாநாயகியாக மாறுவது குணச்சித்திர மீறல்.
யோகி பாபு ,விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் என்ற மூன்று பேரும் சிரிக்க வைக்க முயன்று சில இடங்களில் வெற்றி பெற்று பல இடங்களில் தடுக்கி விழுகிறார்கள்.உருவக்கேலியை நகைச்சுவை என்கிற கலாச்சாரம் தமிழ் சினிமாவில் இருந்து எப்போது மறையும்?
பென்ஸ் காரை வாடகைக்கு விட்டு சித்தார்த்தைச் சித்திரவதை செய்யும் வில்லனாக வரும் சீனாக்காரர் பேசும் பேச்சும் செய்யும் செயல்களும் அதிர வைக்கின்றன.ஆள் கடத்தலை அநாயாசமாகச் செய்யும் அபிமன்யு சிங் அச்சமூட்டுகிறார்.
படம் தாமதமாக வெளியாவதாலோ என்னவோ சில காட்சிகள் ஏற்கெனவே பார்த்த உணர்வைத் தருகின்றன.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் நிரா நிரா பாடல் மட்டும் கவர்கிறது.பின்னணி இசையில் திருப்தி தருகிறார். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ,மற்றும் எடிட்டர் ஜி. ஏ .கெளதம் இருவரும் தங்கள் பணியைக் குறை வைக்காமல் செய்துள்ளார்கள்.
முதல் பாதி சித்தார்த்தின் வாழ்க்கை போராட்டத்தைச் சொன்னாலும் இரண்டாம் பாதியை ’ரோடு ட்ராவல்’ திரைப் படமாக மாற்றி இருக்கலாம்.அதற்கான சாத்தியம் கதையில் உள்ளது. ஆனால் இயக்குநர் தவறிவிட்டார்.இருந்தாலும் சண்டைக் காட்சிகளிலும் துரத்தல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்கள்.
மொத்தத்தில் ஒரு வணிகப்படத்தின் அனைத்து அம்சங்களும் நிறைந்த சித்தார்த்தின் ஆக்சன் அவதாரம்தான் இந்த ‘டக்கர்’